சென்னை அருகே கார்களை கடத்தியவர் கைது 26 வாகனங்கள் பறிமுதல்: போலீஸ் நடவடிக்கை

சென்னை: திருவள்ளூரில்ரூ.2.53 கோடி மதிப்புள்ள கார்களை கடத்தி மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 26 வாகனங்களை பறிமுதல் செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுகோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (27). இவரிடம் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த பிரையாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மனோஜ் பிராபகர் (30) என்பவர் கடந்த 11.1.2024 அன்று ஒப்பந்த அடிப்படையில் ஒரு காரை வாடகைக்கு எடுத்து சென்றுள்ளார்.

அன்றிலிருந்து அவர் காருக்கான வாடைகையும் கொடுக்காமல், வாகனத்தையும் திரும்ப கொடுக்காமல் இருந்துள்ளார். இது சம்மந்தமாக கடந்த மார்ச் 23ம் தேதி மணிகண்டன் மப்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால் மனோஜ் பிரபாகர் தலைமறைவாக இருந்ததால் திருவள்ளூர் மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் டிஎஸ்பி அழகேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று 29ம் தேதி மணவாளநகர் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் குற்றவாளியான மனோஜ் பிரபாகர் என்பவரை கைது செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் இதேபோல் 57 நபர்களிடம் நான்கு சக்கர வாகனங்களை வாடகைக்கு பெற்று கொண்டு திரும்ப கொடுக்காமல் இருப்பது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து மனோஜ் பிரபாகரிடமிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்வேறு நபர்களிடம் ஏமாற்றி எடுத்து வந்த ரூ.2.53 கோடி மதிப்புள்ள 26 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மீதமுள்ள 31 வாகனங்கள் பறிமுதல் செய்யப்படவேண்டியிருப்பதாக மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மனோஜ் பிரபாகர் மீது வழக்கு பதிவு செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post சென்னை அருகே கார்களை கடத்தியவர் கைது 26 வாகனங்கள் பறிமுதல்: போலீஸ் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: