ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு ஓய்வூதிய பலன்களை 30 நாட்களுக்குள் வழங்க நடவடிக்கை: அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு

சேலம்: பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவொளி அனைத்து மாவட்ட சிஇஓ மற்றும் டிஇஓக்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அரசு, அரசுஉதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்று, ஓராண்டு கடந்த பின்னரும் ஓய்வூதிய பலன்கள் பெற்று வழங்கப்படாமல் இருந்து வருவதாக தெரிய வருகிறது. எனவே இந்த காலதாமதத்தை தவிர்க்க வேண்டும். மேலும், உடனடியாக 30 நாட்களுக்குள் அனைத்து ஓய்வூதியப் பலன்களையும் பெற்று வழங்க சம்பந்தப்பட்ட அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி செயல்பட வேண்டும்.

அதன்படி, பள்ளியில் பணிபுரிந்து ஓய்வுப்பெற்ற தலைமை ஆசிரியரின் பணிக்காலத்திற்கு, அகத்தணிக்கை மேற்கொள்ளப்பட்டு தணிக்கை அறிக்கை பெற்றிருக்கப்பட வேண்டும். தணிக்கை அறிக்கை பெற்றவுடன், ஓய்வுப் பெற்ற மற்றும் ஓய்வு பெறவுள்ள தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மீது தனிப்பட்ட அரசு நிதி சார்ந்த தணிக்கைத் தடை நிலுவை ஏதுமில்லை என்ற நிலையில், ஓய்வு பெற்றவர்களுக்கு உடனடியாக 30 நாட்களுக்குள் அனைத்து ஓய்வூதிய பலன்களும் பெற்று வழங்கப்பட வேண்டும்.ஓய்வுப்பெற்ற சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியரின் பணிக்காலத்திற்கு உட்படாத, முந்தைய அல்லது பிந்தைய பள்ளி சார்ந்த தணிக்கை தடைகளுக்காக, அவர்களின் ஓய்வூதிய பலன்களை நிறுத்தி வைக்க கூடாது.

ஓய்வுப்பெற்ற தலைமை ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்த காலத்தில் எழுப்பப்பட்டுள்ள இதர (நிதி சாராத) தணிக்கைத் தடைகள் காரணமாக, தலைமை ஆசிரியர்களுக்கு விடுவிக்கப்பட வேண்டிய ஓய்வூதிய பலன்களை நிறுத்தி வைக்க கூடாது. ஓய்வுப்பெற்ற தலைமை ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட பள்ளியில் பணம் பெற்று வழங்கும் அலுவலராக பணிபுரிந்த காலத்தில், அப்பள்ளியின் ஆசிரியர்கள் மீது எழுப்பப்பட்டுள்ள நிதி சார்ந்த தணிக்கைத் தடைகள் ஏதேனும் இருப்பின், அதன் மீதும் தகுந்த நடைமுறைகளை உரிய ஆவணங்களுடன் உறுதிப்படுத்திய பின், தவறாமல் 30 நாட்களுக்குள் ஓய்வூதிய பலன்கள் பெற்று வழங்கப்பட வேண்டும். குறிப்பாக, நிதி சார்ந்த, தணிக்கைத் தடைக்கு உட்படுத்தப்பட்ட ஆசிரியரின் தணிக்கைத் தடை விபரம், சம்பந்தப்பட்ட ஆசிரியரின் பணிப்பதிவேட்டில் பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது உறுதி செய்யப்பட வேண்டும்.

நிதி சார்ந்த தணிக்கைத் தடைக்கு உட்படுத்தப்பட்ட ஆசிரியர் வேறு பள்ளிக்கு மாறுதலில் சென்றிருப்பின், தற்போது பணிபுரியும் பள்ளியில் பணிப்பதிவேட்டில் பதிவு மற்றும் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது உறுதி செய்யப்பட வேண்டும்.நிதி சார்ந்த தணிக்கைத் தடைக்கு உட்படுத்தப்பட்ட பணியாளர் நீதிமன்ற வழக்கு தொடுத்திருப்பின், அவை சார்ந்த விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதா? என்பது உறுதி செய்யப்பட வேண்டும். எனவே, அகத்தணிக்கைத் தடை சார்ந்த இனங்களில் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஒய்வுபெற்ற அனைத்து தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு 30 நாட்களுக்குள் அனைத்து ஓய்வூதிய பலன்களும் பெற்று வழங்க அறிவுறுத்தப் படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு ஓய்வூதிய பலன்களை 30 நாட்களுக்குள் வழங்க நடவடிக்கை: அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: