* கலெக்டர் தர்ப்பகராஜ் தேசிய கொடியேற்றினார்
* ரூ.12.40 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், திருவண்ணாமலை எஸ்பி அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில், குடியரசு தின விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. அதையொட்டி, விழா நடைபெற்ற மைதானத்துக்கு காலை 8 மணிக்கு கலெக்டர் தர்ப்பகராஜ் வருகை தந்தார். அவரை போலீசார் அணிவகுத்து அழைத்து வந்தனர்.
அதைத்தொடர்ந்து, காலை 8.05 மணிக்கு, தேசிய கொடியை கலெக்டர் தர்ப்பகராஜ் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், திறந்த ஜீப்பில் சென்றபடி போலீஸ் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் தர்ப்பகராஜ், எஸ்பி சுதாகர் ஆகியோர் ஏற்றுக்கொண்டனர். மேலும், சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் புறாக்களையும், மூவண்ண பலூன்களையும் வானில் பறக்கவிட்டனர்.
மேலும், சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களுடைய வாரிசுகளுக்கு கைத்தறி ஆடை அணிவித்து, நினைவு பரிசு வழங்கி கலெக்டர் கவுரவித்தார். மேலும், சிறப்பாக பணியாற்றிய 63 போலீசாருக்கு முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் மற்றும் நற்சான்றிதழை வழங்கினார்.
மேலும், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசுத்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், மருத்துவத்துறையினர் மற்றும் தன்னார்வ அமைப்பினர் உள்பட 550 பேருக்கு பாராட்டுச் சான்று மற்றும் நினைவு பரிசை கலெக்டர் வழங்கினார்.
மேலும், வருவாய்த்துறை, சமூக நலத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, தாட்கோ, வேளாண்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில், 2143 பேருக்கு ரூ.12.407 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
விழாவில், டிஆர்ஓ ராம்பிரதீபன், மாவட்ட வன அலுவலர் சுதாகர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, ஏடிஎஸ்பி பழனி, முதன்மைக் கல்வி அலுவலர் முனிராஜ் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை தேரடி வீதியில் உள்ள காந்தி சிலைக்கு கலெக்டர் தர்ப்பகராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பெரணமல்லூர்: பெரணமல்லூர் பேரூராட்சி பகுதியில் குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பெரணமல்லூர் பிடிஓ அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்ற விழாவிற்கு பிடிஓ குப்புசாமி தலைமை தாங்கினார். அலுவலக மேலாளர் பாஸ்கரன் வரவேற்றார். இதில் பிடிஓ பரணிதரன் கலந்து கொண்டு கொடியேற்றினார். நிகழ்ச்சியில் அலுவலக ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
