கூவம் ஆற்றில் கிடந்த 50க்கும் மேற்பட்ட சாமி சிலைகள் மீட்பு: வருவாய்த்துறையினர் விசாரணை

 

சென்னை: கடம்பத்தூர் ஒன்றியம் பிஞ்சிவாக்கம் கிராமத்தின் வழியாக செல்லும் கூவம் ஆற்றில் 50க்கும் மேற்பட்ட சாமி சிலைகளை அப்பகுதி இளைஞர்கள் மீட்டு வருவாய்த் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம், பிஞ்சிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி (30). இவர் நேற்று காலை பிஞ்சிவாக்கம் கிராமம் வழியாக செல்லும் கூவம் ஆற்றங்கரையோரம் நடந்து சென்றுள்ளார். அப்போது அவர் ஆற்றில் இறங்கியுள்ளார். அங்கு ஏராளமான கற்சிலைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சிடையந்த அவர், இதுகுறித்து நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து அவரது நண்பர்கள் 10 பேர் உடனடியாக கூவம் ஆற்றுப்பகுதிக்கு வந்து பார்த்தனர். மேலும் அனைவரும் ஆற்றில் இறங்கி தேடத் தொடங்கினர். அப்போது அங்கு விநாயகர், முருகன், ஐயப்பன், பைரவர், நாரதர், நாகம்மன், வாசுகி உள்பட 50க்கும் மேற்பட்ட சாமி கற்சிலைகளை கண்டெடுத்தனர். பின்னர் மீட்கப்பட்ட கற்சிலைகளை ஆற்று பகுதியில் வரிசைப்படுத்தி வைத்தனர்.

இந்த கற்சிலைகள் கண்டெடுத்தது குறித்து தகவலறிந்த பிஞ்சிவாக்கம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கற்சிலைகளை பார்வையிட்டு சென்றனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் பாஸ்கரன் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். மாவட்ட கலெக்டர் பிரதாப் உத்தரவின்பேரில் திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், வட்டாட்சியர் எஸ்.பாலாஜி மற்றும் கடம்பத்தூர் போலீசார், வருவாய்த் துறையினர் பிஞ்சிவாக்கம் கிராம ஆற்றுப்பகுதிக்கு விரைந்து சென்றனர்.

தொடர்ந்து, அனைத்து சிலைகளையும் வருவாய்த் துறையினர் மீட்டு திருவள்ளூர் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் எங்கள் கிராமத்திற்கு சிலைகள் வேண்டுமென கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் அலுவலகத்திற்கு வந்து கடிதம் எழுதிக் கொடுங்கள், மாவட்ட கலெக்டரிடம் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

இந்த ஆற்றுப் பகுதியில் தடுப்பணை இருப்பதால் சிலைகள் நீரில் அடித்து வர வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் சில சிலைகள் சேதமடைந்து காணப்படுவதால் யாரேனும் எடுத்து வந்து இங்கு போட்டார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருவதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Related Stories: