ஊட்டி,: நீலகிரி மாவட்டத்தில் தற்போது நீரோடை மற்றும் அணைகளின் கரையோரங்களில் கிரேட்டர் கார்மரண்ட் பறவைகள் அதிக அளவு காணப்படுகிறது. இதனை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கண்டு ரசிக்கின்றனர். நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால் இங்கு ஒரு சில பறவைகள் மட்டுமே காணப்படுகிறது. அதேசமயம் சமவெளிப் பகுதிகளில் மற்றும் அண்டை நாடுகளில் காலநிலை மாற்றம் ஏற்படும்போது சில பறவைகள் இடம் பெயர்ந்து இங்கு வருவது வழக்கம். பொதுவாக குளிர் காலமான நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை பல்வேறு பறவை இனங்கள் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து இங்கு வருவது வழக்கமாக உள்ளது.
குறிப்பாக கிரேட்டர் கார்மரண்ட், டபுள் கஸ்டர் போன்ற பறவைகள் இங்குள்ள நீர்நிலைகளில் காணப்படுவது வாடிக்கை. தற்போது பனிக்காலம் துவங்கி உள்ளதாலும், இம்முறை பெய்த மழையால் நீர் நிலைகளில் அதிக தண்ணீர் காணப்படுவதாலும் உணவு மற்றும் இனப்பெருக்கத்திற்காக கிரேட்டர் கார்மரண்ட் பறவைகள் அதிக அளவு வந்துள்ளன. இவைகள் ஆசியா மற்றும் ஐரோப்பிய கண்டத்தில் பல்வேறு பகுதியில் காணப்பட்டாலும் நீலகிரி மாவட்டத்தில் அரிதாகவே காணப்படுகின்றன. இந்நிலையில், ஊட்டி அருகே உள்ள தலைகுந்தா பகுதியில் உள்ள காமராஜ் சாகர் அணையில் தற்போது தண்ணீர் அதிகமாக காணப்படுவதால் அங்குள்ள மீன்களை வேட்டையாடவும் கரையோரங்களில் உள்ள புழுக்களை உண்பதற்காகவும் இந்த பறவைகள் இங்கு முகாமிட்டுள்ளன. ஆங்காங்கே ஓரிரு பறவைகளும், சில இடங்களில் கூட்டமாகவும் காணப்படுகிறது. சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்களும் இந்த பறவைகளை, புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.