டிரம்பின் அமைதி வாரியத்தை புறக்கணித்தது இந்தியா; காஷ்மீர் விவகாரத்தில் மூக்கை நுழைக்க அமெரிக்கா முயற்சி?.. பாகிஸ்தான் இணைந்துள்ளதால் சர்வதேச அளவில் பரபரப்பு

 

டாவோஸ்: அமெரிக்க அதிபர் டிரம்ப் உருவாக்கியுள்ள அமைதி வாரியத்தில் பாகிஸ்தான் இணைந்த நிலையில், பல்வேறு அரசியல் காரணங்களுக்காக இந்தியா அந்த நிகழ்வைப் புறக்கணித்துள்ளது பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காசா மற்றும் உலகளாவிய மோதல்களுக்குத் தீர்வு காணும் வகையில் ‘அமைதி வாரியம்’ என்ற புதிய அமைப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் தொடங்கி வைத்தார். இந்த வாரியத்தில் இணைவதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த வாரியத்தில் இணைவது இந்தியாவின் இறையாண்மைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கருதி இந்தியா அந்த அழைப்பை நிராகரித்துவிட்டது.

அதேவேளையில், அமெரிக்காவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தவும், காசா தொடர்பான கொள்கையில் ஒன்றிணையவும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்த வாரியத்தில் நிறுவன உறுப்பினராக ஆர்வத்துடன் இணைந்தார். சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் துருக்கி உட்பட 19 நாடுகளின் தலைவர்களுடன் அவரும் மேடையில் தோன்றினார். இந்தியா இந்த நிகழ்ச்சியைப் புறக்கணித்ததற்குக் குறிப்பிட்ட சில அரசியல் காரணங்கள் கூறப்படுகின்றன. நிகழ்ச்சியின் போது பிரதமர் மோடியையும், பாகிஸ்தான் பிரதமரையும் கை குலுக்க வைத்து, தான் ஒரு சமாதானத் தூதர் என்பதைப் போலக் காட்டிக் கொள்ள டிரம்ப் திட்டமிட்டிருக்கலாம் என இந்திய அதிகாரிகள் கருதினர்.

மேலும், ‘2025ம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தத்தை நானே முன்னின்று நடத்தினேன்’ என டிரம்ப் பலமுறை கூறியதை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. காஷ்மீர் போன்ற உள்நாட்டு விவகாரங்களில் இந்த அமைப்பு தலையிடக்கூடும் என்ற அச்சம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் இல்லாதது போன்ற காரணங்களால், இந்தியா ‘பொறுத்திருந்து பார்ப்போம்’ என்ற முடிவை எடுத்துள்ளது. இந்தியாவைப் போலவே இங்கிலாந்து, சீனா, ரஷ்யா மற்றும் ஜெர்மனி ஆகிய முக்கிய நாடுகளும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் விழாவைப் புறக்கணித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலின் எதிர்ப்பை மீறி சேர்த்தது ஏன்?
காசா மறுசீரமைப்புக்காக உருவாக்கப்படும் அமைதிக் குழுவில் பாகிஸ்தான் இடம்பெறுவதற்கு இஸ்ரேல் ஆரம்பம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இஸ்ரேலுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே முறையான தூதராக உறவுகள் இல்லாத நிலையில், ‘தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் காசாவில் படைகளை நிறுத்துவதை ஏற்க முடியாது; ஹமாஸ் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா போன்ற அமைப்புகளுடன் பாகிஸ்தானுக்குத் தொடர்பு உள்ளது’ என்று இஸ்ரேல் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்தது. இதேபோல் ஹமாஸ் தலைவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதாகக் கூறி துருக்கி மற்றும் கத்தார் நாடுகளைச் சேர்ப்பதற்கும் இஸ்ரேல் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

ஆனால் இஸ்ரேலின் இந்தக் கோரிக்கையை அமெரிக்க வெளியுறவுத்துறை திட்டவட்டமாக நிராகரித்து விட்டது. இந்நிலையில் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், டிரம்ப் தலைமையிலான ‘அமைதி வாரியத்தில்’ பாகிஸ்தான் அதிகாரப்பூர்வ உறுப்பினராக இணைந்தது. இருப்பினும் இஸ்ரேலின் பாதுகாப்பு தொடர்பான ஆட்சேபனை காரணமாக, காசாவிற்குள் நுழையும் சர்வதேசப் படையில் பாகிஸ்தான் ராணுவம் இடம்பெற வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இஸ்ரேலின் கவலைகளைப் புறக்கணித்துத் தனது நட்பு நாடான பாகிஸ்தானை டிரம்ப் இக்குழுவில் சேர்த்திருப்பது சர்வதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிரம்பை கிண்டலடித்த எலான் மஸ்க்
சுவிட்சர்லாந்தில் நடக்கும் உலகப் பொருளாதார மன்றத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சர்வதேச தொழிலதிபர் எலான் மஸ்க் கலந்து கொண்டு பேசுகையில், டிரம்ப் உருவாக்கியுள்ள இந்த அமைதிக் குழுவின் ஆங்கிலப் பெயரை வைத்துச் சொற்கள் மூலம் விளையாடினார். அப்போது அவர், ‘அமைதி உச்சிமாநாடு பற்றி நான் முதலில் கேள்விப்பட்டபோது, அந்தப் பெயர் அமைதிக்கானது தானா அல்லது துண்டுக்கானதா என்று குழப்பமடைந்தேன்; கிரீன்லாந்தின் ஒரு சிறிய துண்டு அல்லது வெனிசுலாவின் ஒரு சிறிய துண்டு என்று நினைத்தேன்’ என்று டிரம்ப் முன்பு கிரீன்லாந்தை வாங்க முயன்றதையும், வெனிசுலா விவகாரத்தையும் மறைமுகமாகக் குறிப்பிட்டுப் பேசினார். அமைதி என்று பொருள்படும் பீஸ் (Peace) என்ற ஆங்கில வார்த்தையையும், நிலத்தின் துண்டு என்று பொருள்படும் பீஸ் (Piece) என்ற வார்த்தையையும் ஒப்பிட்டு எலான் மஸ்க் இவ்வாறு கூறியதும் அங்கிருந்த பார்வையாளர்கள் மத்தியில் பலத்த சிரிப்பலை உருவானது.

Related Stories: