அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் தமிழகத்தில் கல்வி தரம் பற்றி ஆளுநர் ரவி சர்ச்சை பேச்சு

சென்னை: சென்னை சோழிங்கநல்லூரில் நடைபெற்ற கருத்தரங்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி, கலந்துகொண்டு பேசுகையில்,‘தமிழகத்தில் இருந்து ஆண்டுக்கு சுமார் 2 லட்சம் பொறியாளர்கள் படித்துவிட்டு வெளியே வருகிறார்கள். அதேபோல நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிகமாக பிஎச்டி முடிக்கிறார்கள். தமிழ்நாட்டில் கல்வியின் தரம் என்பது போதுமான அளவில் இல்லை. உயர்நிலை பள்ளி மாணவர்கள் 2 வகுப்பு பாடங்களை படிக்க முடியாத நிலையில் உள்ளனர். பொறியியல் கல்வி முடித்த மாணவர்கள் பொறியாளருக்கான தகுதி வாய்ந்தவர்களாக இருப்பதில்லை.

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் 45 சதவீதம் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. ஏற்கனவே, பணியாற்றும் பேராசிரியர்களில் பலரும் போதிய தகுதி இல்லாதவர்களாக இருக்கிறார்கள்,’என்றார். தமிழகத்தின் ஆளுநராக ஆர் என் ரவி பொறுப்பேற்றது முதல் தமிழகத்தை பற்றியும், தமிழர்களை பற்றியும் குறைத்து பேசி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். கல்வியின் தரம் மோசமாக இருக்கிறது என்று அவர் கூறும் நிலையில், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் கல்வி சிறப்பாக உள்ளது என்பதுதான் உண்மை.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் இந்த 4 ஆண்டுகளில் கல்விக்காக பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்ததால் சிறந்த தரமான பள்ளிக்கல்வியை வழங்குவதில் இந்திய அளவில் தமிழகம் சிறந்து விளங்கி வருவதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கு உதாரணமாக, அரசு பள்ளிகளில் படிக்கும் 16.7 லட்சம் மாணவ – மாணவியர்கள் பயன்பெறும் வகையில் 22,931 திறன்மிகு வகுப்பறை, இணைய வசதி, புதிய கட்டடங்கள், ஆசிரியர்கள் நியமனம் உள்ளிட்டவை விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

மேலும், 79,729 இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.81 கோடியில் கைக்கணினி, அரசு நடுநிலை, உயர்நிலை மேல்நிலை பள்ளிகளில் 8,209 உயர் தொழில்நுட்ப ஆய்வகம் போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளதால் அரசுப் பள்ளி மாணவர்கள் உயர்கல்வி மற்றும் தொழில்முறை படிப்புகளில் அதிக அளவில் சேர்ந்துள்ளனர். ‘நான் முதல்வன்’ திட்டம் மூலம் கல்வி உதவி தொகையுடன் பயிற்சி, புதுமை பெண் திட்டம் மூலம் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1000, தமிழ் புதல்வன் திட்டம் மூலம் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை, ஜேஇஇ, நீட், க்ளாட் மற்றும் கியூட் போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்களுக்கு முறையாக பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. பல்வேறு திட்டங்களால் தமிழகம் இந்தியாவிலேயே கல்வியில் சிறந்த மாநிலமாக விளங்கி வருகிறது என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: