எடப்பாடி பழனிசாமி மீது தயாநிதி மாறன் அவதூறு வழக்கு: அடுத்த மாதம் 14-ம் தேதி விசாரணை

சென்னை: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் தயாநிதி மாறன் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அண்மையில் மத்திய சென்னை தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய சென்னை எம்.பி தயாநிதி மாறன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி இருந்தார். கடந்த ஏப்ரல் 15ம் தேதி மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட எழும்பூர், புரசைவாக்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி என்மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானது மட்டுமல்ல, வேண்டுமென்றே எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சித்தரிக்கப்பட்டது என தயாநிதி மாறன் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் ஒன்றிய அமைச்சர் தயாநிதி மாறன் எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதில் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி பேசியதாக மனுவில் குற்றம் சாடியுள்ளார். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளேன். பொதுக்கூட்டத்தில் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை என் மீது பழனிசாமி சுமத்தியுள்ளார்.

தொகுதி மேம்பாட்டு நிதியை 75% நான் பயன்படுத்தவில்லை என்று சென்னையில் எடப்பாடி பழனிசாமி பேசினார். தொகுதி நிதியை செலவிட்டுள்ள நிலையில் அவதூறாக இபிஎஸ் பேசியுள்ளார். இதுவரை 95% நிதியை பயன்படுத்தியுள்ளேன். தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்தியது தொடர்பான விவரங்கள் இணையதளத்தில் உள்ளன. எடப்பாடி பழனிசாமி தோல்வி விரக்தியில் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு அடுத்த மாதம் 14-ம் தேதி விசாரணைக்கு வருகிறது என்று கூறினார்.

The post எடப்பாடி பழனிசாமி மீது தயாநிதி மாறன் அவதூறு வழக்கு: அடுத்த மாதம் 14-ம் தேதி விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: