திருவொற்றியூர் விம்கோ நகர் ரயில் நிலையத்தில் முதன்முறையாக விரைவு ரயில் நிறுத்தம்: பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

திருவொற்றியூர்: சென்னை திருவொற்றியூர், எண்ணூர் மற்றும் மணலி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி மார்க்கமாக வெளிமாநிலங்களுக்கு செல்லக்கூடிய விரைவு ரயில்கள் திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லவேண்டும் என்று கம்யூனிஸ்ட் கவுன்சிலர் ஜெயராமன் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதுசம்பந்தமாக வடசென்னை பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, மத்திய ரயில்வே துறை அமைச்சரை சந்தித்து மனு கொடுத்தார்.

இந்த நிலையில், திருவொற்றியூர் விம்கோ நகரில் வெளிமாநிலங்களுக்கு செல்லக்கூடிய விரைவு ரயில்கள் நின்றுச்செல்வதற்கு வசதியாக இரண்டுபுறமும் நடைமேடையை விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்றுவருகிறது. இன்று காலை முதல்முறையாக ஆந்திர மாநிலம் பித்ரகுண்டாவில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை செல்லும் நீண்ட தூர ரயில் விம்கோ ரயில் நிலையத்தில் நின்று சென்றது. முதல் முறையாக ரயில் நின்றதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். திருவொற்றியூர் சட்டமன்ற பாஜ தேர்தல் பொறுப்பாளர் ஜெய்கணேஷ், தலைமையில் நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் திருவொற்றியூர் நலச்சங்கத்தினர் ரயில் டிரைவருக்கு பொன்னாடை போர்த்தி இனிப்புகள் வழங்கினர். பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கினர்.

‘’வடக்கே செல்லும் அனைத்து ரயில்களும் விம்கோ நகர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என திருவொற்றியூர் நலச்சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: