டெல்லி: மின் விநியோகத்தை தனியர்களுக்கு வகை செய்யும் மின்சார சட்டத்திருத்த மசோதாவை பார்ச்சட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள மின் விநியோகத்தை தனியாருக்கு அளிக்கும் வகையில் சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு தயாரித்துள்ளது. மின் விநியோகத்தை தனியார் நிறுவனங்களுக்கு அளித்தால் மாநில மின்வாரியங்களின் அதிகாரமும், வருவாயும் பாதிக்கப்படும் என்பதால், இந்த சட்டத் திருத்தத்திற்கு மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் விவசாயம் மற்றும் வீட்டு உபயோகத்திற்கான இலவச மின்சாரம், மானியங்கள் போன்றவை தனியார்மயமாக்கலால் பாதிக்கப்படும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாற்றியுள்ளனர். அத்துடன் மின் விநியோக உரிமையை பெரும் தனியார் நிறுவனங்கள் லாப நோக்கத்துடன் செயல்பட்டு, நுகர்வோரின் நலன்களைப் புறக்கணிக்கும் என்ற விமர்சனத்தையும் எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ளனர். இந்த சட்டத் திருத்த மசோதாவை கடந்த குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டது. ஆனால் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு மற்றும் போராட்டங்கள் காரணமாக மசோதா தாக்கல் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
