இம்பால்: மணிப்பூரில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த அரசுப் பள்ளி கட்டிடத்தை ஜேசிபி இயந்திரம் கொண்டு இடித்த பாஜக எம்எல்ஏ மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மணிப்பூர் மாநிலம் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் குரை ஹைக்ருமாகோங் ஜூனியர் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு வடகிழக்கு சிறப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் நிதியுதவியுடன் புதிய வகுப்பறைகள் மற்றும் கம்ப்யூட்டர் அறை கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த இடம் கட்டுமானத்திற்கு ‘தகுதியற்றது’ என்று குரை தொகுதி பாஜக எம்எல்ஏ எல்.சுசிந்த்ரோ மைதேயி ஏற்கனவே கூறியிருந்ததுடன், கட்டிடத்தை இடிக்கப்போவதாகவும் மிரட்டல் விடுத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 18ம் தேதி அங்கு வந்த ஜேசிபி இயந்திரம், புதிதாகக் கட்டப்பட்ட கட்டிடங்களை இடித்து தள்ளியது. எம்எல்ஏவின் உத்தரவின் பேரிலேயே இந்த சம்பவம் நடந்ததாக தள மேற்பார்வையாளர் கான்சம் சந்தோஷ் மைதேயி என்பவர் போரோம்பட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் மற்றும் அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் எம்எல்ஏ சுசிந்த்ரோ மைதேயி மீது நேற்று போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே சமூக வலைதளங்களில், ‘கட்டிடத்தை இடித்தது நான் தான்’ என்று எம்எல்ஏ பொறுப்பேற்றுக் கொண்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
