பெரியார் பல்கலையில் சமூக நீதி சூறையாடல் துணைவேந்தர், பதிவாளரை தண்டிக்க ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
பெரியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழுவின் 114ம் கூட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6ம் தேதி நடைபெற்றது. அனைத்து நடைமுறைகளும் நிறைவடைந்த நிலையில், கூட்டத்தின் முடிவுகள் இப்போது தான் வெளியிடப்பட்டுள்ளன. பெரியார் பல்கலைக்கழகத்திற்கு 12 பேராசிரியர்கள், 9 இணைப் பேராசிரியர்கள், 5 உதவிப் பேராசிரியர்கள் என மொத்தம் 26 ஆசிரியர்களை நியமிக்க ஒப்புதல் பெறப்பட்டிருக்கிறது.

இந்தப் பணியிடங்கள் நீண்டகாலமாக காலியாக இருக்கும் நிலையில், அவற்றை நிரப்புவது வரவேற்கத்தக்கது தான். ஆனால், இட ஒதுக்கீட்டின் அடிப்படையான 200 புள்ளி ரோஸ்டர் விதிகளுக்கு முரணாக அனைத்துப் பணியிடங்களும் பொதுப்போட்டிப் பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது சமூக அநீதியாகும். 200 புள்ளி ரோஸ்டர் விதிப்படி, முதல் பணியிடம் பொதுப்போட்டி பிரிவுக்கும், 2வது பணியிடம் பட்டியல் வகுப்பு (அருந்ததியர்), 3வது பணியிடம் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, 4வது பணியிடம் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, 5வது இடம் பொதுப்போட்டி பிரிவு, 6வது இடம் பட்டியலினம், 15வது இடம் இஸ்லாமியர்கள், 50வது இடம் பழங்குடியினருக்கு வழங்கப்பட வேண்டும்.

ஆனால், அதற்கு மாறாக இந்த 17 பணியிடங்களும் மீண்டும் பொதுப்போட்டிப் பிரிவில் நிரப்புவதை அனுமதிக்கவே முடியாது.
பெரியார் பல்கலைக்கழகம் இப்போது அரங்கேற்றவுள்ள இந்த விதி மீறலால், பட்டியலின அருந்ததியருக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் பறிக்கப்படும். இத்தகைய சமூக அநீதிகளுக்கு துணைவேந்தரும், பதிவாளரும் பொறுப்பாக்கப்பட்டு, அவர்கள் தண்டிக்கப்பட்டால் தான் இனியும் சமூக அநீதி நடக்காமல் தடுக்க முடியும்.

The post பெரியார் பல்கலையில் சமூக நீதி சூறையாடல் துணைவேந்தர், பதிவாளரை தண்டிக்க ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: