காரைக்குடி: புதிதாக தொழில் துவங்குவதை ஊக்குவிக்கும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேம்படுத்தியுள்ளதாக ஒன்றிய அரசு பாராட்டி உள்ளது. உற்பத்தி துறை, வேலைவாய்ப்பில் தமிழ்நாடு முதலிடம் என ஒன்றிய அரசின் பொருளாதார அறிக்கை பாராட்டியுள்ளது. அரசின் திட்டமிட்ட செயல்பாடுகளால் தமிழ்நாடு வளர்ந்துள்ளது. ஒன்றிய அரசின் பொருளாதார அறிக்கையை பிரதமரும், ஆளுநரும் படிக்க வேண்டும் என காரைக்குடியில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக சிவகங்கை மாவட்டத்திற்கு நேற்று முன்தினம் வந்தார்.
நேற்று காலை கானாடுகாத்தான் பேரூராட்சி செட்டிநாட்டில் ரூ.61.78 கோடியில் அமைக்கப்பட்ட செட்டிநாடு வேளாண் கல்லூரியை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அங்கு உள்ள அரங்கத்திற்கு முன்னாள் ஒன்றிய அமைச்சர் சி.சுப்ரமணியன் பெயர்சூட்டி கல்வெட்டை திறந்து வைத்தார். பின்னர், அங்கு மரக்கன்று நட்டதோடு, கல்லூரி வளாகத்தை சுற்றிப்பார்த்தார்.ரூ.100.45 கோடியில் அமைக்கப்பட்டுள்ள சட்டக்கல்லூரியை திறந்து வைத்து மாணவர்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார். கல்லூரி குறித்து அங்கு வைக்கப்பட்டு இருந்த புகைப்பட காட்சியை பார்வையிட்ட முதல்வர், சட்டக்கல்லூரி வகுப்பறைகள், மாதிரி நீதிமன்றம் ஆகியவற்றை பார்வையிட்டதோடு மாணவர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து சட்டக்கல்லூரி வளாகத்தில் காவிரி கூட்டுகுடிநீர் திட்டப்பணிகள் செயல்படும் விதத்தை பார்வையிட்டு அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை துவக்கி வைத்து மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்களை வழங்கி, அவர்களுடன் பேசினார். தொடர்ந்து சட்டக்கல்லூரி வளாகத்தில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ரூ.13.36 கோடியில் 28 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.2,559.50 கோடியில் முடிவுற்ற 49 திட்டப்பணிகளை திறந்து வைத்தார். பின்னர் ரூ.205.06 கோடியில் 15,453 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதன்பிறகு, ரூ.32 கோடியில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவினை திறந்து வைத்து பார்வையிட்டார்.
அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நமது அரசின் திட்டமிட்ட செயல்பாடுகளால் தமிழ்நாடு வளர்ந்துள்ளது. நான் சொல்வது பட்டியல் அல்ல. அது எல்லாம் ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள். அவர்கள் அறிக்கையை மேற்கோள் காட்டி பேசுகிறேன். தமிழ் நாட்டை விமர்சிக்கும் ஆளுநர் ஒன்றிய அரசைத்தான் கேள்வி கேட்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் தமிழ்நாடு வளரவேண்டும் என பேசியுள்ளார். தேர்தலுக்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பேசிவிட்டு போய் உள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒன்றிய அரசின் பொருளாதார அறிக்கை வெளியாகி உள்ளது. ஒன்றிய அரசின் பட்ஜெட்டுக்கு முன்னதாக இந்த அறிக்கை வந்துள்ளது. அதில் தமிழ்நாட்டை மனம் திறந்து பாராட்டியுள்ளனர்.
புதிதாக தொழில் துவங்குவதை ஊக்குவிக்கும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேம்படுத்தியுள்ளதாக ஒன்றிய அரசு பாராட்டி உள்ளது. உற்பத்தி துறை, வேலைவாய்ப்பில் தமிழ்நாடு முதலிடம் என ஒன்றிய அரசின் பொருளாதார அறிக்கை பாராட்டியுள்ளது. பெண்களுக்கான வேலைவாய்ப்பை பெருக்கும் திட்டத்தை தமிழ்நாடு தீட்டி உள்ளது. இது மற்ற மாநிலங்களில் முன்னோடி என பெருமையாக சொல்லியுள்ளனர். இந்த அறிக்கையை பிரதமர், ஆளுநர் படிக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். படிக்காமல் எந்த நிகழ்ச்சிக்கும் போய் விடாதீர்கள். நீங்கள் கொடுத்த அறிக்கை தான். உங்கள் ஒன்றிய அரசு தந்துள்ள அறிக்கை. தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகள் வேறு மாநிலத்துக்கு போய் விட்டது என குற்றம்சாட்டி ஆளுநர் கூறிவரும் நிலையில், ஒன்றிய அரசின் அறிக்கை தமிழ்நாட்டை பாராட்டியுள்ளது. இவ்வாறு பேசினார்.
* இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒன்றிய அரசின் பொருளாதார அறிக்கை வெளியாகி உள்ளது. ஒன்றிய அரசின் பட்ஜெட்டுக்கு முன்னதாக இந்த அறிக்கை வந்துள்ளது. அதில் தமிழ்நாட்டை மனம் திறந்து பாராட்டியுள்ளனர்.
* பெண்களுக்கான வேலைவாய்ப்பை பெருக்கும் திட்டத்தை தமிழ்நாடு தீட்டி உள்ளது. இது மற்ற மாநிலங்களில் முன்னோடி என பெருமையாக சொல்லியுள்ளனர். படிக்காமல் எந்த நிகழ்ச்சிக்கு போய் விடாதீர்கள். நீங்கள் கொடுத்த அறிக்கை தான். உங்கள் ஒன்றிய அரசு தந்துள்ள அறிக்கை.
* 2011, 2016ல் அதிமுக தந்த தேர்தல் வாக்குறுதிகள் என்னாச்சு? பட்டியல் போட்டு எடப்பாடிக்கு கேள்வி
‘தமிழ்நாட்டுக்காக குரல் கொடுக்க முடியாத பத்து தோல்வி பழனிசாமி, நமது அரசு செய்து கொண்டு உள்ள திட்டங்களை காப்பியடித்து புதிய வாக்குறுதிகள் என அள்ளி வீசிக் கொண்டு இருக்கிறார். அவர் ஆட்சிக்கு வரப்போவது இல்லை அது வேறு விஷயம். பிறகு ஏன் கருத்து தெரிவிக்கிறார் என தெரியவில்லை. அதிமுக தேர்தல் அறிக்கையில் சொன்ன எந்த வாக்குறுதியும் கடந்த ஆட்சி காலத்தில் அவர் நிறைவேற்றவில்லை. 2011 அதிமுக தேர்தல் அறிக்கையில், என்ன சொன்னார்கள் என தெரியுமா, சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர சாலை திட்டத்தை சொன்னார்கள் செய்தார்களா.
தென் தமிழ்நாட்டில் ஏரோ பார்க் அமைக்கப்படும் என சொன்னார்களே செய்தார்களா. 58 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு எல்லாம் இலவச பஸ் பாஸ் என கூறினார்கள். அது குறித்து வாயே திறக்காதவர் தான் தற்போது அடுத்த செட் பொய்யை வாக்குறுதியாக வழங்குகிறார். 2016 அதிமுக தேர்தல் அறிக்கையில் சொன்னது பழனிசாமிக்கு நினைவு இருக்கிறதா. அனைத்து ரேசன் கார்டு தாரர்களுக்கும் செல்போன் வழங்கப்படும் என சொன்னீர்களே, எங்கே அந்த போன். பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், பூங்காக்களில் வைபை வசதி செய்யப்படும் என சொன்னார்களே இப்போது அது பற்றி பேச்சு, மூச்சு இல்லை. அனைத்து ஊராட்சிகளிலும் அம்மா இருசக்கர வாகன பயிற்சி மையம் உருவாக்கப்படும் என சொன்னார்கள். சொன்ன அவர்களுக்கு தற்போது மறந்து போய்விட்டது.
அதிமுக ஆட்சியோ, பழனிசாமியோ எப்போதும் சொன்னதை செய்ய மாட்டார்கள் என மக்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் திமுக சொல்வதைத் தான் செய்யும், செய்வதைத்தான் சொல்லுவோம் என மக்களுக்கு தெரியும். நாம் சொல்லிவிட்டு செய்த திட்டங்களுக்கு இணையாக சொல்லாமலேயே பல மக்கள் திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். இன்னும் பல கனவு திட்டங்கள் உள்ளது. அவற்றை நிறைவேற்றும் வாய்ப்பு திராவிட மாடல் 2.0வில் தமிழ்நாட்டு மக்களான நீங்கள் வழங்குவீர்கள் என நம்பிக்கை எனக்கு முழுமையாக உள்ளது. அந்த நம்பிக்கைதான் ஒவ்வொரு மாவட்டத்துக்கு செல்லும் போதும் மக்களின் முகத்தில் பார்க்கிறேன். மக்களின் மகிழ்ச்சியே எனது மகிழ்ச்சி. தமிழ்நாட்டின் வளர்ச்சியே எனது மகிழ்ச்சி. வெல்வோம் ஒன்றாக’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
* ‘365 நாள் வேலைத்திட்டம் என கூட புருடா விடலாமே?’
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘‘கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்த மகாத்மா காந்தி பெயரில் அமைந்துள்ள நூறு நாள் வேலை திட்டத்தை ஒன்றிய அரசு காலி செய்து விட்டு வேறு பெயரில் புது திட்டத்தை கொண்டு வந்துள்ளனர். அவர்களுக்கு மகாத்மா காந்தியையும் பிடிக்காது, மக்கள் நல்லா இருந்தாலும் பிடிக்காது. அதனால் தான் இப்படி செய்கிறார்கள். நடைமுறையில் உள்ள நூறு நாள் திட்டத்தில் 50 நாட்கள் கூட ஒன்றிய அரசு வேலை தருவது கிடையாது. ஏனென்றால் அதற்கான நிதியை ஒழுங்காக விடுவிப்பது இல்லை. இந்நிலையில் 50 நாள் எப்படி மேஜிக் மாதிரி 125 நாட்களாக உயரும். ஒன்றிய அரசு இந்த திட்டத்திற்கு இரண்டரை மடங்கு கூடுதல் நிதி அளிக்க தயாராக உள்ளதா? 125 நாட்கள் என ஒன்றிய அரசு சொல்லியுள்ளதற்கு எந்த கியாரண்டியும் தரவில்லை. அது வெறும் மாயைதான். சொல்வது தான் சொல்கிறீர்கள் அது எதுக்கு வெறும் 125 நாட்களோடு நிறுத்தி விட்டீர்கள், 365 நாட்கள் வேலை என கூட புருடா விடலாமே.’’ என்றார்.
* முதல்வருக்கு பல கோடி நன்றி ப.சிதம்பரம் நெகிழ்ச்சி
விழாவில் ஒன்றிய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது: 2021 தேர்தல் முடிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்தது. அப்போது நானும், நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தியும் தலைமை செயலகத்தில் முதல்வரை சந்தித்தோம். இரண்டு கடிதங்கள் கொடுத்தேன். அதில் கலைஞர் சிவகங்கை மாவட்டத்திற்கு மருத்துவக்கல்லூரி, தலைமை மருத்துவமனை தந்தார்கள். நீங்கள் உங்கள் ஆட்சியில் சட்டக்கல்லூரி, வேளாண் கல்லூரி தர வேண்டும் என கேட்டுக்கொண்டேன். இரண்டு வார்த்தைகளில் அதற்கென்ன செய்து விடலாமே என்றார். அதன்படி, இக்கல்லூரிகள் வர ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் நன்றி. இன்னும் சிவகங்கை மாவட்டம் வளர வேண்டும் என்பது எனது ஆசை. உங்களுடைய ஒத்துழைப்பு இருக்க வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பல கோடி நன்றி. இவ்வாறு பேசினார்.
