பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு; சலுகை திட்டமோ, அறிவிப்போ இல்லாததால் ஏமாற்றம்: சர்ச்சைக்குரிய பொது சிவில் சட்டம் குறித்து மீண்டும் அறிவிப்பு

புதுடெல்லி: வரும் மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார். ‘மோடியின் உத்தரவாதம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் மக்களுக்கான சலுகை திட்டமோ, அறிப்போ ஏதும் இல்லாததால் ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வருகிற 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தலுக்காக நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. பல்வேறு மாநில மற்றும் தேசிய கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை இன்று டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் பாஜக வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதமர் மொடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாபாசாகேப் அம்பேதகர் பிறந்தநாளான இன்று பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. முன்னதாக இந்த தேர்தல் அறிக்கையை ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான 27 பேர் கொண்ட குழு தயாரித்திருந்தது. தேர்தல் அறிக்கை வெளியிடும் முன் பேசிய பிரதமர் மோடி, ‘ஒட்டுமொத்த நாடும் இந்த ‘சங்கல்ப் பாத்ரா’ என்ற பெயர் கொண்ட தேர்தல் அறிக்கையை எதிர்பார்த்து காத்திருக்கிறது. இந்த தேர்தல் அறிக்கையில் ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கான வளர்ச்சித் திட்டங்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது’ என்றார்.

‘மோடியின் உத்தரவாதம்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த தேர்தல் அறிக்கையானது, பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் பயனடைந்தவர்களுக்கு முதல் தேர்தல் அறிக்கை வழங்கப்பட்டது. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அமல்படுத்தப்படும். பொதுவான வாக்காளர் பட்டியல் முறை அறிமுகப்படுத்தப்படும். 2025ம் ஆண்டை பழங்குடியினரின் பெருமை ஆண்டாக கடைபிடிக்கப்படும். 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவுபடுத்தப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 3 கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்படும்.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஐந்து லட்சம் ரூபாய் வரை இலவசமாக மருத்துவம் பார்த்துக்கொள்ளலாம். இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு தொடரும். குறைந்த விலையில் ‘பைப்’ மூலமாக வீட்டு உபயோக காஸ் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். முத்ரா கடன் உதவி திட்டமானது 10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும். சூரிய ஒளி மூலம் மின்சாரம் வழங்கும் திட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும். நாடு முழுவதும் அனைத்து மக்களுக்கான பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும். திருநங்கைகளுக்கும் ஆயுஷ்மான்பாரத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.

பெண்களுக்கு ஒரு ரூபாய்க்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் உஜ்வாலா திட்டம் நீட்டிக்கப்படும். பெண்கள், விவசாயிகள், ஏழைகள், இளைஞர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்படும். இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, முதலீடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். தேசிய கூட்டுறவுக் கொள்கை கொண்டுவரப்படும். பால் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வடக்கு-தெற்கு மற்றும் கிழக்கு இந்தியாவை இணைக்கும் வகையில் 3 புல்லட் ரயில்கள் திட்டம் கொண்டு வரப்படும். சர்வதேச ராமாயண விழா நடத்தப்படும். மேலும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும். 6ஜி தொழில்நுட்பம் கொண்டு வரப்படும். மகளிர் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும். ஊழல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விண்வெளி, செயற்கை நுண்ணறிவு, குவாண்டம், பசுமை ஹைட்ரஜன், குறைக்கடத்தி, பேட்டரி வாகனம் போன்ற தொழில்நுட்பத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். எரிசக்தித் துறையில் வரும் 2047ம் ஆண்டுக்குள் தன்னிறைவு எட்டப்படும். ரயில்வே மற்றும் விமான நிலையங்கள் மேலும் மேம்படுத்தப்படும். காத்திருப்போர் பட்டியல் முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும்.

புதிய விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள் தொடர்ந்து கட்டமைக்கப்படும். கடந்த 2004 முதல் 2014 வரை நாட்டின் பொருளாதாரம் 11வது இடத்தில் இருந்தது. தற்போது ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. வரும் காலத்தில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை உருவாக்குவோம். உலகெங்கிலும் திருவள்ளுவர் கலாசார மையம் மூலம் இந்தியாவின் கலாசாரத்தை மேலும் உலகிற்கு எடுத்துச் செல்லப்படும். இந்திய செம்மொழிகளின் கல்வி தொடர்பான படிப்பை, உயர் கல்வி நிறுவனங்களில் கொண்டு வரப்படும். மேற்கண்ட வாக்குறுதிகள் பாஜக தேர்தல் அறிக்கையில் உள்ளன.

பொதுவான திட்டங்கள் குறித்து பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தாலும், பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் போன்ற திட்டங்களுக்கு ஏற்கனவே எதிர்ப்புகள் இருந்து வந்தன. இருந்தும் அவற்றை தனது தேர்தல் அறிக்கையில் பாஜக கூறியுள்ளது. மேலும் மக்களுக்கு நேரடியாக பயனளிக்கும் வகையிலான சலுகை திட்டங்களோ, அறிவிப்புகளோ இல்லாததால் பாஜக தேர்தல் அறிக்கை ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது.

The post பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு; சலுகை திட்டமோ, அறிவிப்போ இல்லாததால் ஏமாற்றம்: சர்ச்சைக்குரிய பொது சிவில் சட்டம் குறித்து மீண்டும் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: