குமரி : குமரிமாவட்ட எல்லையில், கேரளத்தின் செங்கல் பகுதியில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான சிவலிங்கத்தை கண்டு தரிசிக்க ஏராளமான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் குவிந்து வருகின்றனர்.செங்கல் சிவபார்வதி ஆலயத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள, 111 புள்ளி 2 அடி உயரமும் 8 தளங்களும் கொண்ட சிவலிங்கம் கடந்த 10-ம் தேதி பக்தர்கள் தரிசனத்துக்கு திறக்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய சிவலிங்கத்தை அமைக்கும் பணிகள் கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கிய நிலையில், சுமார் 800-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அங்கேயே தங்கி கட்டுமான பணிகளை நிறைவு செய்தது குறிப்பிடத்தக்கது.
எட்டு அடுக்காக அமைக்கப்பட்டுள்ள சிவலிங்கத்தின் ஒவ்வொரு நிலையிலும் தியான மண்டபங்களை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிவலிங்கத்தின் உள்ளே குகைக்குள் செல்வது போன்றும், பரசுராமர், அகத்தியர் போன்ற பல முனிவர்கள் தவம் செய்வது போன்றும், கடவுள்களின் சிற்பத்துடன் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் தரை தளத்தில் பக்தர்கள் அபிஷேகம் செய்து வழிபடும் வகையில் சிவலிங்க சிலையும், மேல் பகுதியான எட்டாம் நிலையில் கைலாய மலையில் சிவன் பார்வதி குடிகொண்டிருப்பது போல அழகிய சிலையுடன் கட்டப்பட்டுள்ளது.இது உலகின் மிக உயரமான சிவலிங்கமாக இந்தியா புக் ஆப் ரெகார்ட் மற்றும் ஆசியா புக் ஆப் ரெகார்ட் ல் இடம் பெற்றுள்ளது. இதனை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் ஏராளமானோர் வந்து தரிசித்து செல்கின்றனர்.