சென்னை: சொத்து, வங்கி கணக்கு விவரங்களை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஷால் தாக்கல் செய்தார். நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அந்த தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென்ற ஒப்பந்தத்தை மீறி, வீரமே வாகை சூடும் என்ற படத்தை வெளியிடுவதாக விஷால் நிறுவனத்திற்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு கடந்த 12ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, நடிகர் விஷால் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நேரில் ஆஜராகியிருந்தார். அப்போது 2021ம் ஆண்டு முதல் கடந்த ஜனவரி வரைக்குமான அனைத்து வங்கி கணக்கு பரிவர்த்தனைகளையும், அவருக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அவற்றை குறித்த தேதியில் தாக்கல் செய்யாததால் மீண்டும் விஷால் ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி விஷால் ஆஜரான நிலையில், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாததால் விஷால் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கூடாது என நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது.
அதுமட்டுமின்றி வங்கிகளிடம் இருந்து கூடுதல் ஆவணம் பெற்று இணையதளம் மூலமாக தாக்கல் செய்யவும் விஷால் தரப்புக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தபோது, விஷால் தரப்பில் ஐடிபிஐ, ஆக்சிஸ், ஹெச்டிஎப்சி, பிஒஐ. ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு உள்ளிட்ட 6 வங்கி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அதேபோல, சொத்து விவகாரங்களும், அசையா சொத்து விவகாரங்களும் தாக்கல் செய்யப்பட்டன. அசையா சொத்து விவகாரங்களை பொறுத்தவரை, 1 இருசக்கர வாகனம், 2 சாதாரண கார்கள், 1 சொகுசு கார் இருப்பதாகவும் ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் முழுமையான தகவல்களை விஷால் தாக்கல் செய்யவில்லை என லைகா தரப்பு புகார் தெரிவித்தது. இந்த விவரங்கள் குறித்து விளக்கம் அளிப்பதற்கு அவகாசம் வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. லைக்கா தரப்பு கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணை செப்டம்பர் 29ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
The post நீதிமன்றம் எச்சரிக்கை எதிரொலி!: சொத்து, வங்கி கணக்கு விவரங்களை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் நடிகர் விஷால்..!! appeared first on Dinakaran.