நியூஸ் பைட்ஸ்

நன்றி குங்குமம் தோழி

சோலோ டேட்டிங்

இந்திய இளசுகளின் மத்தியில் ‘சோலோ டேட்டிங்’ எனும் புது கலாச்சாரம் அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெரிய உணவகங்களுக்குச் சென்று தனியாக உணவருந்துவது, புகழ்பெற்ற சுற்றுலாப் பகுதிகளுக்குத் தனியாகச் செல்வது, தனியாக திரைப்படம் பார்ப்பது என்று மக்கள் கூட்டம் கூட்டமாகச் செல்லும் எல்லா இடங்களுக்கும் தனியாகச் செல்வதைத்தான் சோலோ டேட்டிங் என்கின்றனர்.

இதனால் புகழ்பெற்ற பல உணவகங்கள் தனியாக வருபவர்களுக்காக ஒற்றை இருக்கை டேபிள்களைக் கூட ஏற்படுத்தியிருக்கின்றன. இது போக பயண சேவைகளை வழங்கும் நிறுவனங்களும் தனி நபர்களுக்காக சிறப்பான வசதிகளை மலிவு விலையில் உருவாக்கியிருக்கின்றன. வரும் நாட்களில் சோலோ டேட்டிங் செல்பவர்களுக்காகவே பிரத்யேகமான வசதிகள் உருவாகலாம் என்கின்றனர்.

வைரல் கார்

புதுப்புது கார்களை கண்டுபிடித்து அசத்தும் ஒரு மியூசியம், சுதா கார் மியூசியம். ஹைதராபாத்தில் அமைந்துள்ள இந்த மியூசியத்தின் சமீபத்திய கண்டுபிடிப்புதான், கிரிக்கெட் பேட் கார். 21 அடி நீளமுள்ள கிரிக்கெட் பேட்டில் எஞ்சின் உட்பட்ட காருக்குத் தேவையான உபகரணங்களைப் பொருத்தி, ஃபார்முலா ஒன் காரின் இன்ஸ்பிரேஷனில், கிரிக்கெட் பேட் காரை வடிவமைத்திருக்கிறது இந்த மியூசியம். பெட்ரோல் டேங்க், இண்டிகேட்டர்ஸ், முன் மற்றும் பின் விளக்குகள் என ஆச்சர்யப்படுத்தும் இந்த கார் 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடியது. மியூசியத்துக்கு வரும் பார்வையாளர்களைக் கவர்வதற்காக இந்த காரை காட்சிக்கு வைத்திருக்கின்றனர். மியூசியத்தைத் தாண்டி வெளியில் இந்த கார் வந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைன் ஆபத்து

உலகம் முழுவதும் கொரோனா லாக்டவுன் காலங்களில் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தோம். பள்ளி, கல்லூரிகள் கூட ஆன்லைன் மூலமாகத்தான் இயங்கின. வேலைகளைக் கூட ஆன்லைன் வழியாக வீட்டிலிருந்தே செய்தோம். நண்பர்கள், உறவினர்களைக் கூட ஆன்லைன் மூலமாக மட்டுமே தொடர்பு கொண்டோம். பலர் மருத்துவ ஆலோசனைகளை ஆன்லைனில்தான் பெற்றனர். திருமணங்கள், வரவேற்பு நிகழ்ச்சிகள், துக்க நிகழ்வுகள் கூட ஆன்லைனில் அரங்கேறின. வெளியில் எங்கேயும் செல்ல முடியாத சூழலால் முழு நேரமும் இணையத்தைப் பயன்படுத்தி ஆன்லைனில் மூழ்கிக் கிடக்க வேண்டிய நிலை.

இதனால் முன்பைவிட, லாக்டவுன் காலங்களில் ஆன்லைன் பயன்பாடு மிக அதிகமாக இருந்தது. லாக்டவுன் முடிந்து உலகமே இயல்பு நிலைக்குத் திரும்பி இரண்டு, மூன்று வருடங்களாகிவிட்டன. இன்று மக்கள் ஆன்லைனில் மூழ்கிக் கிடப்பது குறைந்திருக்கும் என்றுதானே நினைப்போம். ஆனால், அப்படியில்லை. ஆம்; லாக்டவுன் காலத்தைவிட, இன்று மக்கள் தினமும் அதிக நேரம் ஆன்லைனில் மூழ்கிக் கிடக்கின்றனர் என்று அதிர்ச்சியளிக்கின்றன சமீபத்திய ஆய்வுகள். இது மிகவும் ஆபத்தான போக்கு என்றும் எச்சரிக்கை செய்கின்றனர்.

மருத்துவ வள்ளல்

வாழ்க்கை முழுவதும் சேகரித்த, 3.4 கோடி ரூபாயை எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொடையாக வழங்கியிருக்கிறார் லட்சுமி பாய் என்கிற மகப்பேறு மருத்துவர். அதுவும் தனது 100வது பிறந்த நாளில் வழங்கியிருக்கிறார். கடந்த 1950ம் வருடம் ஒடிசாவில் உள்ள சுந்தர்கரில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் தனது மருத்துவப் பணியை ஆரம்பித்தார் லட்சுமி. பிறகு ஒடிசாவின் எம்கேசிஜி மருத்துவக் கல்லூரியின் மகப்பேறு மருத்துவம் மற்றும் மகளிர் நலவியல் துறையின் தலைவராகவும், பேராசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

தனது 36 வருட மருத்துவச் சேவைக்காக ஏராளமான விருதுகளையும் வாங்கியிருக்கிறார் லட்சுமி. இந்தியாவின் சிறந்த குடிமகன், பாரத் ஜோதி விருது, இன்டர்நேஷன் ஃபிரண்ட்ஷிப் சொசைட்டி விருது போன்றவை அதில் குறிப்பிடத்தக்கது. கடந்த டிசம்பர் 5ம் தேதி, தனது 100வது பிறந்த நாளில் புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் பெண்களுக்கான புற்றுநோய் பிரிவுக்கு 3.4 கோடி ரூபாயை கொடையாக வழங்கியிருக்கிறார். புற்றுநோய் சிகிச்சைப் பெற வசதியில்லாத பெண்களுக்கு இந்த தொகையைப் பயன்படுத்தும்படி வேண்டுகோளும் வைத்திருக்கிறார்.

களரிப்பயட்டு சாம்பியன்

கேரளாவில் தோன்றிய முக்கியமான தற்காப்புக்கலை, களரிப்பயட்டு. 3000 வருடங்களுக்கு முன்பு தோன்றிய களரியை தற்காப்புக் கலைகளின் தாய் என்று புகழ்கின்றனர். இன்றும் கூட களரிப்பயட்டு உயிர்ப்புடன் இருப்பதே அதன் தனித்துவத்துக்கு சான்று. இத்தகைய களரிப்பயட்டில் சாம்பியனாக வலம் வருகிறார் சைலஜா. அவரைப் பற்றித்தான் கேரளாவில் களரிப்பயட்டு வட்டத்தில் ஹாட் டாக். சமீபத்தில் தில்லி அளவில் ஒரு களரிப்பயட்டு போட்டி நடந்தது. அதில் கலந்து கொண்ட சைலஜா வெள்ளிப் பதக்கத்தை தன்வசமாக்கியிருக்கிறார். ‘‘உடலை மட்டுமல்லாமல், மனதையும் களரி வலுவாக்குகிறது’’ என்கிற சைலஜாவுக்கு இப்போது வயது 55.

தொகுப்பு: த.சக்திவேல்

Related Stories: