நன்றி குங்குமம் டாக்டர்
கடந்த கால் நூற்றாண்டுகளாக தமிழ் சினிமாவின் புன்னகை இளவரசியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சினேகா. 17 – 18 வயதில் சினிமா வாழ்க்கையை தொடங்கிய சினேகா, இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி 44 வயதைத் தொட்ட பின்னரும், நடிக்க வந்த புதிதில் இருந்தது போல அதே உடல்வாகுடன் ஃபிட்டாக முகம் நிறைய புன்னகையோடு இருந்து வருகிறார். தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து வருகிறார் சினேகா. இவையன்றி ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ என்ற ரியாலிட்டி ஷோவில் நடுவர் என பிஸியாக இருக்கிறார். சினேகாவின் ஃபிட்னெஸ் ரகசியங்களை தெரிந்துகொள்வோம்.
ஒர்க்கவுட்ஸ்: நான் சினிமா கரியர் தொடங்கிய நாள் முதலே, உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன். அதற்காக தினசரி பல்வேறு வகையான உடற்பயிற்சிகளை செய்து வருகிறேன். ஆரம்ப காலகட்டத்தில் உடற்பயிற்சி தொடர்பாக பெரியளவில் விழிப்புணர்வு இல்லாதபோதும் ஜும்பா போன்ற பயிற்சிகளை சிடி பதிவுகள் வீடியோவை ஓடவிட்டு அதைப் பார்த்து பயிற்சிகள் செய்து வந்தேன்.
பின்னர், ஜிம் சென்று முறையாக பயிற்சி எடுக்கத் தொடங்கினேன். அந்தவகையில் நான் எல்லா வகையான உடற்பயிற்சிகளையும் செய்துள்ளேன். ஜும்பா தொடங்கி யோகா, ஏரோபிக்ஸ், அதிக உடலுழைப்பு தேவைப்படும் உடற்பயிற்சிகள் என எண்ணற்ற விஷயங்களை செய்துள்ளேன். ஆனால், ஒவ்வொரு பயிற்சியுமே, குறிப்பிட்ட காலத்துக்குப் பின் எனக்கு பயன்தராது. அப்படி பயன் தரவில்லையென்றால், உடனே வேறு பயிற்சிக்கு மாறிவிடுவேன். அந்தவகையில், தற்போது எடைப் பயிற்சிக்கு மாறியுள்ளேன்.
டயட்: சிறுவயதில் இருந்தே உணவில் பெரிதாக ஆர்வமோ அக்கறையோ இல்லாமல் இருந்தேன். சினிமாவுக்கு வந்தபிறகும் உடற்பயிற்சியில் காட்டிய ஆர்வத்தை உணவு விஷயத்தில் அவ்வளவாக காட்டியதில்லை. ஆனால், தற்போது அப்படியில்லை. உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கிறேன். தினமும் மிகக்குறைவான கலோரியே நான் எடுத்துக் கொள்வேன். அதில் மிகவும் கவனமாக இருப்பேன். மேலும் எனது உணவில் கார்ப்ஸ், தாதுச்சத்துக்கள், நார்ச்சத்துக்கள், புரதம் என்ற கலவையாகவே இப்போது எடுத்துக் கொள்கிறேன். கலோரியை எப்படி தவிர்க்கிறேனோ அதுபோலவே சர்க்கரையையும் முற்றிலும் தவிர்த்துவிடுவேன். சர்க்கரை வேண்டும் என்று தோன்றினால் மாதம் ஒருமுறை சர்க்கரை எடுத்துக் கொள்வேன். சர்க்கரையை தவிர்ப்பதே எனக்கு எடை குறைய பெரியளவில் உதவுகிறது.
அதுபோன்று சர்க்கரை மட்டுமன்றி உப்பு மற்றும் மசாலாவிலும் நான் மிக மிக கட்டுப்பாட்டுடன் இருக்கிறேன். இவை அனைத்தையும் தாண்டி, முடிந்தவரை வீட்டில் சமைத்ததை சாப்பிடுவதே எனக்கு பிடிக்கும். துரித உணவுகளுக்கு ஸ்ட்ரிக்ட்டா நோ சொல்லிவிடுவேன். மாதம் ஒருமுறை குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியில் சென்று சாப்பிடுவோம். ஏதாவது ஷூட்டிங், வெளியூர் செல்கிறோம் என்றால் அங்கே சாப்பிடுவேன். அதுவும் கவனத்தோடு இருப்பேன். இதுதான் எனது டயட் சார்ட்.
பியூட்டி டிப்ஸ்: என் சருமத்தை பாதுகாக்க மஞ்சள் மற்றும் கடலை மாவு போன்ற இயற்கையான முறைகளைப் பயன்படுத்தி பராமரிக்கிறேன். மேலும், உடலை நீரேற்றமாக வைத்திருக்க தண்ணீர் நிறைய குடிப்பேன். இதுவே சருமத்தை பாதுகாக்க முக்கியமாகும். இது தவிர்த்து இயற்கையான எண்ணெய்களைப் பயன்படுத்துகிறேன்.
குழந்தை பிறப்புக்கு முன்பு சரும பொலிவுக்காக ஆழமான மூச்சுப்பயிற்சி செய்யும் பழக்கம் எனக்கு இருந்தது. ஆனால் குழந்தைகளின் விளையாட்டுக்கு மத்தியில் இப்போதெல்லாம் அதற்கு நேரமே கிடைப்பதில்லை. அதனால் நிறைய தண்ணீர் குடிக்கிறேன். அதுவே என் சருமத்துக்கு நான் காட்டும் அக்கறை.உடல்நலன் மட்டுமன்றி மனநலனிலும் நாம் கவனமாக இருந்தால் எந்த வயதிலும் ஃபிட்டாக இருக்கலாம். அந்தவகையில் தற்போது என் குழந்தைகளே என் மகிழ்ச்சி. மன அமைதி வேண்டுமென்றால், அவர்களோடு நேரம் செலவிடுவேன். இதுவே எனது ஃபிட்னெஸ் ரகசியங்கள்.
தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்
