தொழில்நுட்பக் கோளாறால் உலகம் முழுவதும் ‘X’ (ட்விட்டர்) தளம் முடக்கம்: ஆயிரக்கணக்கான பயனர்கள் அவதி

டெல்லி: பிரபல சமூக ஊடகமான ‘எக்ஸ்’ (ட்விட்டர்) தளம் இன்று சர்வதேச அளவில் பெரும் தொழில்நுட்பக் கோளாறுகளைச் சந்தித்தது. இணையதளச் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் ‘டவுன்டிடெக்டர்’ (Downdetector) அமைப்பின் தகவலின்படி, ஜனவரி 13-ஆம் தேதி(இன்று) மாலை சுமார் 7:49 மணி அளவில் எக்ஸ் தளத்தைப் பயன்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்படத் தொடங்கின. இந்தியாவில் குறுகிய நேரத்தில் 1,869-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகின.

இந்த முடக்கத்தினால் எக்ஸ் செயலியைப் பயன்படுத்திய 49 சதவீத பயனர்களும், கணினி வழியாக இணையதளத்தைப் பயன்படுத்திய 40 சதவீத பயனர்களும் பாதிக்கப்பட்டனர். மேலும், 11 சதவீத பயனர்கள் சர்வர் இணைப்புச் சிக்கல்களைச் சந்தித்தனர். இதனால் புதிய பதிவுகளைப் பதிவிடுவதிலும், தகவல்களைப் பரிமாறிக் கொள்வதிலும் நீண்ட நேரம் தடை நீடித்தது.

எக்ஸ் தளம் பாதிப்பு இந்தியாவோடு நிற்காமல் அமெரிக்கா போன்ற நாடுகளையும் உலுக்கியது. அங்கு சுமார் 24,000-க்கும் மேற்பட்டோர் எக்ஸ் தளம் முடங்கியதாகப் புகார் அளித்துள்ளனர். எக்ஸ் தளம் முடங்கியது குறித்து அந்த நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமான எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை என்றாலும், தற்போது சேவைகள் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றன.

Related Stories: