கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் 50% பேரின் வாழ்க்கை ‘திருமணம்’ மீறிய உறவு..? இளம்பெண்ணின் வீடியோவால் பெரும் சர்ச்சை

புதுடெல்லி: கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரிவோர் குறித்தும், அவர்களின் திருமணம் குறித்தும் இளம்பெண்ணின் சர்ச்சை வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் நேற்று இளம்பெண் ஒருவர் பேசிய வீடியோ வேகமாக பரவியது. அதில் திருமணம் மற்றும் கார்ப்ரேட் நிறுவன வாழ்க்கை முறை குறித்து அவர் தெரிவித்திருந்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

அந்த வீடியோவில், ‘கார்ப்ரேட் நிறுவனங்களில் பணிபுரியும் 50 சதவீதம் பேர் திருமணத்தை மீறிய உறவுகளில் (ரகசிய பாலியல் உறவு) உள்ளனர். அங்கு பணிபுரியும் ஆண், பெண் பணியாளர்கள் மிக முக்கியமாக இரண்டு காரணங்களுக்காக திருமணம் செய்கிறார்கள். ஒன்று குழந்தை பெற்றுக்கொள்வது, மற்றொன்று வயதான பெற்றோரை கவனித்துக் கொள்வது. குழந்தைகள் வேண்டுமென்றால் தத்தெடுத்துக் கொள்ளலாம், பெற்றோரை கவனிக்க வேலையாட்களை நியமித்துக் கொள்ளலாம். இந்த தேவைகளை மற்ற சேவைகள் மூலம் பூர்த்தி செய்ய முடியும் என்றால், திருமணத்தின் உண்மையான அர்த்தம் என்ன?’ என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. பலரும் அப்பெண்ணின் கருத்தை ‘மேலோட்டமானது’ மற்றும் ‘தவறான கண்ணோட்டம்’ கொண்டது என கடுமையாக விமர்சித்தனர்.

திருமணம் என்பது அன்பு, துணை மற்றும் பகிரப்பட்ட மதிப்புகளை அடிப்படையாகக் கொண்டது என்றும், வெறும் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அல்ல என்றும் அவர்கள் வாதாடினர். மற்றொரு தரப்பினர், இன்றைய காலத்தில் நடக்கும் நவீன திருமணங்களின் வர்த்தகத் தன்மையையும், நகர்ப்புறங்களில் அதிகரித்து வரும் திருமணத்தை மீறிய உறவுகளையும் காட்டும் ‘கசப்பான உண்மை’ என்று ஆதரவு தெரிவித்தனர். மேலும் கார்ப்ரேட் நிறுவன ஊழியர்கள் இந்த 50 சதவீத புள்ளிவிவரம் என்பது மிகைப்படுத்தப்பட்ட கருத்து என்றும், இதுபோன்ற கருத்துகள் தங்களை தவறாக சித்தரிப்பதாகவும் கண்டனம் தெரிவித்தனர்.

Related Stories: