சிபிஐ அதிகாரி போல் பேசி ரூ50 லட்சம் மோசடி செய்த கேரள வாலிபர் பிடிபட்டார்: சொகுசு கார், 47 ஏடிஎம் கார்டுகள் பறிமுதல்

தாம்பரம்: தாம்பரம் அடுத்த இரும்புலியூர் செந்தில் முருகன் தெருவை சேர்ந்த சுரேஷ்குமார் (52), கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி தாம்பரம் மாநகர காவல் ஆணையரக அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில் +44720754022 என்ற எண்ணிலிருந்து தொடர்பு கொண்ட நபர், தான் சிபிஐ அதிகாரி எனவும், எனது செல்போன் எண்ணில் இருந்து மணி லாண்டரிங் பிசினஸ் செய்துள்ளதாகவும், இந்த குற்றத்திற்காக மும்பை போலீஸ் வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும், இவ்வழக்கில் என்னை ஸ்கைப் என்ற செயலி மூலம் விசாரணை செய்ய வேண்டும் என்றும் கூறினார். மேலும், எனது வங்கி கணக்கிலிருந்து குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு ₹50 லட்சம் அனுப்புமாறும், பண பரிவர்தணையை தணிக்கை செய்துவிட்டு மீண்டும் தனது வங்கி கணக்கிற்கு திருப்பி செலுத்தப்படும், என கூறினார்.

இதை நம்பி, நான் பணத்தை அனுப்பினேன். இதுவரை அந்த தொகை எனக்கு திரும்பி வரவில்லை. இதுபற்றி விசாரித்தபோது, நான் ஏமாற்றப்பட்டது தெரிந்தது. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறியிருந்தார். இதுகுறித்து தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, சுரேஷ்குமார் பணம் அனுப்பிய வங்கி கணக்கு, பண பரிவர்தணை பட்டியல் ஆகியவற்றை ஆய்வு செய்து, அதில் தொடர்புடைய சிலரை, கடந்த சில மாதங்களுக்கு முன், போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்ய மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் மற்றும் சைபர் கிரைம் கூடுதல் துணை ஆணையர் மேற்பார்வையில் ஆய்வாளர் சசிகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கேரள மாநிலம் சென்று முகமது ஷாஹித் (29) என்பவரை கைது செய்தனர்.

அவரிடமிருந்து 2 செல்போன்கள், அவர் பயன்படுத்திய கேரள பதிவு எண் கொண்ட சொகுசு கார், பல்வேறு வங்கிகளின் 47 ஏடிஎம் கார்டுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மோசடி தொடர்பாக பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், இது சம்பந்தமாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் சைபர் கிரைம் ஹெல்ப்லைன் நம்பர் 1930 அல்லது சைபர் கிரைம் ரிப்போர்ட்டிங் போர்டல் www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலம் புகார் அளிக்கலாம் அல்லது சைபர் கிரைம் காவல் நிலையங்களை அணுகலாம் என தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.

The post சிபிஐ அதிகாரி போல் பேசி ரூ50 லட்சம் மோசடி செய்த கேரள வாலிபர் பிடிபட்டார்: சொகுசு கார், 47 ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: