பொங்கல் விடுமுறை கொண்டாட்டம் களைகட்டியது பொருநை அருங்காட்சியகத்தை கண்டு ரசித்த பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள்

நெல்லை: பொங்கல் பண்டிகை விடுமுறை இன்றுடன் நிறைவு பெறுகிறது. பொங்கலுக்கு மறுதினமான மாட்டு பொங்கல் மற்றும் காணும் பொங்கல் தினங்களில் பெரும்பாலான மக்கள் சுற்றுலா தலங்கள், சினிமா தியேட்டர்கள் என பொழுது போக்க பல்வேறு இடங்களுக்கு செல்வது வழக்கம். நெல்லை மாநகரம் மற்றும் சுற்றுவட்டார மக்களை பொறுத்தவரை இதுநாள் வரை பொங்கல் விடுமுறை தினங்களில் தியேட்டர்கள் அல்லது மாவட்ட அறிவியல் மையத்திற்கு செல்வது வழக்கமாக இருந்தது. இவ்வாண்டு பொருநை அருங்காட்சியகம் திறக்கப்பட்ட பின்னர், அதை பார்வையிட நெல்லை மாவட்ட மக்கள் மட்டுமல்லாது, தூத்துக்குடி, தென்காசி, குமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட மக்களும் இங்கு வந்து செல்கின்றனர்.

பொங்கலுக்கு மறுதினமான மாட்டு பொங்கலன்று மட்டுமே நெல்லை பொருநை அருங்காட்சியகத்தை 11 ஆயிரத்து 686 பேர் பார்வையிட்டு சென்றுள்ளனர். நேற்று முன்தினம் வரை பொருநை அருங்காட்சியத்தை ஒரு லட்சத்து 3 ஆயிரம் பார்வையிட்டு சென்றுள்ளனர். அதன் தொடர்ச்சியாக நேற்றும் பொங்கல் விடுமுறையை ஒட்டி பொருநை அருங்காட்சியகத்தில் மக்கள் கூட்டம் குவிந்தது. தமிழ்நாட்டில் பொருநை ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, துலுக்கர்பட்டி ஆகிய தொல்லியல் தலங்களில் தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட அரிய தொல்பொருட்களை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் பார்வையிட்டு சென்றனர்.

இங்குள்ள ஒவ்வொரு கட்டிடத்தையும் நேற்று காலை முதலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர். இங்கு கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள நவீனத் தொழில்நுட்ப (5டி) தியேட்டர் ஐந்திணைக்கு நபர் ஒருவருக்கு 25 ரூபாயும், (7டி) படகு சிமுலேட்டருக்கு 25 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் கூட்டம் அதிகரித்த போதிலும் அதில் புதுவிதமான அனுபவத்தை பெறுவதற்காக பல மணி நேரம் காத்திருந்து மக்கள் அதனை அனுபவித்து மகிழ்ந்தனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அருங்காட்சியகத்தின் ஒவ்வொரு பகுதிகளிலும் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

தென்மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கூட்டம் கூட்டமாக வந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் அருங்காட்சியகத்தை பார்வையிட்டு மகிழ்ந்தனர். பொங்கல் விடுமுறையை ஒட்டி நெல்லை மாவட்ட அறிவியல் மையத்திலும் ஆண்டுதோறும் கூட்டம் குவிவது வழக்கம். நேற்று முன்தினம் அறிவியல் மையத்திற்கு 2 ஆயிரத்து 383 பேர் அறிவியல் மையத்தை பார்வையிட்ட நிலையில், நேற்று 2500க்கும் மேற்பட்டோர் அறிவியல் மையம் வந்திருந்தனர். அறிவியல் மையத்தில் உள்ள விண்வெளி அரங்கு, விந்தை ஆடிகள், கேளிக்கை அரங்கு ஆகியவற்றில் நேற்று காலை 10 மணி முதலே கூட்டம் அலைமோதியது. பலர் மதிய உணவை கொண்டு அங்கு வந்து பூங்காக்களில் அமர்ந்து சாப்பிட்டு விட்டு, ஓய்வெடுத்துச் சென்றனர். அறிவியல் மைய அரங்குகளில் நேற்று சிறப்பு காட்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பொதுமக்கள் தங்கள் குழந்தைகளோடு அவற்றை கண்டு களித்தனர்.

Related Stories: