தமிழ்நாட்டில் 6.12 கோடி வாக்காளர்கள்; வாக்காளர் பட்டியல் இனி ஒவ்வொரு காலாண்டிலும் புதுப்பிப்பு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

சென்னை: வாக்காளர் பட்டியல் இனி ஒவ்வொரு காலாண்டிலும் புதுப்பிக்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில்; இந்தியத் தேர்தல் ஆணையம், ஜனவரி 1-இல் மட்டுமல்லாது, ஏப்ரல் 1, ஜுலை 1 மற்றும் அக்டோபர் 1 ஆகிய மூன்று தொடர்ச்சியான தகுதியேற்படுத்தும் நாட்களில் இளைஞர்கள் அவர்களது விண்ணப்பங்களை முன்கூட்டியே வழங்குவதற்கு அறிவுறுத்தியுள்ளது. இனி, ஒவ்வொரு காலாண்டிலும் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்படும் மற்றும் 18 வயது நிறைவடைந்த ஆண்டின் அடுத்த காலாண்டில் தகுதியான இளைஞர்கள் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்க்கைக்குப் பிறகு, உரியவருக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும்.

* ஏப்ரல் 1ம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட தொடர் திருத்தக் காலம், 2023 (காலாண்டு 2)-இன் வாக்காளர் பட்டியல் இன்று (31.05.2023) வெளியிடப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க/நீக்க/திருத்த/இடம் மாற்றம் செய்ய விண்ணப்பங்கள் 05.01.2023-ஆம் தேதியிலிருந்து பெறப்படுகின்றன.

* மேற்கண்ட தொடர் திருத்தக் காலம், 2023 (காலாண்டு 2)-இன்போது வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களாக 1,23,064 நபர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 51,295 வாக்காளர்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு முகவரி மாற்றம் செய்துள்ளனர். 9,11,820 வாக்காளர்களின் பெயர்கள் இடப்பெயர்ச்சி, இறப்பு மற்றும் இரட்டைப் பதிவு ஆகிய காரணங்களுக்காக நீக்கப்பட்டுள்ளன. மேலும், 2,60,103 வாக்காளர்களின் பதிவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

* தொடர் திருத்தக் காலம், 2023 (காலாண்டு 2)-இன் (31.05.2023) வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் 6,12,36,696 வாக்காளர்கள் (ஆண் வாக்காளர்கள் 3,01,18,904; பெண் வாக்காளர்கள் 3,11,09,813; மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 7,979 பேர்) பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

* மேலும், 31.05.2023 அன்று வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலின்படி, செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட 27-சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 6,51,077 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 3,26,253; பெண்கள் 3,24,713; மூன்றாம் பாலினத்தவர் 111). இதற்கு அடுத்தப்படியாக கோயம்புத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட
117-கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 4,54,919 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 2,26,489 ; பெண்கள் 2,28,315 ; மூன்றாம் பாலினத்தவர் 115).

* மாறாக, தமிழ்நாட்டிலேயே குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 18-துறைமுகம் சட்டமன்றத் தொகுதி உள்ளது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,69,292 ஆவர். (ஆண்கள் 87,924; பெண்கள் 81,309; மூன்றாம் பாலினத்தவர் 59). இதற்கு அடுத்தப்படியாக இரண்டாமிடத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்திற்குட்பட்ட 164-கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி உள்ளது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,69,750 ஆவர் (ஆண்கள் 83,669 ; பெண்கள் 86,079 ; மூன்றாம் பாலினத்தவர் 2).

* இன்று வெளியிடப்பட்ட தொடர் திருத்தக் காலம், 2023 (காலாண்டு 2)-இன் வாக்காளர் பட்டியலில் 3,400 வெளிநாடுவாழ் வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

* வாக்காளர் பட்டியலில் இதுவரை, 4,34,583 வாக்காளர்கள் அடையாளம் காணப்பட்டு மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் என குறிக்கப்பட்டுள்ளார்கள். மேலும், 18-19 வயதுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 8,80,612.

* வாக்காளர் பட்டியலினை, தலைமைத் தேர்தல் அதிகாரியின் வலைதளமான https://elections.tn.gov.in/ என்ற வலைதளத்திலும் காணலாம். அதில் வாக்காளர்கள் தங்கள் பெயரைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.

* வாக்காளர் பட்டியல் தொடர் திருத்த நடைமுறை தற்போது செயல்பாட்டிலுள்ளது. 01.04.2023 அன்று 18 வயது நிரம்பிய தகுதியுள்ள நபர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் இருந்தால், கீழ்க்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கலாம்:-

* வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தில் படிவம் 6-ஐ சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம்.
* இணையம் மூலமாக
* என்ற வலைதளத்திலும் விண்ணப்பிக்கலாம்.
* கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து “Voter Helpline App” செயலியைத் தரவிறக்கம் செய்து அதன்மூலம் விண்ணப்பிக்கலாம்.

* சிறப்பு சுருக்கமுறைத் திருத்த காலம் மற்றும் தொடர் திருத்த காலங்களில் பெறப்பட்ட முன்கூட்டிய விண்ணப்பங்கள் தொடர் திருத்த காலத்தின் போது அந்தந்த காலாண்டில் உரிய வாக்காளர் பதிவு அலுவலரால் பரிசீலிக்கப்படும்.

* வாக்காளர் பட்டியலின் மென் நகலினை (புகைப்படமின்றி) வாக்காளர் பதிவு அலுவலரிடமிருந்து ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ரூ.100/-வீதம் கட்டணம் செலுத்தி பெறலாம்.

* இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி, மாவட்ட தொடர்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் மாவட்ட தொடர்பு மையங்களை “1950″ என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான தகவல்களை அறியலாம். தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் 1800-4252-1950 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணுடன் மாநிலத் தொடர்பு மையம் இயங்கி வருகின்றது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post தமிழ்நாட்டில் 6.12 கோடி வாக்காளர்கள்; வாக்காளர் பட்டியல் இனி ஒவ்வொரு காலாண்டிலும் புதுப்பிப்பு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு..! appeared first on Dinakaran.

Related Stories: