அதிக சர்க்கரை இதய பாதிப்புகளை ஏற்படுத்தும்

நன்றி குங்குமம் டாக்டர்

கவனம் ப்ளீஸ்!

கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய் இருந்த ஒருவர், நெஞ்சுவலி காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்படுகிறார். அவருக்கு மாரடைப்பு இருப்பது கண்டறியப்பட்டு, ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டு, அதில் இதயத்தின் முக்கிய ரத்தக்குழாயில் அடைப்பு இருந்ததால், ஸ்டென்ட் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது சென்னையில் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகளில் அடிக்கடி பார்க்கும் பொதுவான ஒன்றாக சமீபகாலமாக உள்ளது என்கிறார் இதயநோய் நிபுணரும் மூத்த ஆலோசகருமான மருத்துவர் துர்காதேவி. மேலும், சர்க்கரை நோயினால் ஏற்படும் இதய ஆபத்துக்கள் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை.

இந்தியாவில் இளம் வயதினருக்குச் சர்க்கரை நோய் வருவதற்கு முறையற்ற உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை மற்றும் தொப்பை ஆகியவை முக்கிய காரணங்களாக உள்ளன. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இறப்பு மற்றும் உடல் பாதிப்பு ஏற்பட முக்கிய காரணமாக இதய ரத்தக்குழாய் நோய் உள்ளது. இது ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிந்து அடைப்பை உருவாக்குகிறது. இந்தியாவில், மரபணு ரீதியான காரணங்களும், வாழ்க்கை முறை மாற்றங்களும், சர்க்கரை நோய் தொடர்பான இதய நோய்கள் மிக அதிகமாக ஏற்பட முக்கிய பங்கு வகிக்கின்றன. மேற்கத்திய நாடுகளை ஒப்பிடும்போது, இங்குள்ளவர்களுக்கு மிக இளம் வயதிலேயே இந்த நோய் பாதிப்பு ஏற்படுகிறது.

“உலகின் சர்க்கரை நோய் தலைநகரம்” என்று இந்தியா அழைக்கப்படுகிறது. தற்போதைய கணிப்புப்படி 7.7 கோடி முதல் 10.1 கோடி பேர் வரை இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் ஏற்படும் மொத்த இறப்புகளில் மூன்றில் ஒரு பங்கு இதய நோய்களால் ஏற்படுகிறது. இதன் பாதிப்பு விகிதம் தேசிய அளவில் சுமார் 7.5 சதவீதமாக உள்ளது. அதேபோல் பலர் பார்க்க ஒல்லியாக இருந்து உடல் பருமன் குறைவாக இருந்தாலும், இவர்களுக்கு வயிற்றுப் பகுதியில் அதிக கொழுப்பு மற்றும் இன்சுலின் எதிர்ப்புத் தன்மை இருக்கும். இது இதய நோய் வருவதற்கான ஆபத்தை மேலும் அதிகரிக்கிறது.

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் உள்ள சர்க்கரை நோயாளிகள் அதிக ஆபத்தை எதிர்கொள்கின்றனர். இவர்களுக்கு மிக இளம் வயதிலேயே இதய ரத்தக்குழாய் அடைப்பு ஏற்படுவதோடு, இதனால் ஏற்படும் இறப்பு விகிதமும் அதிகமாக உள்ளது.இதன் பாதிப்புகள் பல வகைகளில் வெளிப்படும். இதய ரத்தக்குழாய் நோய், இதய செயலிழப்பு, பக்கவாதம் மற்றும் கால்களுக்குச் செல்லும் ரத்தக்குழாய் பாதிப்பு ஆகியவை இதில் அடங்கும். நரம்பு மண்டல பாதிப்பு காரணமாக, வலி தெரியாமலேயே ரத்த ஓட்டம் குறைவது அல்லது “அமைதியான” மாரடைப்பு ஏற்படுவது என்பது இதை மேலும் சிக்கலான ஒன்றாக்குகிறது.

சர்க்கரை நோய் இதயப் பாதிப்புகளுக்கான காரணம்

நோயாளிகளுக்கு இதயப் பாதிப்புகள் ஏற்பட முதன்மைக் காரணம், ரத்தத்தில் நீண்ட காலமாகக் கூடுதலாக இருக்கும் சர்க்கரையின் அளவுதான். இது ரத்தக் குழாய்களின் உட்புறச் சுவர்களில் ஒருவித அழுத்தத்தை உருவாக்கி, சில தேவையற்ற வேதிப்பொருட்களை உண்டாக்குகிறது. இந்த மாற்றங்களால் ரத்தக் குழாய்களில் வீக்கம் மற்றும் பெரிய தமனிகள் தடித்து, கொழுப்பு படிவதை வேகப்படுத்துகிறது. அத்துடன், இன்சுலின் எதிர்ப்புத் தன்மையால் கொழுப்பின் அளவுகளில் மாற்றம் ஏற்பட்டு, இது ரத்தக்குழாய் அடைப்புகளைச் சிதைத்து மாரடைப்பை உண்டாக்குகிறது.

இந்தியச் சூழல் மற்றும் “ஏசியன் இந்தியன் பினோடைப்”இந்தியாவில் இந்தப் பாதிப்புகள் தீவிரமாக இருப்பதற்குக் காரணம் “ஏசியன் இந்தியன் பினோடைப்” எனப்படும் நமது உடலமைப்பு முறைதான். சாதாரண பி.எம்.ஐ கணக்கீட்டின்படி ஒரு நபர் குண்டாகத் தெரியவில்லை என்றாலும், அவரது மரபணு மற்றும் வளர்சிதை மாற்ற அமைப்பின் காரணமாக வயிற்றுப் பகுதியில் அதிகக் கொழுப்பு சேமிக்கப்படுகிறது. இந்தச் சூழல் இதய ரத்தக்குழாய் நோய்களை விரைவாகத் தூண்டுகிறது. இதனால், ஐரோப்பியர்களை விட இந்தியர்களுக்கு 5 முதல் 10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இளம் வயதிலேயே இதய நோய்கள் ஏற்படுகின்றன.

இதய ரத்தக்குழாய் நோய்: இது சர்க்கரை நோயாளிகளிடம் காணப்படும் மிகவும் பொதுவான பாதிப்பாகும். இதில் பெரும்பாலும் ஒன்றுக்கு மேற்பட்ட ரத்தக் குழாய்களில் அடைப்புகள் ஏற்படுகின்றன. இதன் விளைவாக மாரடைப்பு, நெஞ்சு வலி, இதயச் செயலிழப்பு மற்றும் நடக்கும்போது அல்லது வேலை செய்யும்போது மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன.

நீரிழிவு இதய தசை நோய்: ரத்த நாளங்களில் அடைப்போ அல்லது உயர் ரத்த அழுத்தமோ இல்லாத நிலையிலும், சர்க்கரை நோயினால் இதயத் தசைகளில் மாற்றங்கள் ஏற்பட்டு இதயம் பலவீனமடையலாம். இது இறுதியில் இதயச் செயலிழப்பிற்கு வழிவகுக்கும்.

பக்கவாதம்: சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு அல்லது பாதிப்பு ஏற்படுவதால், ‘இஸ்கிமிக்’ எனப்படும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் மிக அதிகம் உள்ளது.

தீர்வுகள்

முன்கூட்டியே பரிசோதித்தல்: சர்க்கரை நோய் இருப்பது கண்டறியப்பட்ட உடனேயே, இந்தியர்கள் தங்களின் இதய ஆரோக்கியத்தை இசிஜி மற்றும் கொழுப்பின் அளவு மூலம் பரிசோதித்துக் கொள்வது மிகவும் அவசியம் ஆகும்.

தீவிரக் கண்காணிப்பு: இதய பாதிப்புகளைத் தவிர்க்க, ரத்த அழுத்தத்தை 130/80க்கும் குறைவாகவும், கெட்ட கொழுப்பை 100 mg/dL க்கும் குறைவாகவும் வைத்திருக்க வேண்டும். கொழுப்பைக் குறைக்கும் மருந்துகள் மாரடைப்பு அபாயத்தைக் குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

வாழ்க்கை முறை மாற்றங்கள்: வயிற்றுப் பகுதி கொழுப்பைக் குறைக்க, சுத்திகரிக்கப்பட்ட மாவுச்சத்து உணவுகளைக் குறைத்து, பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் பயறு வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதோடு முறையான உடற்பயிற்சியும் செய்ய வேண்டும்.

மருத்துவ சிகிச்சைகள்: சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, இதயத்தைப் பாதுகாக்கும் நவீன மருந்துகளான SGLT2 inhibitors மற்றும் GLP-1 receptor agonists போன்றவற்றை மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ளும்போது இதய பாதிப்பின்றி இருக்கலாம்.

இதிலிருந்து தப்பிக்க சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு ஆகிய மூன்றையும் ஒரே சீராக வைத்திருப்பது மிக முக்கியம். விழிப்புணர்வு, ஆரோக்கியமான உணவு மற்றும் முறையான சிகிச்சை மூலம் இந்த இதய நோய் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

தொகுப்பு: ஸ்ரீ தேவிகுமரேசன்

Related Stories: