மேட்டூர் அணையில் நீர் திறக்கப்படுவதன் மூலம், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை, கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 12 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இந்த ஆண்டில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 100 அடிக்கு மேல் நீடித்து வருவதால், வழக்கம் போல் ஜூன் 12ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அணையை திறக்க உள்ளார். இந்தநிலையில், டெல்டா மாவட்டங்களில் ரூ.80 கோடியில் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை ஜூன் 6ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை என உச்ச நீதிமன்றத்தில் சட்ட போராட்டம் நடத்தி தீர்ப்பை பெற்றுத்தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள் சார்பில் புதுக்கோட்டை சிப்காட்டில் வரும் ஜூன் 5ம் தேதி மாலை பாராட்டு விழா பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் 5ம் தேதி பங்கேற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் விழா முடிந்த பின்னர் காரில் சென்று இரவு திருவாரூரில் தங்குகிறார். மறுநாள் காலை(6ம் தேதி) திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் தூர் வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். பின்னர் முதல்வர காரில் புறப்பட்டு திருச்சி வந்து விமானத்தில் சென்னை செல்ல இருப்பதாக பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் ஆய்வுக்கு வருவதையொட்டி தமிழக பொதுப்பணித்துறை செயலர் சந்தீப் சக்ஷேனா இன்று திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் ஆய்வு செய்கிறார்.
The post டெல்டாவில் தூர்வாரும் பணியை ஜூன் 6ல் ஆய்வு செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: புதுகையில் 5ம் தேதி பாராட்டு விழாவிலும் பங்கேற்பு appeared first on Dinakaran.