இந்திய அளவில் ரயில்களை காலம் தவறாமல் இயக்குவதில் மதுரை கோட்டம் 2ம் இடம்: சரக்கு ரயில்களை வேகமாக இயக்குவதில் முதலிடம்

நெல்லை: இந்திய அளவில் ரயில்களை காலம் தவறாமல் இயக்குவதில் மதுரை கோட்டம் 2ம் இடம் பிடித்துள்ளது. அதேசமயம் சரக்கு ரயில்களை வேகமாக இயக்குவதில் வழக்கம்போல் இவ்வாண்டும் மதுரை கோட்டம் முதலிடம் பெற்றுள்ளது. இந்தியன் ரயில்வேயில் உள்ள 19 மண்டலங்களில் 70 கோட்டங்கள் உள்ளன. இதில் சென்னை, மதுரை, திருச்சி, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் உள்ளிட்ட கோட்டங்களை உள்ளடக்கிய தெற்கு ரயில்வே மண்டலம் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தியன் ரயில்வேக்கு அதிக வருவாயை ஈட்டி தருவதில் தெற்கு ரயில்வேக்கு எப்போதுமே பங்குண்டு. தெற்கு ரயில்வேயிலும் தென்மாவட்டங்களை உள்ளடக்கிய மதுரை கோட்டம் ரயில்களை குறித்த நேரத்தில் இயக்குவதிலும், அதிக வருவாயை ஈட்டி தருவதில் இந்திய அளவில் எப்போதுமே சிறப்பிடம் பெற்று வருகிறது.

அதன்படி கடந்த நிதியாண்டில் ஏப்ரல் தொடங்கி டிசம்பர் வரையிலான 9 மாத காலக்கட்டத்தில் மதுரை கோட்டத்தில் இயக்கப்பட்ட 22 ஆயிரத்து 648 விரைவு ரயில்களும் 97.05 சதவீதம் காலந்தவறாமல் இயக்கப்பட்டுள்ளன. மேலும் 15 ஆயிரத்து 619 முன்பதிவில்லாத ரயில்கள் 98.49 சதவீதம் காலம் தவறாமல் இயக்கப்பட்டு அகில இந்திய அளவில் காலந்தவறாமையில் மதுரை கோட்டம் 2ம் இடத்தை பிடித்துள்ளது. ரயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க 9 மாதங்களில் 895 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பு ரயில்கள் அனைத்தும் நல்ல வருவாயை ஈட்டி தந்துள்ளன. பயணிகளின் வசதிக்காக தாம்பரம் – ராமேஸ்வரம் இடையே ஒரு புதிய ரயில் சேவையும், திருவனந்தபுரம் – தாம்பரம் இடையே சமீபத்தில் அம்ரித் பாரத ரயில் சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பயணிகளின் தேவைக்கேற்ப விரைவு ரயில்களுக்கு 30 கூடுதல் நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதிக வளைவுகள் கொண்ட மலைப்பாதையான தென்காசி – கொல்லம் ரயில் பிரிவைத் தவிர மற்ற பகுதிகளில் ரயில்கள் மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் பாதுகாப்பிற்காக கோவில்பட்டி, மணப்பாறை, காரைக்குடி ஆகிய ரயில் நிலையங்களில் நடை மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும் 11 ரயில் நிலையங்களில் நடை மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. கடந்த 9 மாதங்களில் ரயில் நிலையங்களில் 24 மின் தூக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது கோவில்பட்டியில் மின் தூக்கி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பயணிகள் ரயில்களில் எளிதாக ஏறி இறங்க 24 ரயில் நிலையங்களில் நடைமேடைகளின் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சரக்கு ரயில்களை இயக்குவதில் மதுரை கோட்டத்திற்கு என்றுமே தனிச்சிறப்புண்டு. மணிக்கு 39.58 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கி அகில இந்திய அளவில் சரக்கு ரயில்களை வேகமாக இயக்குவதில் முதல் இடத்தை இவ்வாண்டும் மதுரை கோட்டம் தக்க வைத்துள்ளது. கடந்த 9 மாதங்களில் சரக்கு போக்குவரத்தில் 2.61 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. இது கடந்தாண்டை காட்டிலும் 21.48 சதவீதம் அதிகமாகும். மதுரை ரயில் நிலையத்தில் ரூ.413 கோடி மதிப்பிலும், ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ரூ.112 கோடி மதிப்பிலும், நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ரூ.100 கோடி மதிப்பிலும் மறு சீரமைப்பு பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. 17 ரயில் நிலையங்களை அம்ரித் பாரத் ரயில் நிலையங்களாக தரம் உயர்த்தும் பணிகள்ல, காரைக்குடி, சோழவந்தான், ஸ்ரீவில்லிபுத்தூர், மணப்பாறை ஆகிய ரயில் நிலையங்களில் நிறைவு பெற்றுள்ளன. இந்த பணிகள் மற்ற ரயில் நிலையங்களில் வரும் மே மாதத்திற்குள் நிறைவு பெறும்.

கடந்த 9 மாதங்களில் 63 கிலோமீட்டர் ரயில் பாதைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. 118 கிலோமீட்டர் ரயில் பாதை மற்றும் 82 ரயில் பாதை இணையும் இடங்களில் உள்ள சரளை கற்தூசிகள் அகற்றப்பட்டு பாதைகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் பாதைகளுக்கு இடையே ரயில் பாதை மாறுவதற்கு அமைக்கப்பட்டுள்ள 42 ரயில் பாதை இணைப்புகளும் புதுப்பிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பான பயணத்திற்கு விருதுநகர் – வாஞ்சி மணியாச்சி பிரிவில் 3 கடவுப் பாதைகள் சுரங்கப் பாதைகளாக மாற்றப்பட்டுள்ளன. சாலை வாகனங்களின் பாதுகாப்பிற்காக சைகை விளக்கு கம்ப கட்டுப்பாட்டிலாத 7 கடவுப் பாதைகள் சைகை விளக்கு கம்ப கட்டுப்பாடுள்ள கடவு பாதைகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மேலும் சைகை கம்ப கட்டுப்பாடு இல்லாத 47 கடவுப் பாதைகள் கண்காணிப்பு காமிரா மூலம் ரயில் நிலைய அதிகாரி நேரடி மேற்பார்வைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மனித தவறுகளை தவிர்க்க 12 கடவுப் பாதைகளில் நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

Related Stories: