இந்திய ஒன்றியமே திரும்பி பார்க்கும் முன்னோடி திட்டம்தான் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

கிருஷ்ணகிரி: இந்திய ஒன்றியமே திரும்பி பார்க்கும் முன்னோடி திட்டம்தான் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்நிலையில், இன்று கிருஷ்ணகிரியில் மகளிர் உரிமை தொகைக்கான ஏடிஎம் கார்டுகள் வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், 500 மகளிருக்கு ஏடிஎம் கார்டுகள் வழங்கி பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது;

இந்திய ஒன்றியமே திரும்பி பார்க்கும் முன்னோடி திட்டம்தான் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம். மகளிர் உரிமை திட்டத்தின் மூலம் வழங்கப்படும் டெபிட் கார்டு பெண்களின் வாழ்க்கையை மாற்றும் திருப்புச்சீட்டு. பொருளாதாரத்தில் பெண்கள் முன்னேறுவது குடும்பத்துக்கும், சமூகத்துக்கும் நாட்டுக்கும் முக்கியமானது. பெண்கள் சுதந்திரமாக செயல்பட அரசியல் பேச வேண்டும்; பெண்கள் படிக்க வேண்டும். என்று அமைச்சர் கூறினார்.

மேலும் X தளத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது; ஆண்களும், பெண்களும் சமம் என மகளிருக்கு சொத்துரிமை பெற்றுத்தந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். கலைஞர் அவர்கள் நூற்றாண்டில் அவரது பெயரிலான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 500 மகளிருக்கு டெபிட் கார்டுகளை இன்று வழங்கி வாழ்த்தினோம். உழைக்கும் மகளிருக்கான உதவித் தொகையாக இல்லாமல் உரிமைத் தொகையாக செயல்படுத்தப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் பயன்களையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் சாதனைகளையும் எடுத்துரைத்து உரையாற்றினோம். மகளிர் நலனை பாதுகாக்க கழக அரசு என்றும் துணை நிற்கும். என்று பதிவிட்டுள்ளார்.

The post இந்திய ஒன்றியமே திரும்பி பார்க்கும் முன்னோடி திட்டம்தான் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: