உலக அளவில் கால்தடம் பதித்துள்ள தமிழக இளைஞர்களுக்கு சான்றிதழ், ₹50,000 காசோலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: உலக அளவில் கால்தடம் பதித்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்களை சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ் மற்றும் ₹50 ஆயிரம் காசோலையை வழங்கினார்.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் ராமன் மற்றும் லட்சுமணன் ஆகியோர் நடத்திவரும் நிறுவனம் சார்பில் புத்தாக்க கண்டுபிடிப்புக்கான நிதியுதவி பெற்றதற்காக பாராட்டு சான்றிதழ் மற்றும் ₹50 ஆயிரம் காசோலையை வழங்கினார்.

தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க சிந்தனைகளை பள்ளி மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் மத்தியில் உருவாக்குதற்காக EDII-TN நிறுவனம் ஆண்டுதோரும் உயர்கல்வி மாணவர்களுக்கு இ.டி.ஐ.ஐ ஹேக்கத்தான் போட்டிகளை 2017ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. 1,700-க்கும் மேற்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள் இந்தப் போட்டியில் பங்கு பெற்று வருகின்றன.
நடப்பு ஆண்டில் 3.20 லட்சம் மாணவர்கள் இந்தப் போட்டிக்குப் பயிற்சி பெற்று பங்கு பெற்று வருகின்றனர். தமிழ்நாடு முதல்வர் முதல் முறையாக பள்ளி மாணவர்களுக்கு இந்த ஹேக்கத்தான் போட்டிகளை விரிவுபடுத்தி 2022ம் ஆண்டு செப்டம்பர் 16 அன்று மதுரையில் துவங்கி வைத்தார். இதற்கு பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம் என்று பெயர். இதில் தமிழ்நாடு முழுவதும் செயல்படும் 4484 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 9 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்கள் 6 லட்சம் பேர் கலந்து கொண்டு வருகின்றனர்.

இந்த ஹேக்கத்தான் போட்டிகளில் பங்கு பெறும் மாணவர்கள் புத்தாக்க முறையில் சந்தைப்படுத்தக்கூடிய புதிய பொருட்களின் மாதிரிகளை உருவாக்க வேண்டும். இவ்வாறு உருவாக்கப்படும் சிறந்த மாதிரிப் பொருட்களுக்கு ஆண்டுதோறும் உயர்கல்வி மாணவர்களுக்கு 25 முதல் பரிசுகள், தலா ₹1 லட்சம் என அரசு வழங்கி வருகிறது. இதுவரையில் 136 மாணவர் அணிகளுக்கு ₹1.14 கோடி ரொக்கப்பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு முதல் பரிசாக 10 மாணவ அணிகளுக்கு தலா ₹1 லட்சம் பரிசாகவும் இரண்டாவது பரிசாக தலா ₹25,000, என 30 மாணவ அணிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. 2019-20ம் ஆண்டு இதுபோன்று உயர்கல்வி மாணவர்களுக்கு நடத்திய இ.டி.ஐ.ஐ ஹேக்கத்தான் போட்டியில் விருதுநகர் மாவட்டம், சேது தொழிநுட்பக் கல்லூரியில் இருந்து கலந்துகொண்ட மாணவர்கள் செல்வன். ராமன் மற்றும் லட்சுமணன் (தற்போது 22 வயது) ஆகிய இரட்டை சகோதரர்கள் உருவாக்கிய “மின்காந்த தூண்டுதல்”என்கிற கண்டுபிடிப்புக்கு ரொக்கப்பரிசு ₹1 லட்சம் வழங்கப்பட்டது. பிறப்பிலிருந்து காது கேட்காதவர்களுக்கு அறுவை சிகிட்சை இல்லாமலேயே காதுகள் கேட்பதற்கான தொழில்நுட்பத்தை குறைந்த விலையில் இவர்கள் உருவாக்கியது மிகச் சிறப்பானதாகும். இந்தப் புத்தாக்கக் கண்டுபிடிப்புக்கு இவர்கள் இரண்டு காப்புரிமைகளைப் பெற்றுள்ளனர்.

தற்போது ராமன் மற்றும் லட்சுமணன் சகோதரர்கள் கல்லூரிப் படிப்பினை முடித்துவிட்டு Backyard Creators Private Limited என்கிற புத்தொழில் நிறுவனத்தினை தொடங்கி நடத்திவருகிறார்கள். இவர்களது நிறுவனத்திற்கு சமீபத்தில் இந்திய அளவில் 7 புத்தாக்க தொழில்நிறுவனங்களுக்கு புத்தாக்க கண்டுபிடிப்புக்கான நிதியுதவி வழங்கியுள்ளது. அதில் மேற்குறிப்பிட்ட சகோதரர்களின் நிறுவனத்திற்கு விருதும் கிடைத்துள்ளது. உலக அளவில் கால்தடம் பதித்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த இந்த இளைஞர்களை சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாடு முதல்வர் பாராட்டு சான்றிதழ் மற்றும் ₹50 ஆயிரம் காசோலையை வழங்கினார். இந்நிகழ்வின்போது அமைச்சர் தா.மோ. அன்பரசன், கூடுதல் தலைமைச் செயலாளர் உமா சங்கர், துறை செயலாளர் அர்ச்சனா பட்நாயக் ஆகியோர் உடனிருந்தனர்.

The post உலக அளவில் கால்தடம் பதித்துள்ள தமிழக இளைஞர்களுக்கு சான்றிதழ், ₹50,000 காசோலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: