விழுப்புரம், மார்ச் 28: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே குடிபோதையில் பேருந்தை ஓட்டி இரண்டு பேர் உயிரிழப்புக்கு காரணமான டிரைவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
விழுப்புரம் அருகே பொம்பூரைச் சேர்ந்தவர் ராமு(46). தனியார் பேருந்து ஓட்டுநரான இவர் கடந்த 2016ம் ஆண்டு திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி பேருந்தை ஓட்டி வந்தார். விக்கிரவாண்டி அருகே முண்டியம்பாக்கம் என்ற இடத்தில் வந்தபோது முன்னால் சென்ற வேன்மீது பேருந்து மோதியது. இந்த விபத்தில் வேனில் பயணித்த திருச்செந்தூரை சேர்ந்த சிவமுருகன்(48), சிவசேகர்(51) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். அதில், டிரைவர் ராமு குடி போதையில் பேருந்தை ஓட்டியது தெரியவந்தது. இதையடுத்து டிரைவர் ராமு, நடத்துநர் பண்ருட்டியைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி சுந்தரபாண்டியன் நேற்று தீர்ப்பு கூறினார்.
அதில் குடிபோதையில் பேருந்தை இயக்கி இரண்டு பேர் உயிரிழப்புக்கு காரணமான டிரைவர் ராமுவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்து உத்தரவிட்டார். வழக்கிலிருந்து நடத்துநர் தட்சிணாமூர்த்தி விடுதலை செய்யப்பட்டார். தொடர்ந்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட ராமு போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.