நன்றி குங்குமம் தோழி
ஒரு மாநிலத்துக்குள் உருவாகி அந்த மாநிலத்திலேயே முடிகிற அற்புத ஆறு தாமிரபரணி. தமிழ்நாட்டின் மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பொருநை நாகரிகம் இந்த நதிக்கரையில்தான் தோன்றியது.மனிதக் கழிவுகளில் தொடங்கி, குடியிருப்புகளின் கழிவுகள், தொழிற்சாலைகளின் கழிவுகள் என மிகப்பெரும் தாக்குதலுக்கு உள்ளாகும் தாமிரபரணி ஆறு அதன் தூய்மையை இழப்பது பாவங்களை போக்கும் ஸ்தலமான பாபநாசத்தில் இருந்தே.
பாபநாசம் வரும் பக்தர்கள் ஆற்றில் நீராடிவிட்டு, உடுத்தியுள்ள துணிகளை ஆற்றில் அப்படியே விட்டுச் செல்கின்றனர். விளைவு, வாரத்துக்கு சுமார் 100 மூட்டைகள், மாசத்துக்கு 400 மூட்டை அளவு துணிகள் ஆற்று நீரில் தேங்கி நீரோட்டத்தை தடுப்பதுடன், நதியின் சூழலையும் கொல்கிறது.சூழல் மாசுபடுவதை தடுக்க, சென்னை எக்ஸ்னோரா அமைப்புடன் இங்குள்ள Human Mirror Trust என்கிற தொண்டு நிறுவனம் இணைந்து, தாமிரபரணி ஆற்றில் வீசப்படும் துணிகளை சேகரித்து, பெண்கள் குழு மூலம், மறுசுழற்சி முறையில் கால் மிதியடிகள் தயாரிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். இந்தப் பெண்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளர் தமிழரசியிடம் பேசியதில்…
‘‘புனித நதி, மெல்ல மாசுபாட்டின் பிடியில் சிக்கியுள்ளது. இந்த மாசுபாட்டை வாழ்வாதாரமாக மாத்துறாங்க எங்கள் பெண்கள் குழு. சற்று கற்பனை செய்து பாருங்கள். ஆயிரக்கணக்கான மக்கள் வந்து பிரார்த்தனை செய்கிற ஒரு இடம். ஈமச் சடங்குகளை முடித்துவிட்டு, மக்கள் நம்பிக்கை என்ற பெயரில் ஆற்றில் விடப்படும் ஆயிரக்கணக்கான துணிகள், இந்த புனித நதியை மூச்சுத் திணற வைக்கிறது. அந்தத் துணிகளை சேகரிக்க மூன்று ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் கொண்ட குழு இருக்கிறார்கள்.
இவர்கள் நேரடியாக ஆற்றில் இறங்கியும், நீண்ட கம்பிகளை பயன்படுத்தியும் சேலை, சட்டை, பாவாடை, டவுசர், சுடிதார் என விதவிதமாய் தண்ணீருக்குள் புதைந்து கிடக்கும் துணிகளையும் முகம் சுளிக்காமல் சேகரித்து மூட்டை கட்டுவார்கள். வார நாட்களில், ஒரு நாளைக்கு 20 மூட்டை துணிகளும், சனி, ஞாயிறு, அமாவாசை நாட்கள் என்றால் கிட்டத்தட்ட 100 மூட்டைகள். அதாவது, மாதத்திற்கு 10 டன்’’ என நம்மை மலைக்க வைத்தார் தமிழரசி.
‘‘இந்தத் துணி மூட்டைகளை அருகிலுள்ள அருணாச்சலபுரம் என்கிற இடத்துக்கு எடுத்துச்சென்று, எங்கள் குழு பெண்கள் மூலம், கிருமி நாசினி ெகாண்டு துவைத்து, வெயிலில் காய வைத்து, பிறகு தரம் பிரிக்கிறோம். சேலை, வேட்டி, லுங்கி, பாவாடை போன்ற காட்டன் துணிகளில் கால் மிதியடிகளை தயாரிக்கிறோம். பாலிஸ்டர் போன்ற பிற துணிகளை மிஷினில் அரைத்து மறு பயன்பாட்டிற்கு அனுப்பப்படுகிறது.
மிதியடி செய்ய துணிகளை வெட்டுவதற்கென இரண்டு பெண்கள் உள்ளனர். இவர்கள் நாளொன்றுக்கு 40 கிலோ துணிகளை வெட்டி வி.கே.புரத்தில் உள்ள மிதியடி தயாரிப்பு யூனிட்டுக்கு அனுப்புகின்றனர். அங்கு எங்களிடம் பயிற்சி பெற்ற 15 பெண்கள் கைத்தறி இயந்திரத்தில் மிதியடியினை தயாரிப்பார்கள். பார்க்க முகம் சுளிக்கும் வகையில் சேரும் சகதியுமாக இருந்த இந்தத் துணிகளை எங்களின் பெண்கள் குழு வண்ணமயமான கால் மிதியடிகளாக மாற்றிவிடுகிறார்கள்.
துணி சேகரிப்பவர்களில் தொடங்கி மிதியடி நெய்பவர் வரை அனைவருமே இதில் ஒருவரை ஒருவர் சார்ந்து குழுவாய் வேலை செய்கிறார்கள். நாள் ஒன்றுக்கு தலா 200 கால் மிதியடிகள் என மாதத்திற்கு சராசரியாய் 5000 கால் மிதிகள் தயாராகிறது. இவை அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, சேரன்மகாதேவி பகுதிகளில் உள்ள கடைகள், சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதற்கான மார்க்கெட்டிங் பணியையும் பெண்களே கவனிக்கின்றோம்.
ஒரு கால் மிதியடி தயாரிக்க மின்சாரம், நூல், உழைப்பு என ஆகும் அடக்க விலை 23 ரூபாய். 25ல் இருந்து 30 ரூபாய்க்கு விற்றால் இது நியாயமான லாபம். ஆனால், அடக்க விலையில் பாதிக்கும் கம்மியாக கேட்கிறார்கள். கால் மிதியடிகளை விற்று வருகிற பணம்தான் 25 பேருக்கு சம்பளமாக கொடுக்கப்படுது. ஒரு நதியை காப்பாற்றும் உழைப்புக்கு இங்கு மதிப்பில்லை. இந்த கால் மிதியடிகள், சுத்தமாகிற ஜீவ நதியின் சான்று என்பதைத் தாண்டி, 25 குடும்பங்களோட வாழ்வாதாரத்தின் அடையாளமும்’’ என முடித்தவரை தொடர்ந்து, இந்த அமைப்பின் சி.எஸ்.ஆர். ஆலோசகராக சென்னையில் இயங்கி வரும் ராதா ஸ்ரீனிவாசனிடம் பேசியதில்…
‘‘இந்த திட்டம் தாமிரபரணி நதியை பாதுகாப்பதோடு உள்ளூர் பெண்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கிறது. இதுவொரு செல்ஃப் சஸ்டயினபிள் மாடல். கழிவிலிருந்தே வருமானம். அந்த வருமானத்தில் இருந்து வேலை வாய்ப்பு. தாமிரபரணி ஆற்றை மாசுபடுத்துகிற ஒரு பொருள், நமது வீடுகளை சுத்தமாக வைக்க உதவும் மதிப்புக்கூட்டும் பொருளா மாறுகிறது. இந்த மாற்றம்தான் திட்டத்தோட வெற்றி.
பாபநாசம் படித்துறைகள் பெரும்பாலும் கோயில்களோட இணைஞ்சிருப்பதால், இந்து சமய அறநிலையத்துறை இந்த விஷயத்தை கையாள வேண்டியிருக்கு. மக்களின் நம்பிக்கையை நம்மால் தடுக்க முடியாது. அதனால் ஒலி பெருக்கி மூலம் ‘துணிகளை ஆற்றில் போடாதீங்க… அதுக்கென ஆங்காங்கு வைத்திருக்கும் தொட்டிகளில் போடுங்க, துணிகளை ஆற்றில் போட்டால் ஆயிரம் ரூபாய் அபராதம்’ என அறிவிப்புகளை தொடர்ந்து செய்தாலும், மக்களின் பல வருஷ பழக்கத்தை மாற்றுவது சுலபமாக இல்லை. அபராதமோ, அறிவிப்போ ஆழமான நம்பிக்கையை மாத்திடாது இல்லையா? அதையும் மீறி ஆத்துல துணிகளை போடுறாங்க. இந்தத் துணிகளை ஆத்துல இருந்து அகற்ற வருடாந்தர ஏலமும் விடுறாங்க. துணிகளை எடுக்கிற இந்த வேலை ஒரு தொடர் தேவையாகவே அங்கிருக்கு.
இந்த இடத்தில்தான் எங்கள் அமைப்பு பெண்களின் பங்களிப்பு உள்ள வருது. எங்கள் மறு சுழற்சி மையத்தில சுமார் 25 பெண்கள் வேலை செய்கிறார்கள். கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றின் நிதி உதவியில் 15 கைத்தறி இயந்திரங்களை வாங்கி, சுய உதவிக் குழு பெண்களுக்கு பயிற்சி கொடுத்து, அவர்கள் மூலம் கால் மிதியடிகளை நாங்கள் தயாரிக்கிறோம். எந்த ஒரு திட்டத்தோட வெற்றியும் அது தன்னைத்தானே தக்க வச்சுக்கிறதுலதான் இருக்கிறது. ஒரு பொருளை உருவாக்குறது பாதி சவால்னா அதை விக்கிறது மீதி சவால். இது கைவினைப் பொருட்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்னைதான் என்றாலும், உள்ளூர் கடைகளில் இது ஆத்துல இருந்து எடுக்கப்பட்ட துணிங்கிறது தெரியும். ஆனால், அதுக்குப் பின்னால இருக்கற உழைப்பு, சுத்தம் செய்தது, நெசவு செஞ்சதென மதிப்புக்கூட்டப்பட்ட விஷயங்களை பார்க்கத் தவறுறாங்க’’ என்கிறார் ராதா.
‘‘பெண்கள் குழுவை வைத்து கால் மிதியடிகள் மட்டுமின்றி கூடுதலாக டேபிள் ரன்னர்கள், டேபிள் மேட்கள், மருத்துவமனை வாசல்களில் போடும் நீளமான மிதியடிகளும் தயாரிக்க ஆரம்பித்துள்ளோம். இதற்கென ஐந்து புதிய இயந்திரங்களை வாங்க இருக்கிறோம். சின்னதாகிவிட்ட துணி துண்டுகளையும் வீணாக்காமல் பஞ்சாய் அரைக்கும் இயந்திரத்தை வாங்கும் எண்ணமும் உள்ளது. இதன் மூலம் கிட்டத்தட்ட 100% மறுசுழற்சி சாத்தியமாகும். அரைக்கப்பட்ட பஞ்சுகள் தலையணை மற்றும் பொம்மைகளை நிரப்ப பயன்படும்.
இயந்திரங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் நிறுவி முழுமையான மறுசுழற்சி மையமாக உருவாக்க மாவட்ட ஆட்சியரிடம் இடம் கேட்டுள்ளோம். இது வெறும் நதியை சுத்தம் செய்கிற திட்டமில்லை. பெண்களோட வாழ்வாதாரத்தை மேம்படுத்துற, அவங்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்கிற, கழிவுகளுக்கு மதிப்புக்கூட்டுற முழுமையான சமூகப் பொருளாதார முயற்சி’’ என்றவாறு விடைபெற்றார்.
நதியின் அழிவுக்கு பொறுப்பு யார்?
‘‘பொதிகை மலையில் உருவாகி, சுமார் 25 கிலோ மீட்டர் தூரம் அடர்வனப் பகுதியில் ஓடி, பாபநாசம் காரையாறு அணைக்கு வரும் தாமிரபரணி மலையிலிருந்து இறங்கி மக்கள் நடமாடுகிற பகுதிக்கு வந்த அரை கிலோமீட்டருக்குள் நதி மாசடைகிறது. காரணம், தென்காசி, சங்கரன்கோவில், ராஜபாளையம் என தமிழ்நாட்டின் வடக்குப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வருகிறார்கள். அவர்களின் பார்வையில் இது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்கிற, பாவங்களை கரைக்கிற தலம். அவ்வளவே.
குளித்து முடித்து உடுத்தியுள்ள துணிகளை ஆத்துல விட்டுட்டுப் போனா பாவங்கள், நோய்கள், கஷ்டங்கள் துணியோட போயிடும்னு நம்பிக்கை. இது கடந்த 15, 20 வருஷமா யாரோ சிலரால் பரப்பப்பட்ட பழக்கம். ஆதாரமே இல்லாத பழக்கங்கள் மதத்தோட பேர்ல பரவும் போது அதுக்கு கேள்வி கேட்க முடியாது. விளைவு சமீபத்தில வந்த ஆய்வு தாமிரபரணி தண்ணி குடிக்கத் தகுதியற்றது என்கிறது.
தாமிரபரணி ஆறு மாதிரியான ஒரு பொதுச் சொத்தின் அழிவுக்கு யார் பொறுப்பேற்பது? ஒருநாள் மட்டும் வந்து பயன்படுத்துற வெளியூர் பக்தர்களா? இந்த நீராதாரத்தை நம்பி வாழும் உள்ளூர் மக்களா? இல்ல இந்த நம்பிக்கைகளை மக்கள் கிட்ட விதைச்ச ஆன்மீக வழிகாட்டிகளா? சட்டத்தை அமல்படுத்த தயங்கும் அரசாங்கமா? ஒரு பொதுச் சொத்தோட அழிவுக்கு பொறுப்புன்றது யார் கையில இருக்கு?’’
செய்தி: மகேஸ்வரி நாகராஜன்
படங்கள்: பரமகுமார்
