புதுச்சேரி, மார்ச் 24: உயர் ரக சிகிச்சைகளுக்கு வரும் ஏப்ரல் 1 முதல் கட்டணம் வசூலிக்கப் போவதாக ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கண்காணிப்பாளர், மருத்துவமனையின் அனைத்து துறை தலைவர்களுக்கு அனுப்பிய உத்தரவில் கூறியிருப்பதாவது: ஜிப்மரில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மேம்பட்ட உயர் மதிப்பு விசாரணைகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. “ஆயுஷ்மான் பாரத்” மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் வராத மற்றும் ஏழைகளுக்கான சிவப்பு ரேஷன் கார்டு (புதுச்சேரிக்கானது) இல்லாத நோயாளிகளிடமிருந்து பயன்பாட்டு கட்டணங்கள் ஏப்ரல் 1 முதல் வசூலிக்கப்படும். அத்தொகை நிறுவன வருவாய் கணக்கில் துறைகள் வரவு வைக்க வேண்டும். நோயாளியின் பராமரிப்பின் நலனுக்காக மேம்பட்ட சோதனையை வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. இருப்பினும் இந்த மேம்பட்ட சோதனைகள் விலை உயர்ந்தவை என்பதால், பயனாளிகளிடமிருந்து ஓரளவு வருவாய் கிடைத்தால் மட்டுமே இந்த சேவைகளை நிலையான முறையில் வழங்க முடியும். அடிப்படை பரிசோதனை சேவைகளை இலவசமாக தரப்படும்.