சபரிமலை தங்கம் திருட்டு சென்னை உள்பட 21 இடங்களில் அமலாக்கத்துறை திடீர் சோதனை

திருவனந்தபுரம்: சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் வீடு, அலுவலகங்களில் இன்று அதிகாலை முதல் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை மற்றும் கர்நாடகா, கேரளாவிலும் இந்த சோதனை ஒரே சமயத்தில் நடைபெற்று வருகிறது. சபரிமலை தங்கம் திருட்டு வழக்கை கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது.

இது தொடர்பாக குற்றப்பிரிவு ஏடிஜிபி வெங்கடேஷ் தலைமையில் 2 எஸ்பிக்கள் அடங்கிய குழு 2 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இந்த வழக்குகளில் சபரிமலை மூத்த தந்திரி கண்டரர் ராஜீவரர், திருவிதாங்கூர் தேவசம் போர்டின் 2 முன்னாள் தலைவர்கள், தங்கத் தகடுகள் பழுதுபார்க்கப்பட்ட சென்னை அம்பத்தூர் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி பங்கஜ் பண்டாரி உள்பட 11 பேரை கைது செய்துள்ளது. இவர்கள் அனைவரும் தற்போது சிறையில் உள்ளனர்.

இந்த வழக்கில் கேரள உயர் நீதிமன்றம் மிக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வழக்கு விசாரணை குறித்த விவரங்களை நேரடியாக தங்களிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்று சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய, 2019ம் ஆண்டு தேவசம் போர்டின் உறுப்பினராக இருந்த சங்கரதாசை சிறப்பு புலனாய்வுக் குழு சமீபத்தில் கைது செய்தது.

இவர் கேரள போலீஸ் டிஐஜியான ஹரிசங்கரின் தந்தை ஆவார். சில தினங்களுக்கு முன் இவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். போலீஸ் அதிகாரியின் மகன் என்பதால்தான் சங்கரதாசை கைது செய்யாமல் இருக்கிறீர்களா என்று சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. சங்கரதாஸ் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருப்பதாக சிறப்பு புலனாய்வுக் குழு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

மருத்துவமனையில் இருந்தாலும் அவரை கைது செய்தே ஆக வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கடுமையான உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து சங்கரதாசை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே நீதிமன்ற உத்தரவின்பேரில் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையம் நடத்திய பரிசோதனையில் சபரிமலையில் தங்கம் திருடப்பட்டது உண்மைதான் என தெரியவந்தது. இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் சபரிமலையில் தற்போது இருப்பது ஏற்கனவே இருந்த ஒரிஜினல் தங்கம் தானா என்பது குறித்தும் சில விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இந்த அறிக்கையை நேற்று பரிசீலித்த கேரள உயர் நீதிமன்றம், சபரிமலையில் தற்போது இருப்பது ஒரிஜினல் தங்கம் தானா என்பதை உறுதி செய்ய இன்று மீண்டும் நேரடியாக சபரிமலையில் பரிசோதனை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு உத்தரவிட்டது.

இதற்கிடையே தங்கம் திருட்டு தொடர்பாக அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. தங்கம் திருட்டில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்திருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. மேலும் இதில் கருப்புப் பணம் புழக்கத்தில் விடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்தது.

இந்நிலையில் அமலாக்கத்துறை இன்று அதிகாலை முதல் தமிழ்நாட்டில் சென்னை, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 21 இடங்களில் ஒரே சமயத்தில் அதிரடி சோதனை நடத்தி வருகிறது. சென்னை அம்பத்தூரில் உள்ள ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பங்கஜ் பண்டாரியின் வீடு, அலுவலகம் மற்றும் சபரிமலை தங்கத்தை வாங்கிய கர்நாடக மாநிலம் பெல்லாரியை சேர்ந்த கோவர்தனின் வீடு, கேரளாவில் முன்னாள் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர்களான பத்மகுமார், வாசு ஆகியோரின் வீடுகள் உள்பட 21 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

Related Stories: