சென்னை: ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவமழை காலகட்டத்தில் இதுவரை இல்லாத அளவாக சென்னை மீனம்பாக்கத்தில் 88 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக சென்னைக்கு வடகிழக்கு பருவமழை கைகொடுக்கும் நிலையில், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மற்றும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக கடந்த ஒரு வார காலமாக அவ்வப்போது விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இதில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ள மீனம்பாக்கத்தில் மழை அளவீடு தொடங்கிய 75 ஆண்டுகள் இல்லாத அளவாக இந்தாண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவமழை காலகட்டத்தில் 88 செ.மீ. மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன் அதிகபட்ச மழை அளவை பொறுத்தவரை 1961ம் ஆண்டு 71 செ.மீட்டரும், 1967ம் ஆண்டு 72 செ.மீட்டரும், 1985ம் ஆண்டு 72 செ.மீட்டர் அளவுக்கும் மழை பதிவாகியுள்ளது. 1995ம் ஆண்டு 78 செ.மீ., 1996ம் ஆண்டு 87 செ.மீ., நடப்பாண்டு 88 செ.மீ. அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. மீனம்பாக்கத்தில் தென்மேற்கு பருவமழையின் போது அதிகமாக பெய்த மழையின் அளவானது 1996ம் ஆண்டாக இருந்த நிலையில், தற்போது அந்த சாதனையை முறியடித்துள்ளது. தென்மேற்கு பருவமழை முடிவடைய இன்னும் 5 நாட்கள் இருப்பதால் மழை பதிவு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
The post வரலாறு காணாத மழை!: சென்னை மீனம்பாக்கத்தில் 75 ஆண்டுகள் இல்லாத அளவாக இந்தாண்டு 88 செ.மீ. மழைப்பொழிவு..!! appeared first on Dinakaran.