ஆட்சி அமைக்கப் போவது யார்? இங்கிலாந்தில் இன்று பொதுத்தேர்தல்: சுனக் – ஸ்டார்மர் இடையே கடும் போட்டி

லண்டன்: இங்கிலாந்தில் அடுத்து ஆட்சி அமைக்கப் போவது யார் என்பதை தீர்மானிக்கக் கூடிய பொதுத் தேர்தல் இன்று நடக்க உள்ளது. இதில், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் வேட்பாளர் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் லேபர் கட்சியின் ஸ்டார்மர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 650 தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல் இன்று நடக்கிறது. இதில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் இந்திய வம்சாவளியான பிரதமர் ரிஷி சுனக்கும், பிரதான எதிர்க்கட்சியான லேபர் கட்சி சார்பில் கெய்ர் ஸ்டார்மரும் போட்டியிடுகின்றனர். கடந்த 6 வார கால பிரசார பயணத்தில் சுனக், ஸ்டார்மர் இருவரும் சூறாவளி பிரசாரம் செய்துள்ளனர். தேர்தலில் 326 தொகுதிகளை கைப்பற்றும் கட்சி ஆட்சி அமைக்கும்.

கடந்த 14 ஆண்டுகளில் கன்சர்வேட்டிவ் கட்சி மட்டுமே தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. கடந்த 2010ல் டேவிட் கேமரூன் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு கன்சர்வேட்டிவ் கட்சி தொடர்ச்சியாக 14 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளது. கடைசியாக கடந்த 2019ல் நடந்த பொதுத் தேர்தலில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற்றார்.

அப்போது கன்சர்வேட்டிவ் கட்சி 365 இடங்களையும், லேபர் கட்சி 202 இடங்களையும் கைப்பற்றின. கொரோனா ஊடரங்கின் போது தனிப்பட்ட பார்ட்டிகளில் பங்கேற்றதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து போரிஸ் ஜான்சன் 2022ல் பதவி விலக அடுத்து பதவியேற்ற லிஸ் டிராஸ் வெறும் 50 நாட்கள் மட்டுமே தாக்கு பிடித்தார். பின்னர் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் பிரதமரான ரிஷி சுனக் 20 மாதங்கள் பிரதமராக பதவி வகித்துள்ளார்.

இந்த நிலையில் ரிஷி சுனக் தலைமையில் கன்சர்வேட்டிவ் கட்சி இம்முறை தேர்தலை சந்திக்கிறது. ஐரோப்பிய யூனியனில் இருந்து கடந்த 2020ல் பிரிந்த பிறகு இங்கிலாந்தில் நடக்கும் முதல் பொதுத் தேர்தல் இது. இதில் மக்கள் மாற்றத்தை எதிர்பார்ப்பதாக பல்வேறு கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதனால் இம்முறை சுனக், ஸ்டார்மர் இடையே கடும் போட்டி நிலவும் என கூறப்படுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி இரவு 10 மணி வரை நடக்கும். வாக்குப்பதிவு முடிந்ததும், உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.

The post ஆட்சி அமைக்கப் போவது யார்? இங்கிலாந்தில் இன்று பொதுத்தேர்தல்: சுனக் – ஸ்டார்மர் இடையே கடும் போட்டி appeared first on Dinakaran.

Related Stories: