புதுடெல்லி: அதிநவீன லாப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை துறையில் உலக அளவில் கோவைக்கும் தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் பெருமை தேடி தந்தவர் ஜெம் மருத்துவமனைகளின் நிறுவனரான டாக்டர் சி.பழனிவேலு. இவரின் வாழ்க்கை வரலாறு புத்தகம், சுயசரிதை ஜூலை 2024ல் ஆங்கிலத்தில் வெளியானது. இதை டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் வெளியிட்டார். பின்னர் இதன் தமிழ் பதிப்பும் பின்நாட்களில் வெளிவந்தது. இதன் இந்தி பதிப்பு கடந்த 19ம் தேதி இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப் ஆப் இந்தியாவில் வைத்து வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வில் மத்திய ரயில்வே இணை அமைச்சர் ரவ்னீத் சிங் கலந்து கொண்டார். தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவர் டாக்டர் அபிஜத் ஷெத் மற்றும் ஆசிரியர் கல்விக்கான பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மையத்தின் நிர்வாக குழு தலைவர் ஜே.எஸ்.ராஜ்புத் மற்றும் ஜெம் மருத்துவமனை குழுமத்தின் மூத்த பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இதை தொடர்ந்து துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: பல ஆண்டுகால உழைப்பிற்குப் பிறகு, டாக்டர் சி.பழனிவேலு தனது சுயசரிதையை வெற்றிகரமாக எழுதினார், அதற்கு ‘கட்ஸ்’ என்று பொருத்தமாகப் பெயரிடப்பட்டுள்ளது. டாக்டர் சி.பழனிவேலுவின் சுயசரிதை அவரது வாழ்க்கையின் ஆரம்பகால போராட்டங்கள் முதல் அவரது தொழில் வாழ்க்கையில் அவர் அடைந்த குறிப்பிடத்தக்க சாதனைகள் வரையிலான பயணத்தின் ஒரு நெகிழ்ச்சியான பதிவாகும். தைரியம், விடாமுயற்சி மற்றும் சிறந்து விளங்குவதற்கான இடைவிடாத தேடல் ஆகிய அவரது பாதையை வழிநடத்திய ஆழமான மதிப்புகளை வெளிப்படுத்துகிறது.
பெரிய கனவுகளுடன் இருந்த ஒரு சிறுவன், பல சவால்களை கடந்து, பள்ளி கல்வி, உயர் கல்வி, மருத்துவ கல்வி கற்று லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சையில் தனது கண்டுபிடிப்புகள் மூலம் பல லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய ஒரு முன்னோடி அறுவை சிகிச்சை நிபுணராக மாறிய மாற்றத்தை இந்த புத்தகம் விவரிக்கிறது. தொலைதூரப் பகுதிகளில் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கும், குறைந்த செலவிலான அறுவை சிகிச்சை நுட்பங்களை உருவாக்குவதற்கும் டாக்டர் பழனிவேலு மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியது.
இந்த புத்தகம் வரவிருக்கும் தலைமுறையினரை தைரியமாகக் கனவு காணவும், நேர்மையுடன் உழைக்கவும், சமூகத்திற்கு தன்னலமின்றி சேவை செய்யவும் தூண்டும். இவ்வாறு அவர் பேசினார். டாக்டர் சி.பழனிவேலு பேசுகையில், ‘‘இந்த புத்தகம் ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்வதற்கு அவசியமான, நான் நம்பும் கொள்கைகள் மற்றும் நற்பண்புகளின் தொகுப்பாகும். எனது இலக்கு அறுவை சிகிச்சைகளைச் செய்வது மட்டுமல்ல, வாழ்க்கையை மாற்றுவதுமாகும். இந்த புத்தகத்தின் மூலம், எனது விடாமுயற்சியின் பயணத்தைப் பதிவு செய்ய முயற்சித்துள்ளேன். மேலும் பெரிய கனவு காண துணியும் எவருக்கும் இது உத்வேகமளிக்கும் என்று நம்புகிறேன்’’ என்றார்.
