தாம்பரம் மாநகராட்சியில் மழைநீர் சூழ்ந்த குடியிருப்பு பகுதிகளை ஆணையர் ஆய்வு

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியில் மழைநீர் சூழ்ந்த குடியிருப்பு பகுதிகளை ஆணையர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், செம்பாக்கம், சிட்லபாக்கம், பெருங்களத்தூர், முடிச்சூர் மற்றும் சுற்றுவட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை கனமழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி, பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

குறிப்பாக தாம்பரம் மாநகராட்சி 3வது மண்டலம் 39வது வார்டு, திருமலை நகர் பகுதியில் உள்ள தெருக்களில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். அதேபோல பீர்க்கன்காரணை பகுதி, பெருங்களத்தூர், குறிஞ்சி நகர், சேலையூர், 65வது வார்டு லட்சுமி நகர் விரைவு பகுதி, குரோம்பேட்டை, நடேசன் நகர் பகுதிகளில் தாழ்வான சாலைகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.

இந்நிலையில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, தேங்கிய மழைநீரை உடனடியாக வெளியேற்ற மாநகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். அப்போது அவர் கூறுகையில், ‘‘தாம்பரம் மாநகராட்சி பகுதியில் தாழ்வான பகுதிகளில் 110 தெருக்களில் சாலை உயர்த்தப்பட்டு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. வழக்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட அந்த வேலைகள் தற்போது வழக்கு முடிந்து விட்டதால், உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு வெள்ள பாதிப்பு ஏற்படாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் செய்து முடிக்கப்படும்,’’ என்றார்.

The post தாம்பரம் மாநகராட்சியில் மழைநீர் சூழ்ந்த குடியிருப்பு பகுதிகளை ஆணையர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: