திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மேயர் பதவி கிடைக்காத அதிருப்தியில் இருந்த பாஜக பெண் தலைவர், பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் அவரை சந்திக்காமல் ஒதுங்கி இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியும், முன்னாள் டிஜிபி-யுமான ஆர்.லேகா ஓய்வுக்குப் பின் பாஜகவில் இணைந்தார். திருவனந்தபுரம் மாநகராட்சி தேர்தலில் சாஸ்தமங்கலம் வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவருக்கு, மேயர் பதவி வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, ஆர்எஸ்எஸ் மற்றும் உள்ளூர் நிர்வாகிகளின் ஆதரவுடன் மேயர் பதவி வி.வி.ராஜேஷ் என்பவருக்கு வழங்கப்பட்டது.
இதனால் ஸ்ரீலேகா கட்சித் தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்து வந்துள்ளார். இதை ஈடுகட்டும் வகையில் வருகிற 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிப்பதாகக் கட்சித் தலைமை கூறியதையும் அவர் நிராகரித்துவிட்டார். இந்நிலையில் நேற்று திருவனந்தபுரம் புதரிக்கண்டம் மைதானத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் மேடையில் இருந்த ஸ்ரீலேகா, பிரதமரை வரவேற்கவோ அல்லது அவரிடம் பேசவோ முயற்சிக்காமல் ஒரு மூலையில் ஒதுங்கி நின்றார். மற்ற தலைவர்கள் பிரதமரை வழியனுப்பச் சென்ற போது, இவர் பாதியிலேயே மேடையை விட்டு இறங்கிச் சென்றது கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து சமூக வலைதளங்களில் அவர், ‘நான் மகிழ்ச்சியாகவே வார்டு கவுன்சிலராகப் பணியாற்றுகிறேன்’ என்று கூறினாலும், பொதுவெளியில் அவர் நடந்து கொண்ட விதம் உட்கட்சி பூசலை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
