நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழை காரணமாக இங்குள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்து காணப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. நீலகிரி மாவட்டம், குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் இதமான காலநிலை காணப்படுவதால் இங்குள்ள சிம்ஸ் பூங்கா, லேம்ஸ் ராக், டால்பின் நோஸ், கோத்தகிரியில் உள்ள கேத்ரின் அருவி, நேரு பூங்கா, கொடநாடு காட்சிமுனை, உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இந்த கால நிலையினை அனுபவிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமில்லாது கேரளம், கர்நாடகம் மற்றும் வட மாநிலங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்துக்கு அதிக அளவில் வரத் தொடங்கி உள்ளனர்.
குறிப்பாக ஊட்டியில் உள்ள படகு இல்லம், தொட்டபெட்டா, தாவரவியல் பூங்கா, குன்னூரில் உள்ள டால்பின் நோஸ், லேம்ஸ்ராக், சிம்ஸ் பூங்கா, காட்டேரிப் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை காண்பதற்கு சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிகாலை நேரங்களில் லேசான பனிப்பொழிவும், பகல் நேரங்களில் சில்லென்று இதமான காற்றும் வீசுகிறது. இந்த காலநிலையினை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர்.