அலங்காநல்லூர்: உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று கோலாகலமாக நடந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று வீரர்களை உற்சாகப்படுத்தினர். 19 காளைகளை அடக்கிய வீரருக்கு கார், சிறந்த காளைக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது. பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜன. 15ம் தேதி மதுரை அவனியாபுரம், மாட்டுப்பொங்கல் தினமான நேற்று முன்தினம் பாலமேடுவில் ஜல்லிக்கட்டு நடந்தன. காணும் பொங்கலான நேற்று அலங்காநல்லூரில், உலகப்புகழ் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. போட்டியை அமைச்சர் பி.மூர்த்தி துவக்கி வைத்தார்.
ஜல்லிக்கட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு வீரர்களை உற்சாகப்படுத்தினார். சிறந்த வீரர்கள், காளை உரிமையாளர்களுக்கு தங்க மோதிரம், தங்கக்காசு வழங்கினார். ஜல்லிக்கட்டில் மொத்தம் 495 வீரர்கள் பங்கேற்றனர். 1,002 காளைகள் அவிழ்க்கப்பட்டன. பின்னர் வாடிவாசலில் இருந்து சுற்றுவாரியாக காளைகள் அடுத்தடுத்து அவிழ்த்து விடப்பட்டன. ‘தொட்டுப்பார்’ என ஆக்ரோஷமாக வெளி வந்த காளைகளை, ‘விடமாட்டோம்’ என்ற தீரத்துடன் வீரர்கள் அடக்கினர். 19 காளைகளை அடக்கிய மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த வீரர் கார்த்திக்கு முதல் பரிசாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் பரிசு வழங்கப்பட்டது. மேலும் ரூ.3 லட்சம் காசோலை மற்றும் கன்றுடன் பசு மாடு பரிசாக வழங்கப்பட்டது. 16 காளைகளை அடக்கிய சிவகங்கை பூவந்தியை சேர்ந்த வீரர் அபிசித்தருக்கு 2ம் பரிசாக டூவீலர், ரூ.2 லட்சம் காசோலை வழங்கப்பட்டது.
மதுரை பாசிங்காபுரம் வீரர் ஸ்ரீதர், 11 காளைகளை அடக்கி 3ம் இடத்தை பிடித்து டூவீலருடன் ரூ.1 லட்சம் காசோலை பெற்றார். சிறந்த காளைக்கான முதல் பரிசாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் டிராக்டர் பாலா காளைக்காக வழங்கப்பட்டது. மேலும் இவர் கன்றுடன் பசு மாடும் பரிசு பெற்றார். புதுக்கோட்டை தமிழ்செல்வனின் காளை 2ம் பரிசாக டூவீலரையும், மதுரையை சேர்ந்த கென்னடி காளை 3ம் பரிசாக இ-ஸ்கூட்டரையும் பெற்றன. இதுதவிர வெற்றி பெற்ற வீரர்களுக்கும், காளை உரிமையாளர்களுக்கும் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மிக்சி, கிரைண்டர், கட்டில், மெத்தை, சைக்கிள், தங்கம், வெள்ளிக் காசுகள், பித்தளை, சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன.
போட்டியில் வீரர்கள் 17 பேர், காளை உரிமையாளர்கள் 20 பேர், காவலர்கள் 4, தீயணைப்பு வீரர் ஒருவர், பார்வையாளர்கள் 21 பேர் உட்பட 63 பேர் காயமடைந்தனர். இதில் அலங்காநல்லூரை சேர்ந்த வீரர் காளீஸ்வரனுக்கு மாடு குத்தியதில் குடல் வெளியில் வந்ததால், இவர் உட்பட 21 பேர் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டம், தச்சங்குறிச்சியில் கடந்த 3ம்தேதி இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு நடந்தது. தொடர்ந்து ஆலங்குடி அருகே வன்னியன் விடுதி, குன்றாண்டார்கோவில் மங்கதேவன்பட்டி, கரூர் மாவட்டம் தோகைமலை அருகே ஆர்.டி. மலை, திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த ஆவாரங்காடு ஆகிய இடங்களிலும் நேற்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தன.
* 3 வீரர்கள் தகுதி நீக்கம் ஒரு வீரர் வெளியேற்றம்
ஜல்லிக்கட்டில் வாடிவாசல் பகுதியில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொண்ட 322, 316 மற்றும் 319 ஆகிய சீருடை எண்களை கொண்ட 3 மாடுபிடி வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களது சீருடைகளை போலீசார் திரும்பப் பெற்றனர். இதேபோல் 301 எண் சீருடை அணிந்தவர் ஆள் மாறாட்டம் செய்தது தெரிந்து, சீருடையை பறிமுதல் செய்து போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
பெண் வளர்த்த காளைக்கு பரிசு
* காளைகளை வளர்த்து ஆண்டுதோறும் களம் காணச் செய்யும் மதுரை அனுப்பானடியை சேர்ந்த திவ்யதர்சினியின் காளை களத்தில் விளையாண்டு வெற்றி தட்டி, பரிசு வென்றது.
* 6வது சுற்றின்போது காளை ஒன்று தடுமாறி விழுந்ததில் மைதானத்திலேயே அரை மணி நேரத்திற்கு மேலாக படுத்து விட்டது. ஒலிபெருக்கியில் கால்நடை துறையினர் அழைக்கப்பட்டு, ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது.
* தமிழர்களின் வீரம் வியக்க வைக்கிறது: வெளிநாட்டினர் பெருமிதம்
ஜல்லிக்கட்டை பார்வையிட அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, இஸ்ரேல், பெல்ஜியம், மலேசியா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் சுற்றுலாப்பயணிகள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் என சுமார் 250 பேர், அலங்காநல்லூர் வந்திருந்தனர். இவர்கள் ஜல்லிக்கட்டை கண்டு மெய் சிலிர்த்தனர். சில வெளிநாட்டு பெண்கள் மண் மணக்கும் மதுரை மல்லிகை பூவை தலையில் சூடி வந்திருந்தனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கூறும்போது, ‘‘உயிர் பயமின்றி துணிவோடு காளைகளை எதிர்கொண்டு அடக்கும் தமிழர் வீரம் கண்டு வியப்பாக இருக்கிறது. ஆண்டுதோறும் இந்நிகழ்வை வெளிநாட்டவரும் கண்டு களிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்து வருவதற்கு அரசுக்கும், சுற்றுலாத்துறைக்கும் நன்றி’’ என்றனர்.
* அண்ணாமலை நடிகர் சூரி காளைக்கு பரிசு
பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, நடிகர் சூரி ஆகியோரது காளைகள் மாடு பிடி வீரர்களிடம் பிடிபடாமல் தப்பி ஓடி வெற்றி கண்டு பரிசுகள் பெற்றன.
* முதலமைச்சருக்கு மதுரை எம்பி நன்றி
மதுரை எம்பி சு.வெங்கடேசன் கூறும்போது, ‘‘நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. ஜல்லிக்கட்டில் அதிக காளைகள் பிடிக்கும் வீரர்களுக்கு அரசு வேலை. அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் வீரர்களுக்கான பயிற்சி மையம் மற்றும் நவீன வசதியுடன் கால்நடை சிகிச்சை மையம் அமைத்திட முதலமைச்சர் அறிவித்துள்ளார். இது தேர்தல் கால அறிவிப்பு அல்ல. ஜல்லிக்கட்டு ஆர்வலர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்காண அறிவிப்பு’’ என்றார்.
* முதல்வரின் அறிவிப்பு வரவேற்பிற்கு உரியது: டைரக்டர் அமீர் பாராட்டு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்வையிட்ட இயக்குநர் அமீர் கூறும்போது, ‘‘வீரர்களுக்கு அரசு வேலை, ஜல்லிக்கட்டு பயிற்சி மையம் உள்ளிட்ட முதல்வரின் அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது. தேர்தல் காலம் என்பதால் சினிமா தணிக்கை வாரியம் உள்நோக்கத்துடனும், அதிக வீரியத்துடனும் செயல்படுகிறது. நடிகர் விஜய்க்கு பாஜ நெருக்கடி கொடுக்கிறதா என்பதை அவர் தான் சொல்ல வேண்டும். ஜனநாயகன் படத்திற்கான தடை தொடர்பாக விஜய் அமைதியாக இருப்பது ஆபத்தானது. பெண்களைப் போல் ஆண்களுக்கும் இலவச பஸ் பயணம் என்பது தேர்தல் நேரத்தில் செய்யப்படும் அதிமுகவின் அறிவிப்பு. இது ஏற்புடையது அல்ல’’ என்றார்.
* கம்பு ஊன்றி வந்த முதியவர் காளை வென்றது
ஜல்லிக்கட்டின் 8வது சுற்றில் ஒரு முதியவர் கம்பு ஊன்றியபடி கொண்டு வந்த காளை அவிழ்த்து விடப்பட்ட நிலையில் வெற்றி பெற்றதால், கம்பு ஊன்றியபடியே முதியவர் வந்து பரிசை பெற்றுச் சென்றார். தவெக கொடியுடன் வந்து காளையை வாடிவாசலில் ஒருவர் அவிழ்த்து விட்டார். போட்டியில் கட்சிக் கொடிகளை காட்டி பிரசாரம் செய்வதற்கு நீதிமன்ற தடையிருப்பதால், அவருக்கு பரிசு ஏதும் வழங்காமல் காளையுடன் அனுப்பிவைத்தனர்.
