மஞ்சூரில் பணிமனையுடன் பேருந்து நிலையம் அமைக்க கோரிக்கை

 

மஞ்சூர், மே.1: மஞ்சூரில் பணிமனையுடன் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என குந்தெ சீமெ படுகர் நல சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. நீலகிரி மாவட்ட குந்தெ சீமே படுகர் நல சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் கண்டிபிக்கை சமுதாய கூடத்தில் நடைபெற்றது. சந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதில், ராதாகிருஷ்ணன் (தலைவர்), சந்திரன், நேரு (துணை தலைவர்கள்), ராதாகிருஷ்ணன் (செயலாளர்), நகுலன் (பொருளாளர்) மற்றும் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சங்கத்திற்கு புதிய கொடி அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வறட்சியால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு அவர்கள் நலன் கருதி தமிழக அரசு அறிவித்த பசுந்தேயிலைக்கான மானிய தொகை வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். குந்தா வட்டார பொதுமக்கள் நலன் கருதி நீதி மன்றம் மற்றும் மகளிர் காவல் நிலையம் ஏற்படுத்த வேண்டும். மஞ்சூரில் பணிமனையுடன் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். அம்மக்கல், கட்லாடா ஆறுகளில் தடுப்பணைகளை ஏற்படுத்தி குடிநீர் விநியோகத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குந்தா பகுதி பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையான மின் மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, நல சங்கத்தின் மூலம் படுகு சமுதாய கலாச்சாரம், பண்பாடு, விருந்தோம்பல் ஆகியவற்றை பாதுகாக்கவும் இது குறித்து சமுதாய இளைஞர்கள், வெளியூர்களில் இடம் பெயர்ந்த சமுதாய மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் ராஜன், ரவிக்குமார், சிவன், சமூக ஆர்வலர் பெள்ளி, போஜாகவுடர், வழக்கறிஞர் தினேஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.

The post மஞ்சூரில் பணிமனையுடன் பேருந்து நிலையம் அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: