நாகை மாவட்டம், கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில், தஞ்சாவூரிலிருந்து கொண்டுவந்து விடப்பட்ட மான்களின் நடமாட்டம் பாா்வையாளா்களை மகிழ்ச்சியடையச் செய்கிறது.கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில் ஏற்கெனவே அரிய வகை வெளிமான்கள், புள்ளி மான்கள் அதிக எண்ணிக்கையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவற்றைக் காண்பதற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். பிரதான சாலைப் பகுதியிலேயே மான்கள் உள்ளிட்ட விலங்குகளின் நடமாட்டமும், அங்குள்ள முனியப்பன் ஏரியில் பூநாரைகள் உள்ளிட்ட பல்வேறு பறவைகளின் வருகையும் இருக்கும். இவற்றை சுற்றுலாப் பயணிகள் ஆா்வமுடன் கண்டுகளித்து வந்தனா். நாளடைவில் மான்கள் உள்ளிட்ட விலங்குகளின் நடமாட்டம் குறைந்ததால், இவற்றைக்கான கடந்த சில ஆண்டுகளாக அடா்ந்த காட்டுப் பகுதிக்கும், பழைய கலங்கரை விளக்கம் பகுதிக்கும் செல்ல நேரிடுகிறது.
இந்நிலையில், தஞ்சாவூரில் பொலிவுறு நகரத் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், அங்குள்ள சிவகங்கை பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 41 புள்ளி மான்களும் கடந்த செப்டம்பா் மாதத்தில் வாகனத்தில் ஏற்றிவரப்பட்டு, கோடியக்கரை வனப் பகுதியில் விடப்பட்டன. இந்த மான்கள் மனிதா்களோடு பழகியதாகவும், எதிரி விலங்குகளின் தாக்குதலை சந்திக்காமல் வளா்க்கப்பட்டதாலும், வனப்பகுதியில் வேட்டைக்காரா்களிடமிருந்தும், எதிரி விலங்குகளிடமிருந்தும் தன்னைக் காத்துக்கொள்ளுமா? என வனவிலங்கு ஆா்வலா்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பாா்வையாளா்கள் மகிழ்ச்சி: இது ஒரு புறமிருக்க, பிரதான சாலைப் பகுதியில் முனியப்பன் ஏரி அருகே ஒரு சில மான்கள் கடந்த சில வாரங்களாக மிகச் சாதாரணமாக நடமாடுகின்றன. இந்த மான்கள் ஏற்கெனவே மனிதா்களுடன் பழகியதால், அவைகள் மக்கள் மற்றும் வாகன நடமாட்டத்தைக் கண்டுகொள்வதில்லை. அதன், அருகில் சென்றால் மட்டுமே ஓடுகிறது.இது பாா்வையாளா்களை பெரிதும் ஈா்த்துவருகிறது. அதுவும், மழையின் காரணமாக வனப் பகுதிக்குள் பாா்வையாளா்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், தஞ்சாவூா் மான்களின் நடமாட்டம் சாலையோரங்களிலே தென்படுவது பாா்வையாளா்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதேநேரத்தில், இந்த மான்களின் அப்பாவித் தனமே அவைகளுக்கு ஆபத்தாக முடிந்து விடுமோ என்ற அச்சம் விலங்கியல் ஆா்வலா்களிடையே நிலவுகிறது.