கடும் பனிப்பொழிவு காரணமாக ரஷ்யா- உக்ரைன் இடையே ஒரு வாரம் போர் நிறுத்தம்: டிரம்ப் அறிவிப்பு

மாஸ்கோ: உக்ரைனில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் ரஷ்யா- உக்ரைன் இடையே ஒரு வாரத்திற்கு போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். நேட்டோ அமைப்பில் சேரவும் ஐரோப்பிய யூனியனில் இணையவும் உக்ரைன் முயற்சி எடுத்தது. இதற்கு அண்டை நாடான ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைந்தால் தங்கள் நாட்டுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், உக்ரைன் நேட்டோவில் சேருவதில் உறுதியாக இருந்தது. இதனால், கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. கிட்டதட்ட 4 ஆண்டுகள் ஆன நிலையில் போரை முடிவுக்கு கொண்டு வர முடியவில்லை.

அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தி வருகிறார். மேலும், அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து பல முறை பேச்சு வார்த்தையும் நடத்தி உள்ளார். ஆனால், போரை நிறுத்த முடியவில்லை. இந்த போரில் கிட்டத்தட்ட 20 லட்சம் வீரர்கள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, ரஷ்யாவில் 3.20 லட்சம் வீரர்கள் பலியாகி உள்ளனர். மீதமுள்ளவர்கள் உக்ரைனை சேர்ந்தவர்கள்.

இந்த நிலையில் உக்ரைனில் வரலாறு காணாத அளவுக்கு கடுமையான குளிரும், பனிப்பொழிவும் நிலவி வருகிறது. இது மக்களின் அன்றாட வாழ்க்கையை பெருமளவு பாதித்து உள்ளது. மின் உற்பத்தி நிலையங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், உக்ரைனின் பல நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன. இந்தநிலையில் கீவ் உள்பட உக்ரைன் நகரங்கள் மீது ஒரு வாரத்துக்கு தாக்குதல் நடத்துவதை ரஷ்யா நிறுத்தும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்து உள்ளார். அவர் போர் நிரந்தர நிறுத்தத்துக்காக முயற்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: