குறுவை பயிர் பாதிப்பால் மனமுடைந்து இறந்த விவசாயி குடும்பத்திற்கு இழப்பீடு தரவேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: திருக்குவளையில் உயிரிழந்த விவசாயி ராஜ்குமார் மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருக்குவளை அடுத்த திருவாய்மூர் பகுதியைச் சேர்ந்த முன்னோடி விவசாயி எம்.கே. ராஜ்குமார், சுமார் 15 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்திருந்தார். குறுவை நெற்பயிர்கள் நீரின்றி கருகியதால், விவசாயக் கடனை எப்படி அடைப்பது என்ற கவலையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், `தான் பெற்ற பிள்ளையை தானே அழிப்பது போல்’, காய்ந்த குறுவை நெற்பயிர்களை விவசாயி ராஜ்குமாரே டிராக்டர் மூலம் அழிக்கும்போது ஏற்பட்ட மனவேதனையில், தன்னுடைய நிலத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

ராஜ்குமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். குறுவை சாகுபடிக்கு விவசாயி காப்பீடு செய்யாததால், இன்று டெல்டா மாவட்டத்தில், ஸ்டாலினின் சொந்த ஊரான திருக்குவளைக்கு அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் விவசாயி ராஜ்குமார், கருகிய தன்னுடைய நெற்பயிருக்கு காப்பீட்டு நிவாரணமும், அரசின் நிவாரணமும் பெறமுடியாத நிலையில், மனவேதனையில், தன்னுடைய இன்னுயிரை இழந்துள்ளார்.

விவசாயி ராஜ்குமாரின் மரணத்துக்கான முழு பொறுப்பை திமுக அரசு ஏற்க வேண்டும். உயிரிழந்த ராஜ்குமாரின் குடும்பத்துக்கு, உடனடியாக 25 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும்; குறுவை சாகுபடி செய்து பாதிப்படைந்த அனைத்து விவசாய நிலங்களையும் கணக்கிட்டு, ஏக்கர் ஒன்றுக்கு நிவாரணத் தொகையாக 35 ஆயிரம் ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post குறுவை பயிர் பாதிப்பால் மனமுடைந்து இறந்த விவசாயி குடும்பத்திற்கு இழப்பீடு தரவேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: