சாயல்குடி: தமிழ் மாதங்களில் பங்குனி மாதம் வசந்தகாலம் என அழைக்கப்படுகிறது. மழைக்காலத்தில் விளைவிக்கப்பட்டு தை, மாசி மாதத்தில் அறுவடை செய்யப்பட்ட புது நெல்லை பாராம்பரிய முறையில் உரலில் வைத்து இடித்து, பச்சரிசி மாவு எடுத்து அதில் பலங்காரங்கள் செய்து அம்மனுக்கு படைக்கப்பட்டு வருகிறது. கணவர் ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளோடு வாழ்வதற்காக பெண்கள் விரதம் இருந்து அம்மனுக்கு புதிய தாலி, மஞ்சள், குங்கும், வளையல், ஆடை, ஆபாரணங்கள் அணிவித்து சுமங்கலி பூஜை நடத்தி வழிபடுவர்.
அதன்படி கடலாடி பாதாள காளியம்மன் கோயிலில் சுமங்கலி பூஜை நேற்று நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு மஞ்சள், திருமஞ்சனம், பச்சரிசி மாவு, பால், குங்குமம், சந்தனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 18 வகை பொருட்களால் அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, சிறப்பு தீப ஆராதனைகள் நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு 1008 வளையல்களால் மாலை அணிவிக்கப்பட்டது. பெண்கள் பாதபூஜை செய்து மஞ்சள், மாங்கல்ய கயிறு கொண்டு மலர், குங்குமம் அர்ச்சனை செய்து சுமங்கலி பூஜை நடத்தினர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.