சென்னை முழுவதும் சீரான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய 98 கி.மீ நீளம் பிரதான சுற்றுக்குழாய் அமைக்கும் திட்டத்திற்கு கொள்கை ஒப்புதல் வழங்கினார் முதலமைச்சர்!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் பெருநகர சென்னையில் பிரதான சுற்றுக்குழாய் (Ring Main) மூலமாக சமமான குடிநீர் வழங்குவதற்கான பணிகள் மற்றும் நெசப்பாக்கம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள மிகவும் பழமையான கழிவுநீர் கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகளுக்கு கொள்கை ஒப்புதல் வழங்கி ஆணையிட்டுள்ளார்கள்.

பெருநகர சென்னையில் பிரதான சுற்றுக்குழாய் (Ring Maln) அமைத்தல்;
பெருநகர சென்னையில் தற்போது மேற்பரப்பு நீராதாரங்கள், நிலத்தடி நீராதாரங்கள் மற்றும் கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்கள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, ஐந்து குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் (WTP) மற்றும் கடல் நீரை குடிநீராக்கும் மூன்று நிலையங்கள் (Desalination plants) மூலமாக பெருநகர சென்னைக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நான்காவது நிலையத்தின் கட்டுமான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தனித்தனியான 8 குடிநீர் நிலையங்களில் இருந்து விநியோக குழாய்கள் (Transmission Main) மூலமாக பல்வேறு குடிநீர் விநியோக நிலையங்களில் (WDS) சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பெறப்பட்டு. மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

சென்னைப் பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மூலம், நாளொன்றுக்கு 1,200 மில்லியன் லிட்டர் குடிநீர், பல்வேறு குடிநீர் விநியோக நிலையங்கள் மூலமாக சென்னையில் உள்ள 85.7 லட்சம் மக்கள் தொகைக்கு 84 குடிநீர் விநியோக அமைப்புகள் மூலம் விநியோகிக்கப்படுகிறது. ஒவ்வொரு நிலையத்திலிருந்தும் குடிநீர் விநியோகம் நகரின் நியமிக்கப்பட்ட பகுதிகளுக்கு பிரதான குழாய்கள் மூலம் தனித்தனியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டான காலங்களில் ஒரு பகுதியின் ஆதாரங்களிலிருந்து உபரிநீர், பற்றாக்குறை உள்ள மற்றொரு ஆதாரத்திற்கு மாற்றமுடியாது.

தற்போதுள்ள குடிநீர் கட்டமைப்பில் உள்ள குறைகளை களைவதற்காக, பெருநகர சென்னையில் பிரதான சுற்று குழாய் (Ring Main) திட்டம் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி பிரதான சுற்று குழாய் (Ring Main), நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நான்காவது நிலையத்தையும் சேர்த்து, ஒன்பது குடிநீராதாரங்களை ஒரு வளையமாக இணைக்கிறது. பிரதான சுற்று குழாய் திட்டம் உந்து நிலையங்கள், செலுத்தும் குழாய்கள் (feeder main), மற்றும் விநியோக குழாய்களை (Transmission Main) உள்ளடக்கியதாகும்.

இத்திட்டத்தில், செலுத்தும் குழாய்கள் (feeder main) மூலமாக ஒன்பது உந்து நிலையங்களிலிருந்து குடிநீர் பெறுவதற்கு, பெருநகர சென்னையச் சுற்றி, 98 கிலோமீட்டர் நீளத்திற்கு தேனிரும்பு (MS) குழாய் கொண்ட பிரதான சுற்றுக்குழாய் உத்தேசிக்கப்பட்டுள்ளது. பிரதான சுற்றுக்குழாயில் இருந்து பெருநகர சென்னை மாநகரின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள 84 குடிநீர் விநியோக நிலையங்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படும். பிரதான சுற்று குழாய் திட்டம், 2057ம் ஆண்டுக்கான இறுதி தேவையை நிறைவு செய்ய, நாளொன்றுக்கு 1762 மில்லியன் லிட்டர் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிரதான சுற்று குழாய் திட்டம், ஒரு நீராதாரத்தில் பற்றாக்குறை ஏற்பட்டாலும் அனைத்து நீரேற்று நிலையங்களிலிருந்தும் சமமான குடிநீர் வழங்குவதை உறுதிசெய்யும். பிரதான சுற்று குழாய் திட்டமானது அழுத்த உணரிகள் (pressure sensors), குடிநீர் தர உணரிகள் (water quality sensors), பாய்வு கட்டுப்பாட்டு வால்வுகள் (flow regulating valves), அழுத்தத்தை ஒழுங்குபடுத்தும் வால்வுகள் போன்ற மேம்பட்ட அளவீடு நுட்பங்கள் (advanced instrumentation) மூலமாக தொடர்ந்து கண்காணிக்கப்படும் மற்றும் Programmable Logic Control System மூலம் ஒழுங்குபடுத்தப்படுகிறது. மேலும் இத்திட்டம், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய தலைமை அலுவலகத்தில் மையமாக அமைக்கப்படவுள்ள SCADA அடிப்படையிலான முதன்மை கட்டுப்பட்டு மையத்தின் (Master Control Centre MCC) மூலம் கண்காணிக்கப்படவுள்ளது.

சென்னை பெருநகர் எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் பிரதான சுற்று குழாய் அமைக்கவும் மற்றும் அதன் 10 ஆண்டுகளுக்கான செயல்பாடு மற்றும் பராமரிப்பு செலவு உட்பட திட்டத்தின் மொத்த செலவு ரூ.3,108.55 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் கொள்கை ஒப்புதல் வழங்கி ஆணையிட்டுள்ளார்கள். இத்திட்டத்தை ஆசிய வளர்ச்சி வங்கியின் (Asian Development Bank) கடனுதவியின் கீழ் நான்கு ஆண்டு ஒப்பந்த காலத்தில் நிறைவேற்றும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

நெசப்பாக்கம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மேம்படுத்தும் பணிகள்;

பெருநகர சென்னை மாநகராட்சியின் கழிவுநீர் கட்டமைப்பு 4,659.00 . நீளமுள்ள கழிவுநீர் சேகரிப்பு குழாய்களை கொண்டுள்ளது. இதன் மூலம் சேகரிக்கப்படும் கழிவுநீர் 356 கழிவுநீர் உந்து நிலையங்களின் வழியாக, 17 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு. சுத்திகரிப்பு செய்யப்பட்டு, நீர்வழிகளில் பாதுகாப்பாக அகற்றப்படுகிறது. சென்னை குடிநீர் வாரியம் 85.70 லட்சம் மக்கள்தொகைக்கு இச்சேவையை வழங்கி வருகிறது. இதுவரை 5,04.118 வீட்டு சேவை இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. நகரத்தின் மொத்த கழிவுநீர் கட்டமைப்பு 7 மண்டலங்களாக செயல்படுகிறது.

சென்னை நகரின் முக்கிய பகுதிகளில் (174 சதுர கி.மீ.) தற்போதுள்ள கழிவுநீர் அமைப்பு சுமார் 40 ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ளது. விரைவான நகரமயமாக்கல், கழிவுநீர் குழாய்கள் அடைப்பு போன்ற காரணங்களால் தற்போதைய மக்கள்தொகையின் கழிவுநீரகற்றல் தேவையை நிறைவு செய்ய இந்த அமைப்பு போதுமானதாக இல்லை. தற்போதுள்ள அமைப்பு பல செயல்பாட்டு சவால்களை எதிர்கொள்கிறது. அதாவது, அடிக்கடி கழிவுநீர் நிரம்பி வழிதல், கழிவுநீர் உந்து குழாய் வெடிப்பு ஏற்படுதல், இதனால் நீர் நிலைகள் மாசுபடுவதுடுடன், பொதுமக்களுக்கு சுகாதாரமற்ற நிலையை ஏற்படுத்துகிறது. எனவே, சென்னை நகரத்தில் முக்கிய பகுதிகளில் உள்ள கழிவு நீர் கட்டமைப்பை படிப்படியாக மேம்படுத்த சென்னை குடிநீர் வாரியம் உத்தேசித்துள்ளது. முதல் கட்டமாக, நெசப்பாக்கம் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தற்போதுள்ள பாதாள சாக்கடை அமைப்பினை மேம்படுத்தும் பணிகள் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

நெசப்பாக்கம் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் (மண்டலம்-IV) என்பது நகரின் தென்மேற்கில் அமைந்துள்ள கழிவு நீர் மேலாண்மை அமைப்பாகும். இது 1974 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த மண்டலத்தில் உருவாகும் கழிவு நீர். சுத்திகரிப்பு மற்றும் அகற்றலுக்காக மொத்தம் 144 MLD கொள்ளளவு கொண்ட நெசப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

தற்போதைய தேவையை நிறைவு செய்யும் வகையில், போதுமான ஈர்ப்பு விசை குழாய் மற்றும் உந்து குழாய்களை மாற்றுதல், கழிவு நீர் உந்து நிலையங்களை மேம்படுத்துதல் மற்றும் உந்து திறனை மேம்படுத்துதல் மூலம் கழிவுநீர் அமைப்பை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நெசப்பாக்கம் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள கழிவுநீர் கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணியின் கீழ் உத்தேசிக்கப்ட்டுள்ள கூறுகள்:
1. 76.96 கிமீ நீளத்திற்கு ஈர்ப்பு விசைக் குழாயை மாற்றுதல் / விரிவுபடுத்துதல் இது மொத்த சேகரிப்பு அமைப்பான 327.48 கிமீ இல் சுமார் 54% ஆகும்.
2. 7,807 இயந்திர துளைகளின் கட்டுமானம், இது மொத்தமுள்ள 13,212 இயந்திர நுழைவாயில்களில் சுமார் 59% ஆகும்.
3. நெசப்பாக்கம் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுமார் 8.27 கி.மீ (16.5%) நீளத்திற்கு உந்து குழாயின் மாற்றுதல் / விரிவாக்கம் செய்தல்.
4. மொத்தமுள்ள 38 கழிவுநீர் உந்து நிலையங்களில் 6 நிலையங்களை மேம்படுத்துதல் மற்றும் கட்டமைப்பு ரீதியாக சேதமடைந்த கழிவுநீர் உந்து நிலையங்களை மறுசீரமைப்பு செய்தல்.
5. சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் கழிவுநீர்க் கட்டமைப்பின் செயல்பாடுகளைக் கண்காணிக்க SCADA அமைத்தல்.
6. அனைத்து கழிவுநீர் உந்து நிலையங்களிலும் துர்நாற்றக் கட்டுப்பாட்டு அமைப்பை நிறுவுதல்.
7. குடியிருப்பாளர்கள் / வாகன இயக்கங்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைப்பதற்கு சாலைகளை தோண்டாமல் குழாய் பதிக்கும் தொழில்நுட்ப முறையில் (Trenchless Method) மூலம் கழிவுநீர் குழாய்களை 3.5 மீட்டர் அகலம் வரை உள்ள சாலைகளில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இப்பணிகளின் மதிப்பிடப்பட்ட திட்டச் செலவு ரூ.689.40 கோடி. இந்த பணிகளை நான்கு தொகுப்புகளாக 3 வருட ஒப்பந்தக் காலத்துடன் ஆசிய வளர்ச்சி வங்கியின் (Asian Development Bank) கடனுதவியுடன் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் நெசப்பாக்கம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள சுமார் 1.16 லட்சம் குடும்பங்களுக்கு பயனளிக்கும். இத்திட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் கொள்கை ஒப்புதல் வழங்கி ஆணையிட்டுள்ளார்கள்.
எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையிலான (Futuristic) பிரதான சுற்று குழாய் திட்டமானது. பெருநகர சென்னை மாநகரின் குடிநீர் விநியோக கட்டமைப்பின் மேம்பாட்டில் ஒரு மைல்கல்லாக அமையும் அதேவேளையில், நெசப்பாக்கம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு உத்தேசிக்கப்பட்டுள்ள கழிவுநீர் அமைப்பு பணிகள், சென்னை மாநகரின் கழிவுநீரகற்றல் கட்டமைப்பினை மேலும் வலுப்பெறச் செய்யும் வகையில் அமையும்.

Related Stories: