ரெட்டியார்சத்திரம் அருகே தெருநாய் கடித்து 10 ஆடுகள் பலி

ரெட்டியார்சத்திரம்: ரெட்டியார்சத்திரம் அருகே தெருநாய்கள் கடித்து குதறியதில் 10 ஆடுகள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், நடுப்பட்டி ஊராட்சியில் உள்ள கேத்தம்பட்டியை சேர்ந்தவர் முனியப்பன். இவரது மனைவி சுப்புலட்சுமி. இவர்கள் இருவரும் நடுப்பட்டியில் குத்தகைக்கு தோட்டம் எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர். மேலும், ஆடு வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். தோட்டத்தில் உள்ள பட்டியில் ஆடுகளை அடைத்து வைத்திருந்தனர்.இந்நிலையில், நேற்று காலை தம்பதி இருவரும் பசுக்களிடம் பால் கறந்தனர். பின்னர் பாலை விற்பனை செய்ய சென்றுவிட்டனர். பின்னர் திரும்பிவந்து பார்த்தபோது, பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆடுகளை தெரு நாய்கள் ஆக்ரோஷத்துடன் கடித்து குதறிக்கொண்டிருந்தன. இதை பார்த்து தம்பதியர் அதிர்ச்சியடைந்து நாய்களை விரட்டியடித்தனர்.

ஆனால், நாய்கள் கடித்துக் குதறியதில் 10 ஆடுகள் இறந்தன. மேலும், 7 ஆடுகள் பலத்த காயமடைந்தன. இது குறித்து தகவல் அறிந்த நடுப்பட்டி ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன், சுள்ளறும்பு கால்நடை மருத்துவர் தேவராஜ், உதவியாளர் கமலம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பலியான ஆடுகளை பார்வையிட்டனர். உயிரிழந்த ஆடுகள் கால்நடை மருத்துவரால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அந்தப் பகுதியில் புதைக்கப்பட்டன. காயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தெருநாய் கடித்ததால் 10 ஆடுகள் பலியான நிலையில் தங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அரசு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் முனியப்பன் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

The post ரெட்டியார்சத்திரம் அருகே தெருநாய் கடித்து 10 ஆடுகள் பலி appeared first on Dinakaran.

Related Stories: