சென்னை: இந்திய மொழிகளில் வெளியாகின்ற, தலைசிறந்த இலக்கிய படைப்புகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில், ஆண்டுதோறும் தேசிய அளவில் ‘செம்மொழி இலக்கிய விருது’ வழங்கப்படும். விருதுடன் தலா 5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்படும். சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா – 2026 நிறைவு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது: மனித இனம் தன்னுடைய சிந்தனைகளை, தான் சேர்த்த அறிவுச் செல்வத்தை, பிறருக்கும், அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கொண்டு சேர்க்கும் கருவிதான், புத்தகங்கள். வாசிப்பு மூலமாக, தமிழ்நாட்டில் இருக்கின்ற ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும் என்று, ஏராளமான முன்னெடுப்புகளை நம்முடைய திராவிட மாடல் அரசு சார்பில் எடுத்து செய்து கொண்டிருக்கிறோம்.
அதில் முக்கியமானது தான், புத்தகத் திருவிழாக்கள். எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள், வாசகர்கள் என்று எல்லோருக்குமான உறவுப் பாலமாக, இந்த புத்தகத் திருவிழாக்களை சிறப்பாக நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். 102 நாடுகளின் பங்கேற்போடு சிந்தனையின் ஊற்றாக, பண்பாட்டின் கருவூலமாக, அறிவுப் பரிமாற்றத்தின் அடித்தளமாக, இந்த பன்னாட்டு புத்தகத் திருவிழா நிறைவடைந்ததில் தமிழ்நாடு முதலமைச்சராக மட்டுமல்லாமல், புத்தகத்தின் ஆர்வலனாகவும் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அதுவும் சர்வதேச புக்கர் பரிசை வென்ற கன்னட பெண் எழுத்தாளர் மரியாதைக்குரிய பானு முஷ்டாக் இந்த மேடையில் இருப்பது என்னுடைய மகிழ்ச்சியை மேலும் கூட்டுகிறது.
இந்தப் புத்தகத் திருவிழாவில், நிறைய அறிவார்ந்த, இக்காலத்துக்கு அவசியமான உரையாடல்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதைப் பார்த்து நான் பெருமைப்பட்டேன். அதை பொதுமக்களிடமும் பகிர்ந்து கொண்டு, அவர்களை இந்தப் புத்தகத் திருவிழாவை நோக்கி அழைத்துக் கொண்டு வரவேண்டும் என்பதுதான் – “ஏ.ஐ. – அலாவுதீன் அற்புத விளக்கா? டிரோஜன் குதிரையா?” – “புத்தகங்களின் எதிர்காலம் குறித்த பிரெஞ்சு பார்வை” – “ஒடுக்கப்பட்ட மக்களின் இலக்கியம்” – “மொழிபெயர்ப்பாளர், மொழிபெயர்ப்பு சார்ந்த சவால்கள்” – “ரீல்ஸ் யுகத்தில் இலக்கியம் கவனம் பெறுவதில் உள்ள சவால்கள்” – “பெண் இலக்கியம்சார் சவால்கள்“ -இப்படி சுவாரசியமான பல பொருட்களில் உள்ள உரையாடல்கள் நடத்துகிறீர்கள் என்று என்னுடைய சமூக வலைத்தளப் பக்கங்களிலும் ‘ஷேர்’ செய்தேன். அதுவும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆளுமைகளின், இந்திய, வெளிநாட்டு ஆளுமைகளும் சேர்ந்து பேசியது, ஒரு பரந்து விரிந்த பார்வையை எல்லோருக்கும் வழங்கியிருக்கும் என்று நான் நம்புகிறேன்.
உலகத்தரம் வாய்ந்த அறிவியல் மற்றும் இலக்கியப் படைப்புகள், எளிய தமிழில், நம்முடைய கிராமத்து மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும். இதற்காகவே நம்முடைய அரசு, ‘தமிழ்நாடு மொழிபெயர்ப்பு முகமை’ மூலம் பல கோடி ரூபாய் நிதியை ஒதுக்கித் தந்து, கடந்த 3 ஆண்டுகளில், நூற்றுக்கணக்கான நூல்கள் இதன் மூலமாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இந்தப் புத்தகத் திருவிழாவில் நடைபெறும் ‘பதிப்புரிமைப் பரிமாற்றம்’ வெறும் வணிகம் கிடையாது; இரு மொழிகளுக்கு இடையே நடைபெறுகின்ற பண்பாட்டுக் கைக்குலுக்கல். செம்மொழியான தமிழின் சங்க இலக்கியங்கள் முதல் நவீன இலக்கியங்கள் வரை உலக மக்களுக்கு சென்று சேரவேண்டும். இந்த நிலப்பரப்பிலிருந்து எவ்வளவு ஆழமான, பரந்த சிந்தனை கொண்ட கருத்துக்கள், இலக்கிய, இலக்கண மரபுகள் உருவாகியிருக்கிறது என்று நாம் உணர்த்த வேண்டும்.
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மூலமாக, சிறந்த தமிழ்ப் படைப்புகளை ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன் மற்றும் ஸ்பானிஷ் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மொழிகளில், மொழிபெயர்க்க நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறோம். கி.மி. கோலோச்சும் இந்த காலத்தில், புத்தகங்களையும், நவீனத் தொழில்நுட்பத்தையும் இணைக்க வேண்டிய அவசியத்தையும் எடுத்துகாட்டுவதாக இந்த அரங்கம் சிறப்பாக அமைந்திருக்கிறது. தமிழ்நாடு என்பது நீங்கள் தொழில் முதலீடு செய்ய மட்டும் உகந்த மாநிலம் இல்லை, அறிவைப் பகிர்ந்து கொள்வதற்கும் மிகச் சிறந்த மாநிலம்.
கீழடி முதல் பொருநை வரை கண்டெடுத்த தொல்லியல் சான்றுகளை பாருங்கள், தமிழ்ச் சமூகத்தின் அறிவு மரபு எப்படிப்பட்டது என்பது அப்போது புரியும். உலக நாடுகளின் சிறந்த படைப்புகளைத் தமிழில் கொண்டு வாருங்கள், அதேபோல, மனிதநேயத்தையும், சமூகநீதியையும் பேசுகின்ற எங்கள் திராவிடக் கருத்தியல் இலக்கியங்களையும் உங்கள் நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்துங்கள், எழுத்தாளர்கள் உலகை வெல்வதை பெருமிதத்தோடு எதிர்நோக்கி அனைவரும் காத்திருப்போம்.
மொழி என்பது பிரிக்கக்கூடிய சுவர் இல்லை, அது உலக மக்களை இணைக்கும் பாலம். புத்தகங்கள் வெறும் பேப்பர் கிடையாது! அவை ஒரு தலைமுறை, மற்றொரு தலைமுறைக்கு விட்டுச் செல்லும் அறிவுச் சொத்து. எனது அன்பிற்குரிய மாணவர்களே, இளைஞர்களே! ஒரு புத்தகத்தைத் திறப்பவர், உலகத்தின் ஜன்னலைத் திறக்கிறார். ஒரு புத்தகத்தை வாசிப்பவர், ஆயிரம் மனிதர்களின் வாழ்க்கையை வாழ்கிறார். நீங்கள் வாசிக்கின்ற ஒவ்வொரு பக்கமும் உங்கள் தன்னம்பிக்கையை வளர்க்கும். அறிவார்ந்த சமூகத்தைப் படைப்போம்! ‘உலகை தமிழுக்கும், தமிழை உலகுக்கும் கொண்டு சேர்ப்போம்’ என்று சொல்வோம்.
2025ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருதுகள் இறுதி செய்யப்பட்டு, அறிவிக்கப்பட இருந்த நிலையில், ஒன்றிய அரசின் கலாச்சாரத் துறை தலையீட்டால், விருது அறிவிக்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இனி, அது நடக்குமா? என்றும் தெரியவில்லை. கலை இலக்கிய விருதுகளில் கூட அரசியல் குறுக்கீடுகள் செய்வது ஆபத்தானது. இப்படி ஒரு சூழலில், தமிழ்நாடு அரசு ஆக்கப்பூர்வமான, உரிய எதிர்வினையை ஆற்றவேண்டும் என்று, பல்வேறு எழுத்தாளர்களும், கலை இலக்கிய அமைப்புகளைச் சார்ந்தோரும் என்னிடம் கோரிக்கை விடுத்திருந்தார்கள். இது, காலத்தின் தேவை என்று நாங்களும் உணர்ந்தே இருக்கிறோம்.
குறிப்பிட்ட இந்திய மொழிகளில் வெளியாகின்ற, தலைசிறந்த இலக்கிய படைப்புகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில், ஆண்டுதோறும் தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்படும். முதல்கட்டமாக, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம் மற்றும் மராட்டிய மொழிகளில் வெளியாகின்ற தலைசிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் ‘செம்மொழி இலக்கிய விருது’ என்ற பெயரில் அந்த விருது வழங்கப்படும். விருதுடன், தலா 5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்படும்.
படைப்புகளின் இலக்கிய தரத்தையும், வெளிப்படையான தேர்வு முறையையும் உறுதி செய்யும் விதமாக புகழ்பெற்ற எழுத்தாளர்கள், விருதாளர்கள் அடங்கிய குழு ஒவ்வொரு மொழிக்கும் தனியே அமைக்கப்படும். புரவலர் பணியை தமிழ்நாடு அரசு மனநிறைவோடு மேற்கொள்ளும். அடுத்து அமையப்போவதும் திராவிட மாடல் 2.0 ஆட்சிதான். அப்போது, இதைவிட பெரிய அளவில், உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில், இந்த பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவை நடத்துவோம். தமிழ்நாடு முழுவதும் மேலும் பல பிரமாண்ட நூலகங்களை அறிவுக் கோயில்களாக எழுப்புவோம். அறிவுத்தீ வளர்ப்போம், வெல்வோம் ஒன்றாக. இவ்வாறு அவர் பேசினார்.
* தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம் மற்றும் மராட்டிய மொழிகளில் வெளியாகின்ற தலைசிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் ‘செம்மொழி இலக்கிய விருது’ வழங்கப்படும்.
* விருதுடன், தலா 5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்படும்.
* புகழ்பெற்ற எழுத்தாளர்கள், விருதாளர்கள் அடங்கிய குழு ஒவ்வொரு மொழிக்கும் தனியே அமைக்கப்படும்.
* ‘சாகித்ய அகாடமி அறிவிக்காவிட்டால் என்ன…’
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளம் பதிவில் கூறியிருப்பதாவது: இலக்கியங்களுக்கு எல்லை இல்லை; அவை நம்மை இணைக்கும் பாலங்கள் என எடுத்துக்காட்டும் சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவின் நிறைவு விழாவில் கலந்துகொண்டு மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டேன். ஒன்றிய அரசின் அரசியல் குறுக்கீடுகளால், குறுகிய நோக்கத்தால் இந்த ஆண்டுக்கான சாகித்ய அகடாமி விருது அறிவிக்கப்படாமல் உள்ளது. இதற்குத் தக்க எதிர்வினையாக, இந்திய மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு, இனித் தமிழ்நாடு அரசே ஆண்டுதோறும் ‘செம்மொழி இலக்கிய விருது’ வழங்கும். திராவிடத்துக்கே உரிய முற்போக்கு விமர்சனப் பார்வையை முன்னிறுத்திப் பேசியதோடு, வாசிப்பினைக் கொள்கைச் செயல்பாடாக முன்னெடுக்கும் நமது திராவிட மாடல் அரசின் முயற்சிகளையும் பாராட்டிய InternationalBookerPrize வென்ற எழுத்தாளர் பானு முஷ்டாக்குக்கு எனது நன்றிகள்.
