இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளி பிரதமர் ரிஷி சுனக் கட்சி படுதோல்வி: 14 ஆண்டுகளுக்கு பின் தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்தது, கியர் ஸ்டார்மர் புதிய பிரதமர் ஆனார்

லண்டன்: இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளியான பிரதமர் ரிஷி சுனக்கின் ஆளுங்கட்சி தோல்வியடைந்தது. 14 ஆண்டுகளுக்கு பின் எதிர்கட்சியான தொழிலாளர் கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்தது. பிரதமராக கியர் ஸ்டார்மர் பதவி ஏற்றார். இங்கிலாந்தில் கடந்த 14 ஆண்டுகளாக கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரதமராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தல் நேற்றுமுன்தினம் நடந்தது.

மொத்தமுள்ள 650 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் பிரதமர் ரிஷிசுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சியும், எதிர்க்கட்சித் தலைவர் கியர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சியும், லிபரல் டெமாக்ரடிக் கட்சியும் மோதின. இதனால் மும்முனை போட்டி ஏற்பட்டது. சுமார் 4.6 கோடி பேர் வாக்களித்தனர். வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடைபெற்றது. வாக்குப் பதிவு நிறைவடைந்த பின்னர், உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

மொத்தமுள்ள 650 இடங்களில் ஆட்சி அமைக்க 326 இடங்கள் தேவை. நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி அமோக வெற்றி பெற்றது. இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷிசுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. கியர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி 412 இடங்களையும், பிரதமர் ரிஷிசுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி 121 இடங்களையும், லிபரல் டெமாக்ரடிக் கட்சி 71 இடங்களையும் பிடித்தது. 2018ல் பதிவு செய்யப்பட்ட பிரெக்சிட் கட்சியான சீர்திருத்தக் கட்சிக்கு 4 எம்.பி.க்கள் கிடைத்துள்ளனர்.

அந்த கட்சியின் தலைவர் நைஜல் பரேஜ் முதல் முறையாக எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கிளாக்டன் தொகுதியில் கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளரைவிட 8,000 வாக்குகள் அதிகம் பெற்று வென்றுள்ளார் பரேஜ். இங்கிலாந்தில் கடந்த 14 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வந்த கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சி இந்த தோல்வியால் முடிவுக்கு வந்தது. பிரிட்டன் ஆட்சியை தொழிலாளர் கட்சி பிடித்துள்ளது. அந்த கட்சியின் சார்பில் அதன் தலைவர் கியர் ஸ்டார்மர் பிரதமராக பதவி ஏற்றார். இதற்கு முன்பு கடந்த 2005ம் ஆண்டு நடந்த தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது. அப்போது கார்டன் பிரவுன் பிரதமராக இருந்தார்.

அதன்பின் அக்கட்சி 14 ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் ஆட்சியை பிடித்துள்ளது. இதற்கிடையே கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வி அடைந்ததால்,மன்னர் சார்லசை சந்தித்த பின்னர் பிரதமர் பதவியில் இருந்து ரிஷிசுனக் விலகினார். மேலும் கட்சி தலைவர் பதவியையும் ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்தார். அதோடு பிரிட்டன் பிரதமர் வசிக்கும் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்தும் அவர் உடனடியாக வெளியேறினார். இதை தொடர்ந்து கியர் ஸ்டார்மர் புதிய பிரதமராக பதவி ஏற்பதற்கான ஏற்பாடுகள் தொடங்கின. தன்னை வந்து சந்திக்கும்படி கியர் ஸ்டார்மருக்கு மன்னர் சார்லஸ் அழைப்பு விடுத்தார்.

இதை தொடர்ந்து பிரிட்டன் பாரம்பரிய வழக்கப்படி பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் சார்லசை சந்தித்தார். அவருடன் மனைவி விக்டோரியாவும் அரண்மனைக்கு சென்றார். அதை தொடர்ந்து இங்கிலாந்தின் 58வது பிரதமராக கியர் ஸ்டார்மர் அறிவிக்கப்பட்டார். உடனே அவர் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு சென்று பதவி ஏற்றுக்கொண்டார். பிரதமர் இல்லத்திற்கு தொழிலாளர் கட்சியை சேர்ந்த ஏஞ்சலா ரெய்னர் சென்றார்.

தொடர்ந்து அமைச்சர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்புகளை பிரதமர் கியர் ஸ்டார்மர் வெளியிட்டார். துணை பிரதமராக ஏஞ்சலா ரெய்னரை நியமித்த அவர், ஒவ்வொரு துறைக்கும் அமைச்சர்களை நியமித்தார். இதை தொடர்ந்து அனைவரும் பிரதமர் இல்லத்தில் அவரை சந்தித்தனர். நிதியமைச்சராக ரேச்சல் ரீவ்ஸ், வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் லாமி, உள்துறை அமைச்சராக யவட் கூப்பர், பாதுகாப்புத்துறை அமைச்சராக ஜான் ஹீலே நியமிக்கப்பட்டார்.

* தோல்விக்காக மன்னிப்பு கேட்டார் ரிஷிசுனக்
கன்சர்வேடிவ் கட்சி தோல்வி அடைந்ததால் 20 மாதங்களாக பிரதமர் பதவியில் இருந்த ரிஷிசுனக், லண்டனில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான 10, டவுனிங் ஸ்டீரிட் இல்லத்தில்இருந்து வெளியேறும் முன்பு நன்றி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: இந்த ேதர்தல் தோல்விக்காக அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த வேலையை நான் முழுமையாக செய்தேன். ஆனால் இங்கிலாந்து மக்கள் அரசாங்கம் மாற வேண்டும் என்பதற்கான தெளிவான சமிக்ஞையை அனுப்பியுள்ளீர்கள்.

உங்களுடையது மட்டுமே முக்கியமான தீர்ப்பு. உங்கள் கோபம், ஏமாற்றம் ஆகியவற்றைக் கேட்டறிந்தேன், இந்த இழப்புக்கு நான் பொறுப்பேற்கிறேன். இந்த முடிவைத் தொடர்ந்து, கட்சித் தலைவர் பதவியில் இருந்து நான் உடனடியாக விலகுவேன். கியர் ஸ்டார்மர் எனது அரசியல் எதிரியாக இருந்தபோதிலும்,கியர் ஸ்டார்மர் மற்றும் அவரது குடும்பத்தினரை வாழ்த்துகிறேன். இந்தப் பிரச்சாரத்தில் எங்களுடைய கருத்து வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், அவர் ஒரு கண்ணியமான, பொது உணர்வுள்ள மனிதர்.

பிரிட்டனைப் பற்றிய மிகவும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், எனது தாத்தா பாட்டி கொஞ்சம் கொஞ்சமாக இங்கு வந்த இரண்டு தலைமுறைகளுக்குப் பிறகு நான் பிரதமராக முடியும் என்பதையும், எனது இரண்டு இளம் மகள்கள் தீபாவளி மெழுகுவர்த்தியை டவுனிங் தெருவின்(இங்கிலாந்து பிரதமர் இல்லம்) படிக்கட்டுகளில் ஏற்றி வைப்பதையும் நான் பார்க்க முடிந்தது. நாம் யார் என்ற எண்ணத்தில் உண்மையாக இருக்க வேண்டும். பல கடினமான நாட்களின் முடிவில் இது ஒரு கடினமான நாள்.

இது உலகின் மிகச் சிறந்த நாடு, எங்களின் அனைத்து சாதனைகளுக்கும், நமது பலத்திற்கும், மகத்துவத்திற்கும் உண்மையான ஆதாரமான பிரிட்டன் மக்களுக்கு முழு நன்றி. இந்த கடினமான இரவில், உங்கள் தொடர்ச்சியான ஆதரவிற்காக ரிச்மண்ட் மற்றும் நார்த்தலர்டன் தொகுதி மக்களுக்கு(ரிஷிசுனக் வென்ற தொகுதி) எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கு சேவை செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

* ஆம், நாம் சாதித்து விட்டோம்… கியர் ஸ்டார்மர் வெற்றி உரை
தேர்தல் வெற்றியை அடுத்து லண்டனில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் வெற்றி உரையாற்றிய கியர் ஸ்டார்மர், ‘தேர்தல் வெற்றியின் மூலம் 14 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு அதன் எதிர்காலத்தைப் பெறுகிறது. மக்கள் மத்தியில் ஒரு நிம்மதி ஏற்பட்டிருக்கிறது. இந்த மாற்றத்தை நாம்தான் செய்தோம். இதற்காக நீங்கள் பிரசாரம் செய்தீர்கள், போராடினீர்கள், வாக்களித்தீர்கள். இப்போது மாற்றம் வந்துவிட்டது. நீங்கள் நாட்டை மாற்றிவிட்டீர்கள். நேர்மையாகச் சொல்வதானால் இது மிக நல்ல விஷயம்.

உங்களின் கடின உழைப்புக்கு நன்றி. கட்சியை மறுசீரமைக்கவும், அதன் மீது புதிய தோற்றத்தை ஏற்படுத்தவும் ஏறக்குறைய ஐந்து வருடங்களாக நாம் பாடுபட்டுள்ளோம். இந்த வெற்றி நாம் ரசிப்பதற்கானது. அதேநேரத்தில் நம் முன்னால் சவால்கள் காத்திருக்கின்றன. நாட்டை புதுப்பிக்கும் பணி நம் முன் உள்ளது. பிரிட்டனை மீட்டெடுக்க நாம் தயாராக இருக்கிறோம்.

நாட்டின் மீதிருந்த ஒரு சுமை நீங்கிவிட்டது. ஆம், இறுதியாக அந்த சுமை நீக்கப்பட்டுவிட்டது. இன்று முதல் நாம் புதிய அத்தியாயத்தைத் தொடங்குவோம். ஆம், நாம் சாதித்து விட்டோம். மாற்றத்திற்கான வேலையைத் தொடங்குவோம். மாற்றம் இப்போதே தொடங்கி விட்டது. அரசியல் என்றால் அது பொது சேவை செய்வதற்கானது என்ற நிலையை மீண்டும் நாம் உருவாக்குவோம். நமது அரசு நன்மைக்கான சக்தியாக இருக்கும் என்பதை நாம் காட்டுவோம்’ என தெரிவித்தார்.

* படுதோல்வியை சந்தித்த முன்னாள் பிரதமர், அமைச்சர்கள்
முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் லிஸ் டிரஸ் மற்றும் ரிஷி சுனக் அமைச்சரவையில் இடம் பெற்று இருந்த பலரும் இந்த தேர்தலில் தோல்வி அடைந்தனர். லிஸ் டிரஸ், தனது தென்மேற்கு நோர்போக் தொகுதியில் தொழிலாளர் கட்சி வேட்பாளர் டெர்ரி ஜெர்மியிடம் 630 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். மேலும் மூத்த தலைவர்கள் பென்னி மோர்டான்ட், ஜேக்கப் ரீஸ்-மோக் ஆகியோரும் தோல்வியை சந்தித்தனர். பாதுகாப்புத்துறை அமைச்சர் கிரான்ட் ஷாப்ஸ், நீதித்துறை அமைச்சர் அலெக்ஸ் சாக், அமைச்சர் மிச்செல் டோனலன் ஆகியோரும் தோல்வியை சந்தித்தனர்.

மூத்த அமைச்சர் ஜானி மெர்சரும் பிளைமவுத் மூர் வியூ தொகுதியில் தோற்றார். கல்வி அமைச்சர் கில்லியன் கீகன், சிசெஸ்டர் தொகுதியில் தோற்றார். கலாச்சாரத்துறை அமைச்சர் லூசி ப்ரேசர் அவர் போட்டியிட்ட எலி, கிழக்கு கேம்பிரிட்ஜ்ஷைர் தொகுதியில் தோல்வியை சந்தித்தார். கன்சர்வேட்டிவ் தலைமைக் கொறடா சைமன் ஹார்ட், கேர்பிர்டின் தொகுதியில் ப்ளாய்ட் சிம்ருவிடம் தோற்றார். இதே போல் பலமுக்கிய தலைவர்கள் தோல்வியை சந்தித்தனர்.

* மோடி, உலகத்தலைவர்கள் வாழ்த்து
இங்கிலாந்து தேர்தலில் வெற்றி பெற்ற கியர் ஸ்டார்மருக்கு பிரதமர் மோடி மற்றும் உலகத்தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். பிரதமர் மோடி தனது வாழ்த்து செய்தியில்,’இங்கிலாந்து பொதுத் தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்ற கியர் ஸ்டார்மருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

இந்தியாவுடன் நேர்மறையான, ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை நான் எதிர்நோக்குகிறேன். ரிஷி சுனக் இங்கிலாந்தின் போற்றத்தக்க தலைமையாக திகழ்ந்தார். அவரது பதவிக் காலத்தில் இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான உறவை ஆழப்படுத்த அவர் ஆற்றிய பங்களிப்புக்காக நான் பாராட்டுகிறேன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

* வக்கீல் டூ பிரதமர் பதவி பிரிட்டன் புதிய பிரதமர் யார்?
இங்கிலாந்து தேர்தலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு தொழிலாளர் கட்சியை வெற்றி பெற வைத்துள்ள கியர் ஸ்டார்மர் 1962ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி லண்டனில் சர்ரே ஆக்ஸ்டெட் பகுதியில் ஒரு தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தார். அவரது தாய் செவிலியராக வேலை செய்து வந்தார். பள்ளிப் படிப்பை முடித்த ஸ்டார்மர் லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். கியர் ஸ்டார்மர் அரசியலுக்கு வருவதற்கு முன்னதாக, மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வழக்கறிஞராக இருந்தார்.

டோனி பிளேயர் பிரதமராக இருந்த போது பிரிட்டன் அரசு ஈராக் மீது படையெடுத்த நிலையில், அதை மிகக் கடுமையாக எதிர்த்தவர் தான் இந்த ஸ்டார்மர் . 2003 முதல் 2008 வரை ஐந்து ஆண்டுகள் வடக்கு அயர்லாந்து காவல் வாரியத்தின் சட்ட ஆலோசகராக இருந்தார். 2014ல் மறைந்த ராணி எலிசபெத் இவருக்கு நைட்ஹுட் பட்டம் வழங்கி சிறப்பித்தார்.

இவர் திறமையான இசைக்கலைஞராகவும் அறியப்படுகிறார். 2015ல் தான் இவர் தேர்தல் அரசியலுக்குள் நுழைந்தார். ஹோல்போர்ன் மற்றும் செயின்ட் பான்க்ராஸ் தொகுதியில் போட்டியிட்ட இவர் எம்.பி.யாக தேர்வானார். இவரின் உழைப்பை அங்கீகரிக்கும் விதமாக உடனடியாக லேபர் கட்சியில் முக்கிய பதவிகள் கிடைத்தன. இதையடுத்து ஸ்டார்மர் 2020ல் லேபர் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது இங்கிலாந்தின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

* ஈழ தமிழ் பெண் வெற்றி
இங்கிலாந்து தேர்தலில் ஈழ தமிழ் பெண் உமா குமரன் வெற்றி பெற்றார். தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட தமிழ்ப் பெண் உமா குமரன், லண்டன் ஸ்டராட்போர்டு தொகுதியில் 19,145 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளரான கேன் பிளாக்வெல், 3,144 வாக்குகள் மட்டும் பெற்று 4வது இடத்திற்கு தள்ளப்பட்டார். ஈழத் தமிழ்ப் பெண்ணான உமா குமரன், இங்கிலாந்து வரலாற்றில் முதல் தமிழ் எம்பியாக தேர்வாகி உள்ளார். இவரது குடும்பம் இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுப் போருக்கு பின்னர் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தனர்.

* இந்திய வம்சாவளியை சேர்ந்த 28 பேர் எம்பிக்களாக தேர்வு
இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் முன்எப்போதும் இல்லாத வகையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 28 பேர் எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பதவியை ராஜினாமா செய்த இந்திய வம்சாவளி பிரதமர் ரிஷிசுனக், ரிச்மண்ட் மற்றும் நார்தலர்டன் தொகுதியில் வெற்றி பெற்றார். ரிஷிசுனக் அமைச்சரவையில் இடம் பெற்று இருந்த இன்னொரு இந்திய வம்சாவளி கோவாவை சேர்ந்த கிளாரி கவுடின்ஹோவும் வெற்றி பெற்றார்.

அதே போல் முன்னாள் உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன் மற்றும் பிரிதி படேல் ஆகியோரும் தங்கள் தொகுதிகளில் வெற்றி பெற்றனர். ககன் மொகிந்திரா தனது தென்மேற்கு ஹெர்ட்போர்ட்ஷையர் தொகுதியில் வெற்றி பெற்றார். அதே போல் ஷிவானி ராஜா என்பவர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலாளர் கட்சி வேட்பாளரான ராஜேஷ் அகர்வாலை எதிர்த்து லெய்செஸ்டர் ஈஸ்ட் தொகுதியில் வெற்றி பெற்றார். அதே சமயம் கன்சர்வேட்டிவ் கட்சியில் வடமேற்கு கேம்பிரிட்ஜ்ஷையர் தொகுதியில் போட்டியிட்ட ஷைலேஷ் வாரா மற்றும் அமீத் ஜோகி ஆகியோர் தோல்வி அடைந்தனர்.

தொழிற்கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பலர் வெற்றி பெற்றனர். சீமா மல்ஹோத்ரா என்பவர் பெல்தாம் மற்றும் ஹெஸ்டன் தொகுதியிலும், கோவாவை சேர்ந்த கீத்வாசின் சகோதரி வலேரி வாஸ் என்பவர் வால்சால் மற்றும் ப்ளாக்ஸ்விச் தொகுதியிலும், விகான் தொகுதியில் லிசா நந்தியும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். சீக்கிய எம்.பி. ப்ரீத் கவுர் கில் தனது தொகுதியான பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனிலும், தன்மன்ஜீத் சிங் தேசி என்பவர் ஸ்லோ தொகுதியிலும் வெற்றி பெற்றனர்.

நாவேந்து மிஸ்ரா (ஸ்டாக்போர்ட்), நதியா விட்டோம் (நாட்டிங்ஹாம் கிழக்கு) ஆகியோர் அதிக வாக்குவித்தியாசத்தில் வென்றனர். ஜாஸ் அத்வால் (இல்போர்ட் சவுத்), பேக்கி ஷங்கர் (டெர்பி சவுத்), சத்வீர் கவுர் (சவுத்தாம்ப்டன் டெஸ்ட்), ஹர்ப்ரீத் உப்பல் (ஹடர்ஸ்பீல்ட்), வாரிந்தர் ஜஸ் (வால்வர்ஹாம்ப்டன் வெஸ்ட்), குரிந்தர் ஜோசன் (ஸ்மெத்விக்), கனிஷ்க நாராயண் (வேல் ஆப் கிளாமோர்கன்), சோனியா குமார் (டட்லி), சுரீனா பிராக்கன்பிரிட்ஜ் (வால்வர்ஹாம்ப்டன் நார்த் ஈஸ்ட்), கிரித் என்ட்விசில் (போல்டன் நார்த் ஈஸ்ட்), ஜீவுன் சாந்தர் (லபரோ), சோஜன் ஜோசப் (ஆஷ்போர்ட்) ஆகியோரும் வெற்றி பெற்றனர். அதே போல் லிபரல் டெமாக்ராட்ஸ் கட்சி சார்பில் களமிறங்கிய இந்திய வம்சாவளியை சேர்ந்த முனிரா வில்சன் தனது ட்விகன்ஹாம் தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்றார்.

The post இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளி பிரதமர் ரிஷி சுனக் கட்சி படுதோல்வி: 14 ஆண்டுகளுக்கு பின் தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்தது, கியர் ஸ்டார்மர் புதிய பிரதமர் ஆனார் appeared first on Dinakaran.

Related Stories: