தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதில் உள்ள விதிமுறைகளில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

 

சென்னை: ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதில் உள்ள சிரமங்களை களையும் பொருட்டு விதிமுறைகளில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பாரம்பரிய வீர விளையாட்டான ஏறுதழுவுதல் என்னும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது. ஜல்லிக்கட்டுக்காகவே மதுரை அலங்காநல்லூரில் “கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்” அமைக்கப்பட்டு அனைவரும் பெருமைகொள்ளும் வகையில் அங்கே ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது.

17-01-2026 அன்று அலங்காநல்லூர் பகுதியில் நடைபெற்ற ஏறுதழுவுதல் போட்டியை பார்வையிட்ட பின் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கு பெற்று அதிகக் காளைகளை அடக்கிச் சிறந்து விளங்கக்கூடிய வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கால்நடை பராமரிப்புத் துறையில் உரிய அரசுப் பணியிடங்களில் பணியமர்த்திட வழிவகை செய்யப்படும் என்றும், உலகப் புகழ் பெற்ற தமிழ்நாட்டின் ஜல்லிக்கட்டுக் காளைகளுக்கான சிறந்த உயர்தர சிகிச்சை மற்றும் பயிற்சி மையம் 2 கோடி ரூபாய் செலவில் அலங்காநல்லூர் பகுதியில் அமைக்கப்படும் என்றும் இரண்டு சிறப்பான அறிவிப்புகளை அறிவித்தார்கள்.

மேலும், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதில் இருக்கும் ஒரு சில சிரமங்கள் அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து அவற்றைப் பரிசீலித்து காளைகளுக்கு எவ்வித துன்பமும் நேராவண்ணமும், ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு இடையூறு இல்லாத வண்ணமும் தமிழ்நாடு அரசு சில தளர்வுகளை வழங்கிட நடவடிக்கை எடுத்துள்ளது.

உள்ளூர் காளைகளும், வீரர்களும் பங்குபெறுவதை உறுதி செய்திட ஏதுவாக, ஆன்லைன் பதிவு முறையினை மாற்றி, அந்தந்த மாவட்ட அளவில் முடிவு செய்துகொள்ள வழிவகை செய்யப்படும். போட்டிகளின் போது இறக்க நேரிடும் மாடுபிடி வீரர்களுக்கு உரிய நிவாரணம் அரசு சார்பில் வழங்கப்படுகிறது. எனவே, மாடுபிடி வீரர்களுக்கு ஆயுள் காப்பீடு கட்டாயம் என்ற விதி தளர்த்தப்படும். இதுவரை ஜல்லிக்கட்டு போட்டி நடத்துபவர்களிடம் முத்திரைத் தாளில் பெறப்பட்டு வந்த உறுதிமொழிப் பத்திரம் என்ற நடைமுறை இரத்து செய்யப்படும்.

தமிழ்நாட்டின் பாரம்பரியத்தைக் காப்பதிலும், ஜல்லிக்கட்டு விளையாட்டினைத் தொடர்ந்து ஊக்குவித்திடவும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்படும்.

Related Stories: