அனைத்து அதிகாரத்தையும் குவித்து ஏழைகளின் நலத்திட்டங்களை பலவீனப்படுத்த மோடி முயற்சி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ரேபரேலி: உ.பி மாநிலம் ரேபரேலியில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று பேசுகையில்,‘‘ காங்கிரஸ் ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட 100 நாள் வேலை திட்டம், லட்சக்கணக்கான மக்களை வறுமையிலிருந்து மீள உதவியது. கிராமப்புற உள்கட்டமைப்பை வலுப்படுத்தியது மற்றும் வேலைவாய்ப்புக்கான உத்தரவாதத்தை வழங்கியது. காந்தியின் பெயரை நீக்குவது ஒரு அவமானமாகும். முக்கிய பிரச்னை என்னவென்றால், இந்தத் திட்டத்தின் மூலம் ஏழைகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு அரசாங்கத்தால் பறிக்கப்படுகிறது. தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏழைகளுக்கான நிதியை அதானி மற்றும் அம்பானி போன்ற பெரிய தொழிலதிபர்களுக்கு திருப்பிவிடுவதற்காக, அரசாங்கம் திட்டமிட்டு இதை செய்கிறது. திட்டத்தை வெளிப்படையாக முடிவுக்குக் கொண்டுவர முடியாது. எனவே அவர்கள் அதை பலவீனப்படுத்துகிறார்கள். வேலை வாய்ப்பு திட்டத்தை பாதுகாக்கவும் வகையில் நாடு தழுவிய இயக்கத்தைத் காங்கிரஸ் தொடங்கியுள்ளது’’ என்றார்.

* பெரோஸ் காந்தியின் டிரைவிங் லைசென்ஸ்
ராகுல் காந்தியின் தாத்தா பெரோஸ் காந்தியின் டிரைவிங் லைசென்ஸ் பல ஆண்டுகளுக்கு முன் தொலைந்து போனது. இந்த நிலையில் நேற்று ஒரு விழாவில் பங்கேற்ற ராகுல் காந்தியிடம் விகாஸ் சிங் என்பவர் அதை ஒப்படைத்தார். விகாஸ் சிங்,‘‘ பல ஆண்டுகளுக்கு முன் ஒரு நிகழ்ச்சியின் போது கீழே கிடந்த டிரைவிங் லைசென்ஸை எடுத்த எனது தாத்தா பல ஆண்டுகளாக தன் வசம் வைத்திருந்தார். ராகுல் காந்தி வருகிறார் என்று கேள்விப்பட்டதும் அதை அவரிடம் ஒப்படைக்க முடிவு செய்தோம்’’ என்றார்.

Related Stories: